ஜுன் 21 – உலக இசை தினம்
‘இசை எங்கிருந்து வருகிறது’ என்ற கேள்வியோடு ‘கிங்’ படத்தில் ஒரு நகைச்சுவைக் காட்சி வரும். ‘இசை இயற்கையில இருந்து வருது’ என்ற பதிலைச் சொல்லிவிட்டு, வேறோரு திசை நோக்கி அக்காட்சி நகரும்.
முதலும் இல்லாமல் முடிவும் இல்லாமல் அந்த பதில் இருப்பது, அதனை ஆராய்ந்து பார்த்தால் மட்டுமே தெரிய வரும். தனது திரையிசையால் நம்மைத் தாலாட்டுபவர்களில் ஒருவரான இசையமைப்பாளர் இளையராஜா கூட, நெடுங்காலமாக இந்த பதிலைத்தான் சொல்லி வருகிறார்.
இசை என்பது இயற்கையில் அடங்கியிருக்கிறது. திறமைமிக்க இசைக்கலைஞரால் அதற்கொரு உருவம் தரப்பட்டு, காற்றில் நடமாட விடப்படுகிறது. ரசிக்கத்தக்க ‘ரொமாண்டிசைசேஷன்’ ஆக தோன்றினாலும், அந்தப் பதில் நம்மில் பலரைத் திருப்திப்படுத்துகிற ஒன்று என்பதே உண்மை.
இயற்கையில் இசை!
நாரில் குறிப்பிட்ட இடைவெளியில் கட்டப்படும் மலர் போல, கால இடைவெளிக்குள் நிரப்பப்படும் ஒலிகள் நயமிக்க இசையாக மாறும் என்பதே இன்றுவரை நியதியாக இருந்து வருகிறது. அது ஒலிக்கும் தொனி நமக்குப் பிடித்துப்போனால் இசையாகத் தெரியும்; இல்லாவிட்டால், பெருஞ்சத்தமாகத்தான் இருக்கும்.
முந்தைய தலைமுறையும் இன்றைய தலைமுறையும் இசை ரசனைக்காக அடித்துக்கொள்வதன் பின்னணியில் இந்த முரணே இருந்து வருகிறது.
பெரும் கலைஞர்கள் என்றில்லை, சாதாரண மனிதர்கள் கூட தம்மளவில் இசையை உருவாக்கித்தான் வருகின்றனர்.
மனதுக்குள் அல்லது வாய்விட்டு முனுமுனுக்கும்போது, சிலர் சுயமாக இசைக்கோர்வையொன்றை உருவாக்குவதுண்டு.
அதனைச் சிறப்பாக முன்னெடுத்த சிலர், அந்த ஒலிக்குறிப்புகளுடன் வார்த்தைகளையும் சேர்த்தபோது உருவானவையே வழிவழியாக நம்மைத் தொடர்ந்துவரும் நாட்டுப்புறப் பாடல்கள் என்பது என் எண்ணம்.
காலை வேளையில் கூவும் குயில் நம்மை ஒருவித கிறக்கத்திற்கு ஆளாக்கும். அதன் குரலில் இருக்கும் லயம், நம் ரசித்து நோக்கினால் இசையாகத் தெரியும்.
விண்ணில் இருந்து சொட்டும் மழைத்துளி, குறிப்பிட்ட கதியில் வீசும் தென்றல், ஏற்ற இறக்கங்களோடு அமைந்த இலைகளின் அசைவு, குழந்தையின் அழுகை என்று தொடங்கி மனித இனத்தின் அடிப்படைச் செயல்பாடுகள் அனைத்திலும் ஒரு ‘ரிதம்’ இருக்கும். அதுவே, இந்த உலகை இயங்கச் செய்வதாகவும் இருக்கும்.
திரையிசையின் ஜாலம்!
இசை என்பது பெருங்கலை என்று கருதியவர்கள் நம் முன்னோர்கள். அதனாலேயே ‘இசைத்தமிழ்’ வழியாகவே காலம்காலமாக இந்த மண்ணின் வரலாறு சொல்லப்பட்டு வருகிறது.
மனிதர்களிடத்தில் கூட, இசை தெரிந்தவருக்குக் கிடைக்கும் சமூக மரியாதை அளப்பரியதாக இருந்து வருவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.
பதின்ம வயதில் இசையில் வித்தகராக இருப்பவர்கட்கு எதிர்பாலினத்தவரை ஈர்ப்பது எளிது. அந்த துருப்புச்சீட்டினைக் கையில் ஏந்தியவர்கள் ‘நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை’ என்று இரண்டு கைகளையும் விண்ணோக்கி அகல விரித்துப் பாடலாம்.
இசையில் பல வகை உண்டு என்பது நம் அனைவருக்கும் தெரிந்த உண்மை. அந்தந்த நிலப்பகுதிகளில், அங்கு வாழ்ந்து வரும் மக்களின் பழக்க வழக்கங்கள் அடிப்படையில் இசையிலும் பல வேறுபாடுகள் உண்டு.
‘அந்த இசை ரசிக்கும்படியாக இருக்க வேண்டும்’ என்பதில் உலகின் எந்த மூலையில் இருப்பவர்க்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.
இந்தியாவில் கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை என்று இசை பலவிதமாக அணுகப்பட்டாலும், கடந்த எழுபதாண்டுகளுக்கும் மேலாகத் திரையிசை செலுத்திவரும் ஆதிக்கம் அவற்றினும் பெரிதாக இருந்து வருகிறது.
தமிழில் 1930-களின் பின்பாதியில் இருந்து இசையமைப்பாளர்களின், பாடி நடித்தவர்களின் ஆதிக்கம் தொடர்ந்து வருகிறது.
எஸ்.எம்.சுப்பையா, எஸ்.வி.வெங்கட்ராமன், சி.ஆர்.சுப்பராமன், சி.எஸ்.ஜெயராமன், ஏ.எம்.ராஜா, ஆர்.சுதர்சனம், எஸ்.ராஜேஸ்வர ராவ், கண்டசாலா, கே.வி.மகாதேவன், ஜி.ராமநாதன், எம்.எஸ்.விஸ்வநாதன், டி.கே.ராமமூர்த்தி, வேதா, ஜி.கே.வெங்கடேஷ், வி.குமார், இளையராஜா, சங்கர் – கணேஷ், சந்திரபோஸ், நரசிம்மன், தேவேந்திரன், தேவா, ஏ.ஆர்.ரஹ்மான் என்று தொடர்கிறது தமிழில் கோலோச்சிய இசையமைப்பாளர்களின் பட்டியல்.
2000ஆவது ஆண்டுக்குப் பிறகு தமிழில் நிறைய இசையமைப்பாளர்கள் தங்களது பங்களிப்பினைத் தந்து வருகின்றனர். அவர்களுக்கென்று தனிப்பட்ட ரசிகர்கள் பலர் உள்ளனர்.
ஒரு ரசிகன் சுகத்தை அனுபவிக்கும்போதும், சோகத்தில் வாடும்போதும், இன்ன பிற உணர்வெழுச்சிமிக்க தருணங்களிலும் இசையை விரும்புகிறார். தனக்குப் பிடித்த திரையிசையில் மூழ்குகிறார்.
காதில் ஹெட்செட் அல்லது இதர வகை கேட்பான்களைப் பொருத்திக்கொண்டு உலா வரும் மனிதர்கள் முகபாவனைகளில் இருந்து அதனை நாம் அறிய முடியும்.
இந்த பூமியில் வாழ்பவர்களில் பெரும்பாலானோருக்கு இசையே ஆசுவாசம் தருவதாக இருந்து வருகிறது. அது இல்லா வாழ்வை நினைத்துப் பார்ப்பது கூட கஷ்டமான ஒன்று.
இசையைக் கொண்டாடும் நோக்கத்துடன், இசைக்கலைஞர்களை ஊக்குவிக்கும் எண்ணத்துடன், ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 21ஆம் தேதியன்று உலகெங்கும் ‘உலக இசை தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது.
இசை என்பது கொண்டாட்டம் எனக் கொண்டால், இந்த தினமானது ‘கொண்டாட்டத்திற்கான கொண்டாட்டம்’ என்று கொள்ளலாம்.
1982-ம் ஆண்டு ‘எங்கும் இசை எல்லாவிடத்திலும் கச்சேரி’ என்று பிரான்ஸ் அரசு நாடு முழுவதும் இசைக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்தது.
அந்நாட்டைச் சேர்ந்த ஜேக் லங் என்ற அரசியலாளரும், மௌரிஸ் ப்ளூரே எனும் இசைக்கலைஞரும் அதன் பின்னே இருந்தனர்.
அந்த நிகழ்வின் தொடர்ச்சியாக, ‘இசையை ஆக்குவோம்’ எனும் முழக்கத்தோடு உலகெங்கும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
இது செவ்வியல் இசை, இது அமெச்சூர்தனமான இசை என்று பேதம் பிரித்துப் பார்க்கும் வழக்கம் உலகெங்கும் இருந்து வருகிறது. அது நம் பார்வையைப் பொறுத்தது என்பது என் எண்ணம்.
கேட்பதற்கு எளிமையானதாகவும், இசைப்பதற்குக் கடினமானதாகவும் இருக்கும் எந்தவொன்றும் ‘செவ்வியல் இசைத்தன்மை’ கொண்டது. அப்படி நோக்கினால், காலம்காலமாக இந்தப் பூமியில் நிலைத்திருக்கும் ஒன்றைத் தீர்மானிப்பது அந்த இசையின் எளிமைதான்.
ஆதலால், எளிமையும் அழகும் ஒருங்கே அமைந்த இசையைக் கொண்டாடுவோம்; அதனைத் தேர்ந்தெடுப்பது நல்ல ரசனைமிக்கவராக இருப்பதே போதுமானது.
நல்லிசையைக் கேட்டு ரசித்துக் கொண்டாடுவதோடு, அதனை இசைக்கும் கலைஞர்களையும் போற்றிப் புகழ்ந்திடுவோம்!
இதனை எழுதும்போதே, ‘இசை மேடையில் இந்த வேளையில் சுகராகம் பொழியும்’, ‘இசையில் தொடங்குதம்மா விரக நாடகமே’ என்று இளையராஜாவால் உயிர் பெற்ற திரையிசை மெட்டுகள் மனதுக்குள் ரீங்காரமிடத் தொடங்குகின்றன..!
-மாபா