சக்சஸ் ஸ்டோரி
திருவாரூரை பூர்வீகமாகக் கொண்டவர் தொழிலதிபர் செந்தூர் பாரி. எக்ஸ்நோரா இன்டர்நேஷனல் பவுண்டேசன் தலைவராக, தமிழ்நாடு முழுவதும் பசுமைவெளிகளை உருவாக்கும் சமூக நோக்குடன் சிட்டாகப் பறந்து பணிகள் செய்கிறார்.
எக்ஸ்நோரா பவுண்டேசன்
நம்மிடம் பேசிய அவர், “எக்ஸ்நோரா பசுமை மற்றும் தூய்மைக்கான அமைப்பு. தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை மீட்டெடுப்பதில் கூடுதல் கவனம் செலுத்திவருகிறோம். பத்து ஆண்டுகளில் நீர்நிலைகளில் மூன்றில் ஒரு பகுதியை நாம் இழந்திருக்கிறோம்.
ஒவ்வொரு நாளும் ஆக்கிரமிப்புகளால் ஏரிகள், குளங்களை இழந்துவருகிறோம். மக்கள் தொகையும் நீரின் தேவையும் கூடுகிறது. அதை சேமிக்கிற பாத்திரங்களான குளம், ஏரிகள் போன்றவற்றின் அளவும் அதிகரிக்கவேண்டும். இங்கே தலைகீழாக நடக்கிறது. மக்கள்தொகை கூடும்போது, அதன் அளவும் எண்ணிக்கையும் குறைந்துகொண்டே வருகிறது.
மக்கள் பங்கேற்பு அவசியம்
மக்கள் பங்கேற்புடன் நீர் மேலாண்மை என்பதுதான் எங்கள் நோக்கம். மக்கள் பங்கேற்பு இல்லாத எந்தவொரு முயற்சியும் வெற்றி பெறாது. பத்து ஆண்டுகளில் அரசு 40 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறது. மக்கள் பங்கேற்பு இல்லாமல் அந்த திட்டங்கள் வெற்றி அடையவில்லை.
பட்டினத்தில் பூதம் படத்தில், ‘இன்னைக்கு விளக்கு கீழிருந்து மேல் நோக்கி எரியுது. ஒரு காலத்தில் விளக்கு மேலிருந்து கீழே வரும். அன்னைக்கு பூமி அழிஞ்சுடும்’ என்று பூதம் சொல்லும். கிராமப்புறங்களில் மரம் வளர்ப்புக்கு என தனியாக ஆட்கள் வைத்திருப்பார்கள். மோட்டார் வந்ததும் பல நீர்நிலைகளை நாமே மூடிவிட்டோம்.
இலவச பொக்லைன்
எங்களிடம் இரண்டு பொக்லைன் எந்திரங்கள் உள்ளன. தூர்வாரும் பணிகளுக்கு இலவசமாக தருகிறோம். தமிழ்நாட்டில் 40 ஆயிரம் நீர்நிலைகள் உள்ளன. ஓட்டுநர் ஊதியமும் டீசலும் கொடுத்தால் போதும். வாடகை தேவையில்லை. 50க்கு 50 பங்குதாரர்போல.
இதுவரை 15 மிகப்பெரிய நீர்நிலைகளை மீட்டெடுத்துள்ளோம். திருவாரூரில் மத்தியப் பல்கலைக்கழகம் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள நீர்நிலையை சீரமைத்துள்ளோம். தமிழகத்தில் 33 சதவீதம் பசுமைப் பகுதி இருக்கவேண்டும் என்கிறார்கள். நாம் அதற்காக 250 கோடி மரங்கள் வைக்கவேண்டும்.
262 கோடி மரங்கள்
ஐந்து ஆண்டுகளில் 262 கோடி மரங்கள் நடப்போகிறோம் என மாநில அரசு அறிவித்துள்ளது. அரசால் மட்டும் சாதித்துவிடமுடியாது. மக்களும் இணைவது அவசியம். விழிப்புணர்வும் வேண்டும். நாங்கள் மாணவர்களைத்தான் நம்புகிறோம். பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் ஒரு செய்தி சேர்ந்துவிட்டால், சமூக மாற்றம் உறுதியாகிவிடும்.
இதுவரை நாங்கள் சென்ற ஆண்டில் 2 லட்சம் மரங்கள் நட்டிருக்கிறோம். திருவாரூர், நீடாமங்கலம், மன்னார்குடி, நாமக்கல், திருச்சி உள்ளிட்ட பல நகரங்களில் மரங்கள் நட்டுவருகிறோம்.
நான் ஓர் ஊக்கமூட்டி
என்னுடைய ரோல் என்பது யாரெல்லாம் நீர் மேலாண்மைக்கும் மரம் நடும் பணிகளுக்கும் ஆதரவாக இருக்கிறார்களோ அவர்களை ஊக்கப்படுத்தி உதவி செய்கிறேன். அவர்களுக்கு என்ன தேவையோ அதை செய்துகொடுக்கிறோம்.
அரியலூர், பேராவூரணி, திருவாரூர் போன்ற பல ஊர்களில் நீர்நிலைகளைப் பாதுகாக்கும் தனி நபர்களையும் அமைப்புகளையும் ஊக்கப்படுத்திவருகிறோம். தஞ்சாவூரில் 640 ஏக்கர் பரப்பில் செங்கழுநீர் ஏரியை உள்ளூர் மக்கள் பங்கேற்புடன் புனரமைப்பு செய்திருக்கிறோம்.
பறவைகளும் பட்டாம்பூச்சிகளும்
உலகம் முழுவதும் மரம் வளர்ப்பில் அதிக பங்களிப்பைச் செய்தது பறவைகளும் பட்டாம்பூச்சிகளும்தான். ஒரு செடியை வைத்துவிட்டு நாம் படம் போட்டுக்கொள்கிறோம். இயற்கைக்காக யாரெல்லாம் வேலை செய்கிறார்களோ, அவர்களை ஆதரிக்கிறோம்.
நீர் மேலாண்மை மற்றும் மரம் நடும் பணிகளில் மிகுந்த திருப்தியுடன் பணியாற்றி வருகிறோம். எவ்வளவு தடைகள் வந்தாலும், எங்களால் செய்யமுடிந்ததை செய்துகொண்டே இருக்கிறோம்” என்று மிகுந்த ஆர்வத்துடன் பேசினார்.
- எஸ். சாந்தி
#தொழிலதிபர்_செந்தூர்_பாரி #மரங்கள் #நீர்நிலைகள் #இயற்கை #எக்ஸ்நோரா_இன்டர்நேஷனல்_பவுண்டேசன் #ExNoRa_International_Foundation #senthoor_pari #trees #nature