ஆறு வயது வரை மட்டுமே கோனேட்டாம்பேட்டையில் இருந்த எஸ்பிபி பின்னர் நெல்லூர் அருகே உள்ள தந்தையின் கிராமத்திற்கு அழைத்து வரப்பட்டார். அங்குதான் அவரது பள்ளிப்படிப்பு நிகழ்ந்தது.
வேடிக்கையான நிகழ்வு:
அவரது தந்தை அவ்வப்போது புராண நாடகங்கள் நடத்துவது உண்டு. ஒருமுறை பக்த ராமதாஸ் நாடகம் நடத்தினார்.
அந்த நாடகத்தில் ஐந்து வயதுச் சிறுவனாக இருந்த எஸ்பிபி அவரது மகனாக நடித்தார்.
அந்தக் காலத்தில் நாடகங்கள் பொதுவாக இரவு பத்து மணிக்கு மேல்தான் நடக்க ஆரம்பிக்கும். இரண்டு மணி வரை அது நீடிக்கும்.
பக்த ராமதாஸ் நாடகத்தில் முதலில் இரண்டு காட்சிகளில் எஸ்பிபி நடிக்கும் காட்சிகள் வந்தன. அப்புறம் கடைசியில்தான் அவர் நடிக்க வேண்டும்.
சின்னஞ்சிறு பையன் என்பதால் இடைப்பட்ட நேரத்தில் உள்ளே ஒரு பெஞ்சில் படுத்து உறங்கிவிட்டார். ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த அச்சிறுவனைத் திடீரென்று வந்து எழுப்பினார்கள். அப்போது மணி நள்ளிரவு ஒரு மணி. அவர் நடிக்க வேண்டிய காட்சி.
மேடையில் ஏறினால் அவரது தந்தையைக் காவலர்கள் கை கால்களில் விலங்கிட்டு வைத்திருந்தார்கள். நாடகத்தின் காட்சி தான் அது. ஆனால் தந்தையை அப்படிப் பார்த்ததும் பதறிப் போனார் மகன்.
“ஐயோ.. அப்பா” என்று கத்திக் கதறி அழுதார்.
அதைப் பார்த்த ரசிகர்கள், “இந்தப் பையன் எவ்வளவு அருமையா, தத்ரூபமா நடிக்கிறான்” என்று வியந்து பாராட்ட ஆரம்பித்தார்கள்.
ஆனால், உண்மையில் அது நடிப்பு கிடையாது என்பது எஸ்பிபிக்கும், அவரது தந்தைக்கும் மட்டுமே தெரியும்.
குறிப்பு: எஸ்பிபி சிறுவனாக இருந்தபோது அப்பாவுடன்…
நன்றி: எஸ்.பி.பி. ரசிகர்கள் முகநூல் பதிவு