கல்வியை ஜனநாயகப்படுத்திய மெக்காலே!

நூல் அறிமுகம்:

இன்றைக்கு இந்திய மாநிலங்களிடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகளுக்கு, மிக முக்கியமான காரணங்களாக ஆங்கில மொழி அறிவும், இருமொழிக் கொள்கையும் குறிப்பிடப்படுகின்றன.

அறிவியல் மொழியாக ஆங்கிலத்தையும், தாய் மொழியாக தமிழையும் தக்கவைத்துக் கொண்டதே தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமான காரணமாகச் சுட்டிக்காட்டப்படுவதுண்டு.

அத்தகைய ஆங்கிலக் கல்வியின் தோற்றம் எப்போது நடந்தது? அப்படி ஒரு மொழி இங்கு அறிமுகப்படுத்த வேண்டியதற்கான அரசியல் காரணங்கள் என்னென்ன? மெக்காலே ஏன் இதைச் செய்யவேண்டும்?

சமகாலத்தில் காலனிய நீக்கம் (DE-COLONISATION) என்ற பெயரில் இந்துத்துவ சக்திகளால் மெக்காலே விமர்சிக்கப்படுவதற்கான காரணங்கள் என்ன என்பன போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லும் நூல்தான் ‘நவீன கல்விக் கொள்கையை நோக்கி.. மெக்காலே கூறியது என்ன?’ எனும் புத்தகம்.

கிட்டத்தட்ட ஒன்றரை நூற்றாண்டுக் கழித்து, இந்தியர்களின் சமூக நிலையை மாற்ற அவர்களுக்கு விஞ்ஞான மற்றும் அறிவியல் கல்வி புகட்ட வேண்டிய அவசியத்தை இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் மெக்காலே எடுத்து வைத்த “Minute by the Honorable T.B. Macaulay (2/2/1835)” அறிக்கைதான், இந்தச் சிறு நூலில் தமிழ் மொழிபெயர்ப்பாக மாற்றம் கண்டுள்ளது. ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் இந்நூலை வெளியிட்டுள்ளது.

மெக்காலேவின் நவீன கல்விக் கொள்கையைச் சிலர் எதிர்ப்பதற்கான மூலக்காரணம், அது கல்வியை ஜனநாயகப்படுத்தியது என்பதற்காகத்தான்.

மெக்காலேவின் இந்த அறிக்கையைப் படிக்கும்போது அவரது நோக்கம் தெளிவாகிறது. அவர் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமானால், ‘இந்த லட்ச ரூபாய், இந்திய இலக்கியத்தைப் புதுப்பிப்பதற்கு மட்டுமின்றி பிரிட்டிஷ் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் வாழும் ‘மக்களுக்கு அறிவியல் ஞானத்தை அறிமுகம் செய்து மேம்படுத்துவதற்குமானது’ என்கிறார்.

இத்தகைய அறிவியல் ஞானம் பெறுவதற்கு ஆங்கிலம் அவசியம் என்கிறார்.

ஆங்கிலக் கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசும்போது, சமஸ்கிருதத்தில் இருக்கும் மூடத்தனங்களையும் அவர் விமர்சிக்கத் தவறவில்லை. ஓர் இடத்தில் ‘அமிழ்தும் வெண்ணையும் நிரம்பி வழியும் கடல்களைக் குறித்துப் பேசும் புவியியலை ஏற்றுக்கொள்வோமா?’ என்று புராணங்களை நக்கலடிக்கிறார்.

அதேபோல் துறை சார் நிபுணத்துவம் பெற்ற மொழியாக சமஸ்கிருதத்தை விட ஆங்கிலமே விளங்குகிறது, என்பது அவரது வாதமாக இருந்துள்ளது.

ஆங்கிலம் இங்குள்ள விளிம்பு நிலை மக்களை மேம்படுத்த உதவும் என்று அவர் கருதினர். அது நம்மை மேம்படுத்தியுள்ளது என்பதே சமகால யதார்த்தம்.

மேலும் கல்வி என்பது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று அவர் கருதினார். அதற்கு நவீன அறிவியல் பண்புகளைக் கொண்ட ஆங்கிலம் அவசியம் என்றும் அவர் நினைத்திருந்தார்.

இதுவே நவீன ஆங்கிலக் கல்வியை இங்கு அறிமுகப்படுத்துவதற்கு ஆரம்பப் புள்ளியாக அமைந்தது என்பதை இந்த சிறு நூல் நமக்கு மிகத் தெளிவாக உணர்த்துகிறது.

மெக்காலேவின் நோக்கம் மகத்தான ஒன்றாக இருந்திருக்கிறது என்பதை சான்றாதாரங்களோடு பொதுவெளியில் எடுத்து வைக்கிறது இந்நூல். ஆங்கிலக் கல்வியின் அவசியத்தை உரக்கச் சொல்ல நாம் அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது.

– கௌதம் ராஜ்

*****

நூல் : நவீன கல்விக் கொள்கையை நோக்கி: மெக்காலே கூறியது என்ன?
தமிழில் – க. சுந்தர், ஆர். விஜயசங்கர்
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
பக்கங்கள் : 51
விலை : 50/-

-நன்றி: முரசொலி

You might also like