சுமார் நான்கைந்து மாதங்களுக்கு முன்பு வரை சென்னை கோயம்பேட்டில் இருந்து கிளம்பும் ஆம்னி பேருந்துகளை இயக்குவது தொடர்பாக அரசுக்கும் பேருந்து உரிமையாளர்களுக்கும் பிரச்சனை நீடித்துப் பயணிகள் அதனால் படாதபாடு பட வேண்டியிருந்தது. தற்போது மீண்டும் அத்தகைய நிலை உருவாகி இருக்கிறது.
வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்கக் கூடாது என்று அறிவித்திருக்கிறது தமிழக அரசின் போக்குவரத்துத் துறை. குறிப்பிட்ட வெளிமாநில பதிவெண் கொண்ட பேருந்துகளில் பயணிகள் யாரும் பயணிக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
ஒரு குறிப்பிட்ட பேருந்துக்கான முன்பதிவு செய்யப்படும்போது, அது எந்த மாநிலப் பதிவெண் கொண்ட பேருந்து என்பதை உணர்வதற்கான வாய்ப்புகள் தற்போது இல்லை.
இப்படிப்பட்ட நிலையில் பேருந்து கிளம்பும்போது தான், குறிப்பிட்ட பதிவெண் அந்த சம்பந்தப்பட்ட பயணிக்கு தெரிய வருகிறது. இதுதான் தற்போதுள்ள நிலைமை.
இதனிடையே ஆம்னி பேருந்துகளை மீறி இயக்கினால், எந்த சமயத்திலும் இடையில் நாங்கள் தடை செய்வோம் என்றும் போக்குவரத்துத் துறை அறிவித்திருக்கிறது.
இப்படிப்பட்ட அறிவிப்புகளை வெளியிடக்கூடிய தமிழக அரசின் போக்குவரத்துத் துறை, பயணிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சொல்வதை விட, அந்தக் குறிப்பிட்ட பதிவெண் கொண்ட பேருந்துகளை இயக்குவதைத் தடுத்து நிறுத்தலாம்.
இதன் மூலமாக பயணிகள் பயணத்தின் நடுவே நடுவழியில் இறக்கி விடக்கூடிய ஆபத்துக்களைத் தவிர்க்கவும் வழி வகுக்கும்.
இதையெல்லாம் செய்யாமல் முழுக்க பயணிகள் மீதே திரும்பத் திரும்ப எச்சரிக்கை விடுவதன் மூலம் மட்டும் எந்த பலனும் இல்லை.