மறுபடியும் சர்ச்சையாகி இருக்கும் ‘நீட்’ பிரச்சனை!

சில ஆண்டுகளுக்கு முன்பு நீட் தேர்வு அறிமுகமாகி செயல்படுத்தப்பட்டதிலிருந்தே பல்வேறு சர்ச்சைகளும் எதிர்ப்புகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கான எதிர்ப்பு வெளிப்படையாகவே இருந்தது. எதிரெதிர் பார்வைகளைக் கொண்ட திமுகவும், அதிமுகவும் நீட் தேர்வை எதிர்ப்பதில், ஒரே பார்வையுடன் இருந்தார்கள். பாஜக மட்டுமே நீட் தேர்வை தொடர்ந்து ஆதரித்து வந்தது.

ஒவ்வொரு முறையும் நீட் தேர்வு நடத்தப்படும்போது தேர்வு எழுத வருகிற மாணவ மாணவிகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனைகளும் கெடுபிடிகளும் விநோதமாக பார்க்கப்பட்டு செய்திகளாக அடிபட்டன.

குறிப்பாக மாணவிகள் கழுத்தில் அணிந்திருந்த செயின் மற்றும் காதில் அணிந்திருந்த நகை, சிலருக்கு தாலி உட்பட சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு கழற்றி வைக்கச் சொல்லி, கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டன.

அப்படி மிகவும் தீவிரமான கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட நீட் தேர்வில்தான் வடமாநிலங்களில் ஆள்மாறட்டமும் நடந்து அவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவங்களும் நடந்திருக்கின்றன.

குறிப்பாக தமிழ்நாட்டில் தேர்வெழுத வரும் மாணவிகளிடம் காட்டப்படுகிற கெடுபிடிகளுக்கு நேரெதிரான ஒரு நெகிழ்வுத் தன்மையை வடமாநிலங்களில் பார்க்க முடிந்தது. தற்போது நடந்திருப்பதும் அதையே உணர்த்துகிறது.

கடந்த மாதம் 5-ம் தேதி நாடு முழுக்கப் பரவலாக 4,750 மையங்களில் நீட் தேர்வு நடந்தது. சுமார் 24 லட்சம் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தேர்வை எழுதினார்கள்.

தேர்வுக்கு முன்பே வினாத்தாள் வெளியாகிவிட்டதாக ஒரு சர்ச்சை வெடித்தது. இப்போதும் ஆள்மாறாட்டம் நடந்ததாக புகார்கள் எழுந்தன.

தேர்வு நடத்தப்பட்டு மிகக்குறுகிய நாட்களுக்குள்ளேயே தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் சிலர் பெற்ற மதிப்பெண்கள் கூட விவாதத்திற்கு வழி வகுத்தன.

குறிப்பாக 67 பேர்களுக்கு முழு மதிப்பெண்ணான 720 மதிப்பெண்கள் கிடைத்திருந்தன. அரியானா மாநிலத்தில் மட்டும் ஒரு குறிபிட்ட தேர்வு மையத்தில் நீட் தேர்வை எழுதிய 6 மாணவர்கள் 720 மதிப்பெண்களைப் பெற்றிருந்தது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.

இதுதவிர சுமார் 1500 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்களும் அளிக்கப்பட்டன. இத்தகைய தேர்வு முடிவு வெளிவந்த பிறகு நாடு முழுக்க பரவலான எதிர்ப்புகள் உருவாகின. டெல்லியில் மாணவர்கள் நீட் தேர்வு முறையை எதிர்த்துப் போராட்டம் நடத்தும் அளவிற்கு போனார்கள்.

தமிழ்நாட்டிலுள்ள பல கட்சிகளும் நீட் தேர்வு முறையில் நிகழ்ந்த குளறுபடிகளைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு நீட் தேர்வை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

உச்சநீதிமன்றத்திற்கும் நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நீட் தேர்வை நடத்தும் தேசியத் தேர்வு முகமைக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன.

பல்வேறு விவாதங்களுக்குப் பிறகு தற்போது, மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளை குறிப்பிட்டு தாங்கள் நீட் தேர்வு முறைக்கு எதிராக முன்வைத்த கோரிக்கைகள் எந்தளவிற்கு நியாயமானவை என்பதை விளக்கியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவின் பல மாநிலங்களிலும் நீட் தேர்வு என்பதே பரவலான பேசுபொருளாகி இருக்கிறது. கல்விக் கூடங்களில் துவங்கி உச்சநீதிமன்றம் வரை நீட் தேர்வு பிரச்சனை ஒரு சேர அலசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஆனால், இதில் சிக்கி பரிதவித்துப் போயிருப்பவர்கள் தேர்வை எழுதிய மாணவர்களும், தேர்வை எழுத விரும்பிய மாணவர்களும் தான்.

தேர்வு எழுதுவதை எவ்வித அச்சமும் அற்று இயல்பான முறையில், எதிர்கொள்ளுங்கள் என்று தேர்வு எழுதும் மாணவர்களுக்காக தனி நூலையே எழுதியிருக்கிற தற்போதைய பிரதமரான நரேந்திர மோடி, நீட் தேர்வை எழுதிய மாணவர்கள் விஷயத்திலும் தலையிட்டு உரிய முடிவை காலதாமதமற்று எடுக்க வேண்டும்.

எந்தத் தேர்வு முறையானாலும் சரி, தேர்வு எழுதும் மாணவர்கள் எவ்வித மனப்பதட்டங்கள் இன்றி இயல்பாக எழுதும் சூழலை உருவாக்குவதே ஆரோக்கியமான கல்வி முறை.

– மணா

You might also like