சமத்துவமான பார்வையைப் பலவற்றில் வலியுறுத்துகிறோம். ஆனால் மதுபான விற்பனையில் அத்தகைய சமத்துவம் தமிழ்நாட்டில் இருக்கிறதா?
உயர் ரக மதுபானங்களை விற்க ‘காஸ்ட்லி’யான பார்கள். வசதியானவர்களும், அதிகாரிகளும், அரசியல் பிரமுகர்களும் அங்கு பாதுகாக்கப்பட்ட மதுவகைகளை அருந்தலாம்.
அரசே முன்னின்று நடத்துகிற டாஸ்மாக் கடைகளில் நடுத்தரத்தட்டு மக்கள் விலை ஏற்றப்பட்டாலும் குடிக்கிறார்கள். அங்கு விற்கப்படும் மதுபானங்கள் குறித்த தெளிவான பார்வையோடு குடிமக்கள் கேள்வி கேட்க அனுமதிக்கப்படுவதில்லை.
அண்மையில் டாஸ்மாக்கில் விலை ஏற்றப்பட்டதும், குடிப்பழக்கத்திற்குக் கிட்டத்தட்ட அடிமையாகிப் போனவர்கள் மலிவான போதையைத் தேடுகிறார்கள். பக்கத்து மாநிலங்களில் மலிவான விலையில் கிடைக்கும் கள்ளைத் தேடிப் போகிறார்கள்.
ஆனால் தமிழகத்தில் கள் விற்பனை தடை செய்யப்பட்டிருக்கிறது. அதற்கான தடையை நீக்கக் கோரி சில இயக்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் அவை இங்கு பரிசீலிக்கப்படவே இல்லை-இதுவரை.
அதன் விளைவாகவே அடித்தட்டு மக்களில் சிலர் தங்கள் பகுதிகளில் கிடைக்கும் சாராயத்தை நாடுகிறார்கள். அதில் எத்தகைய ரசாயனம் கலக்கப்பட்டிருக்கிறது என்பதை எல்லாம் அவர்கள் பார்ப்பதில்லை.
கள்ளக்குறிச்சி உயிரிழப்புகள் உணர்த்துவது இதைத் தான்.
இந்தச் சந்தர்ப்பத்தில் மதுவிற்பனை அல்லது மதுவிலக்கு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு முன்னாள் முதல்வரான பக்தவச்சலம் மதுவிலக்கு பற்றிக் கூறிய கருத்து கீழே:
”திட்டங்கள் யாருக்காக? மக்களுக்காகத் தானே?”
”திட்டங்கள் எல்லாம் யாருக்காக? மக்களுக்காகத் தானே! அவர்களைக் கொடுமைப்படுத்தி, அவர்கள் வாழ்வை நாசமாக்கி, அதில் வரும் பணத்தைக் கொண்டு பெரிய திட்டங்களை நிறைவேற்றுவதால் என்ன லாபம்?”
– மதுவிலக்கு பற்றி முன்னாள் தமிழக முதல்வர் பக்தவச்சலம் அளித்த பேட்டியிலிருந்து..
துக்ளக் – 15.5.1972 இதழிலிருந்து.