சமூக மாற்றத்திற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

நூல் அறிமுகம்:

‘சரஸ்வதிக்கு என்ன ஆச்சு?’ புத்தகத்தின் அட்டையில் ஒரு பெண் தன்னுடைய வயிற்றைப் பிடித்துக்கொண்டு படுத்துக் கொண்டு இருப்பாள். அதை பார்க்கும்போது அந்த பெண்ணுக்கு என்ன ஆச்சு என்று கேள்வியுடனே  புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன்.

இது ஒரு பெண்ணியம் சார்ந்த புத்தகம் என்று மட்டும் சொல்ல முடியாது. இதில் பெண்களின் பிரச்சனை மட்டும் பேசவில்லை. அரசியல், சமூகம், சமூக அக்கறை என அனைத்தையும் 64 பக்கங்களில் கொண்டு வந்துள்ளார் ஆசிரியர் சி.சரிதா ஜோ.

பெண்களின் அந்த மூன்று நாட்களைப் பற்றியும் அதில் அவர்கள் படும் அவஸ்தை பற்றியும் இவ்வளவு வெளிப்படையாக எழுதி இருக்கும் ஆசிரியருக்கு முதலில் நன்றியும்  பாராட்டும்.

இனி நூலுக்குள்…

பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் தோழியின் நடனத்தை பார்ப்பதற்காக அந்த மூன்று நாள் கஷ்டத்தையும் பொருட்படுத்தாமல் பள்ளிக்கு வருகிறாள் சரஸ்வதி. 

வயிற்று வலி ஒரு பக்கம் காலையில் இருந்து சிறுநீர் கழிக்காமல் இருப்பது ஒரு பக்கம் என்று தன்னுடைய வகுப்பறையில் முடங்கி கிடக்கிறாள்.

இரண்டு அரசியல்வாதிகளுக்கு இடையில் ஏற்படுகின்ற பிரச்சனையால் ஊரே கலவரமாகிறது. சுதந்திர தினக் கொண்டாட்டம் திண்டாட்டமாக முடிகிறது. மாணவர்கள் எல்லோரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்து விடுகின்றனர். ஆனால் சரஸ்வதியோ எதுவும் தெரியாமல் வகுப்பறையில் மயக்கமா, தூக்கமா என்பது கூட தெரியாமல் படுத்து இருக்கிறாள். 

எழுந்து பார்க்கும்போது இரவு நேரம் என்ன செய்வதென்று அறியாமல் பதறுகிறார். கலவரத்தில் இருந்து தப்பி வந்த விக்னேஷ் பள்ளி வகுப்பறைக்குள் நுழைகிறான். 

விக்னேஷ் தனக்கு உதவுவதாக கூறும்போது பேயை விட இப்ப மனுஷங்களை பார்த்தால் தான் பயமா இருக்கு என்று சரஸ்வதி நினைக்கும் அந்த இடம் மனிதர்களிடம் நம்பிக்கை அற்று இருக்கும் இன்றைய சூழ்நிலையை நமக்கு புரிய வைக்கிறது.

ஆம். ஐந்து வயது குழந்தை கற்பழிக்கப்படுகிறது என்றால் சமூகம் எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. சமூகம் என்றால் என்ன, மனிதர்கள் தானே சமூகம். மனிதத் தன்மையற்ற இந்தக் கொடிய மிருகங்கள் இருக்கும் வரை மனிதன் சக மனிதனைப் பார்த்து பயம் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

சரஸ்வதியின் தோழி மீனாவின் அண்ணன் தான் விக்னேஷ் என தெரிந்தவுடன் என் தோழிக்கு அண்ணன் என்றால் எனக்கும் அண்ணன்தான் என சரஸ்வதி அவன் மீது நம்பிக்கை கொண்டு அவனிடம் பேசுவதும் தருணம் நெகிழ்ச்சியாக இருந்தது.

பெரும்பான்மையான பள்ளிகளில், அது அரசு பள்ளியாக இருந்தாலும் சரி, தனியார் பள்ளிகளாக இருந்தாலும் சரி, கழிவறைகள் என்பவை ஒரு கண்துடைப்பாகவே இருந்து கொண்டு இருக்கிறது. 

அப்படியே கழிவறைகள் இருந்தாலும் அது பராமரிப்பற்ற நிலையில்தான் உள்ளன. பள்ளிக்குச் செல்லும் பெரும்பான்மையான குழந்தைகள் தண்ணீர் குடிப்பதற்கே யோசிக்கிறார்கள்.

ஏனென்றால் தண்ணீர் குடித்தால் சிறுநீர் கழிக்க வேண்டும். சிறுநீர் கழிக்க வேண்டும் என்றால் ஆசிரியர்கள் அனுமதிக்க வேண்டும். மணி அடித்தால் தான் வெளியே செல்ல வேண்டும் என்று எழுதாத சட்டம் ஒன்று எல்லாப் பள்ளிகளிலும் நடைமுறையில் உள்ளது. 

அப்படி இருக்கும்போது குழந்தைகளுக்கு சிறுநீரகக் கல், மாதவிடாய்ப் பிரச்சனை என, பல உடல் உபாதைகள் வரத்தான் செய்கின்றன. இது எல்லாம் பெற்றோர்களாகிய நாம் தான் கவனிக்க வேண்டும்.

ஆனால் பெரும்பான்மையான பெற்றோர்கள் தன் குழந்தை எந்த வகுப்பில் படிக்கிறாள் அல்லது படிக்கின்றான் என்று தெரியாமல் இருக்கின்றனர். பள்ளியின் பக்கம் சென்று பார்ப்பது கூட இல்லை. 

குழந்தைகள் நன்றாகப் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்ற பெற்றோர்கள் அவர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் எனவும் நினைக்க வேண்டும். 

பள்ளியில் கழிவறைகள் கட்டிக் கொண்டிருந்தனர். அது ஏன் நின்றுவிட்டது என விக்னேஷ் கேட்கும்போது சரஸ்வதி சொல்வாள், இரண்டு கட்சிக்காரர்களில் யார் கழிவறையை திறப்பது என்று கட்டடம் கட்டும்போதே பிரச்சனை எழுந்துவிட்டது. அதனால் நின்றுவிட்டது என்பாள். 

அதற்கு விக்னேஷ் எல்லாவற்றையும் அரசாங்கமே பார்த்துக் கொள்ளும் என்று இருக்கக் கூடாது. நாமும் நம் சார்பாக எதையாவது முன்னெடுத்து செய்ய வேண்டும்.

ஒவ்வொரு ஊரிலும் கோவில்களுக்கு திருவிழா செய்யும்போது சாமியா வந்து எனக்கு திருவிழா செய்யுங்கள் என்று கேட்கிறது? இல்லையே மக்களாகிய நாம் தானே வருடா வருடம் கோவில்களுக்கு திருவிழா செய்து கொண்டிருக்கிறோம். 

அதுபோல இது போன்ற சமூக பிரச்சனைகளில் நாம் தான் தலையிட்டு அதை சரி செய்ய முயல வேண்டும் என கூறும்போது ஒவ்வொரு மனிதனுக்கும் சமூகத்தின் மீது அக்கறை இருக்கிறது என உணர்த்துகிறது. 

முட்டை ஓட்டை உடைச்சிட்டு வெளிய வர குஞ்சுகள் தான் பெரிய பறவையாக மாறுகிறது. உடைக்கப் பயப்படுகின்ற குஞ்சுகள் உள்ளே இருந்து இறந்து போகிறது. நாங்க உடைச்சுட்டு வர குஞ்சாக இருப்போம் என்று சரஸ்வதி சொல்லும்போது உண்மையில் நாமும் உடைத்து வெளியே வரக்கூடிய பறவையாக மாற வேண்டும் என ஆசை வருகிறது.

பெண்கள் பலவீனமானவர்கள் அல்ல. உடலளவிலும் மனதளவிலும் எவ்வளவோ இன்னல்களை சமாளிப்பவர்கள். ஆனால் அந்த மூன்று நாட்கள் வந்துவிட்டால் அவர்கள் மனதளவிலும் உடலளவிலும் சோர்ந்து தான் போகின்றனர். 

இந்த மூன்று நாட்களில் பெண்கள் படும் இன்னல்கள் கொஞ்சம் நஞ்சம் அல்ல. அதிலும் பள்ளிக்குச் செல்லும் சிறுமிகளும் வேலைக்காக வெளியில் செல்வோரும் சிறுநீர் கழிப்பதற்கும், நாப்கின் மாற்றுவதற்கும் படுகின்ற அவஸ்தையும், சமுதாயத்தில் நடக்கின்ற பொய் அரசியல், அறியாமை போன்ற பலவற்றை இந்நூல் பேசுகிறது. 

ஒரு பெண்ணாக சரஸ்வதியை பார்த்து எனக்கு கண்ணீர் வரவில்லை மாறாக மனதில் ஒரு  தைரியம் தன்னம்பிக்கை தான் வருகிறது.

– நன்றி: மணிவேல் சின்னத்தம்பி

*****

புத்தகம்: சரசுவதிக்கு என்னாச்சு?
ஆசிரியர் : சரிதா ஜோ
வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ட்ரன்
பக்கங்கள்: 64
விலை: 60/-

You might also like