ஜுன் 14 – உலக ரத்தக் கொடையாளர் தினம்
’கர்ணன்’ படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில், உடலில் இருந்து வழியும் ரத்தத்தோடு சேர்த்து தனது புண்ணியத்தையும் கிருஷ்ணனுக்குக் கண்ணன் வாரி வழங்குவதாகக் காட்டப்பட்டிருக்கும்.
நாம் செய்த பாவ, புண்ணியங்கள் அனைத்தும் உயிரோடு கலந்தது என்பதை உணர்த்துவதற்காக அப்படியொரு காட்சி அமைக்கப்பட்டிருக்கலாம்.
ஆனால், ரத்தம் என்பது மனித உயிர் உயிர்ப்புடன் இருப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது எனும் உண்மையை அதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம். மனித உடலியலில் ரத்தத்தின் பங்கு மிக அதிகம்.
உடல் நலிவடைந்து அறுவைச் சிகிச்சையை எதிர்கொள்ளும் ஒருவருக்குத் தேவையான ரத்தம் கிடைப்பதென்பது எளிதான விஷயமல்ல. அதுபோன்ற தருணங்களில் ரத்த தானத்தின் அருமை சம்பந்தப்பட்டவர்களுக்குப் புரியும்.
ரத்த வங்கியைத் தேடியோடும் போதும், குறிப்பிட்ட வகையைச் சார்ந்த ரத்தத்தைத் தானமாக வழங்கும் மனிதர்களை நாடுவதும் அதனை உணர்த்தும்.
அப்படி ரத்தத்தைத் தானமாகத் தருபவர்கள், சம்பந்தப்பட்ட நோயாளிகளின் குடும்பத்தினருக்கு மனித உருவில் காட்சியளிக்கும் கடவுளாகத் தெரிவார்கள். அந்தளவுக்குக் குருதிக்கொடை என்பது மாபெரும் சிறப்பினைக் கொண்டது.
சிறப்பான தானம்!
தானத்தில் சிறந்தது ரத்த தானம் என்பது அந்த அனுபவத்தை எதிர்கொண்டவர்கள் சொல்வது.
வேறு எதனைத் தானம் செய்வதைக் காட்டிலும், ஒருவரது உயிரைக் காக்கவல்லது ரத்தத்தைத் தானமாக வழங்குவது எனும் அர்த்தத்தில் அது சொல்லப்படுகிறது.
இவ்வாறு ரத்தத்தையும், ரத்தம் சார்ந்த பிளாஸ்மா, சிவப்பணுக்கள் போன்றவற்றையும் தானமாக வழங்குவதன் மூலமாகப் பல லட்சம் பேரின் உயிர் காப்பாற்றப்படுகிறது.
குழந்தை பிறப்பின்போது பல கர்ப்பிணிகளைக் காக்க இது உதவுகிறது. சிக்கலான மருத்துவ அறுவைச் சிகிச்சைகள், புற்றுநோய் முதலான நோய்களுக்கான சிகிச்சை முறைகள், ரத்தக் குறைபாடுகளுக்கான தீர்வுகளில் ரத்த தானம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
விபத்துகளில் காயமடைந்தவர்களையும், தலஸமியா மற்றும் ஹீமோபிலியா போன்ற வித்தியாசமான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களையும் சரிப்படுத்த ரத்த தானமே உதவுகிறது.
அவ்வாறு ரத்த தானம் செய்பவர்களைக் கொண்டாடும்விதமாக, ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 14-ம் தேதியன்று ‘உலக ரத்தக் கொடையாளர் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. ரத்த தானம் செய்பவர்களுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாகவும், அவர்களை ஊக்குவிக்கும்விதமாகவும் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
இளையோர் இது குறித்த விழிப்புணர்வை அடையச் செய்யும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
ரத்த தானம் செய்வதில் குறைபாடு ஏதும் நேராது என்பது போன்ற அடிப்படை மருத்துவத் தகவல்கள் பரப்பப்பட வேண்டும் என்பதும் இத்தினத்தைக் கடைப்பிடிப்பதற்குப் பின்னிருக்கும் காரணங்களில் ஒன்றாக விளங்குகிறது.
ரத்த வகைகளைக் கண்டறிந்த கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் பிறந்த தினத்தை நினைவுகூரும் வகையில் ‘உலக ரத்தக் கொடையாளர் தினம்’ ஜுன் 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
’20 ஆண்டுகளாக ரத்த தானம் அளிப்பவர்களுக்கு நன்றி தெரிவித்து, அவர்களைக் கொண்டாடுவோம்’ என்பது இந்த ஆண்டுக்கான இத்தினக் கொண்டாட்டத்தின் கருப்பொருளாகக் கொள்ளப்பட்டுள்ளது.
ரத்த தானத்தால் நன்மைகள்!
தானாக முன்வந்து ரத்ததானம் செய்பவர்களால் மருத்துவச் சிகிச்சைகளுக்குப் போதுமான ரத்தம் கிடைப்பதென்பது சில நாடுகளில் மட்டுமே சாத்தியமாகியிருக்கிறது.
இதர நாடுகளில் நோயுற்றவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், தெரிந்தவர்கள் மூலமாக மட்டுமே ரத்தம் பெறப்படுகிறது.
அதனால், நோய் சிகிச்சைக்குத் தேவையான ரத்தத்தைப் பெறுவது இன்னும் சவாலானதாகவே உள்ளது.
அதனாலேயே, ரத்த தானம் செய்பவர்களுக்குக் கிடைக்கும் நன்மைகளையும் அண்மைக்காலமாகச் சில மருத்துவப் பணியாளர்கள் குறிப்பிடத் தொடங்கியுள்ளனர்.
’நாம் தானமாகக் கொடுத்த ரத்தத்தின் அளவு, 48 மணி நேரத்தில் மீண்டும் உடலில் உருவாகிவிடும்’ என்பது அதிலொன்று. அதனால், ஆரோக்கியமான ஒரு நபர் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ரத்த தானம் செய்யலாம் என்கிறது மருத்துவ உலகம்.
மனித உடலின் எடையில் எட்டு சதவிகிதத்தை ரத்தம் நிறைக்கிறது. தொடர்ந்து ரத்த தானம் செய்யும்போது, அதிகப்படியாக இருக்கும் இரும்புச்சத்து குறைகிறது.
அதனால் ஹெமோகுரோமடோசிஸ் மற்றும் கார்டியோவாஸ்குலர் நோய்கள், இதய மாரடைப்பு அபாயங்கள் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.
அனீமியா உட்படச் சில நோய்களை முன்கூட்டியே கண்டறிய ரத்த தானம் வழி வகுக்கிறது. கல்லீரலை நன்கு பராமரிக்கவும், உடல் எடை குறையவும் இது உதவுகிறது. இப்படி இதன் நன்மைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
இன்றைய சூழலில் மது போதையும், சிகரெட் புகையும் மனிதருக்குப் பெருமளவில் தீங்கு விளைவிக்கிறது. ரத்த தானம் செய்யும் நபர் அவற்றைத் தவிர்க்க வேண்டும்.
அந்த ஒரு காரணத்தால், அவற்றைப் புறந்தள்ளும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
ஆதலால், ரத்த தானம் செய்வதை வழக்கமாகக் கொள்ளும் ஒருவரால் தனது உடல்நலத்தைச் சீராகவும் பேணவும் முடியும்.
இப்படிப் பலப்பல நன்மைகளைச் செய்யும் ரத்த தானம் மற்றும் அதனை கொடையாக வழங்குபவர்களின் அருமையைப் போற்ற, நாம் அனைவரும் ‘உலக ரத்தக் கொடையாளர் தினத்தை’க் கொண்டாடுவோம்! அவர்களுக்கு நாளும் பொழுதும் நமது நன்றிகளைக் காணிக்கையாக்குவோம்!
- மாபா