6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அரிய நிகழ்வு!

பூமி உள்ளிட்ட 8 கோள்கள் அடங்கிய நமது சூரியக் குடும்பம் என்பது இன்றளவும் நமக்கு முழுமையாக புரியாத, இயற்கையின் ஒரு விந்தையாகவே உள்ளது. நம்மை ஆச்சரியப்படுத்தும் பல அற்புதமான, அரிய வகை நிகழ்வுகள் அடிக்கடி வானில் அரங்கேறிய வண்ணம்தான் உள்ளன.

அந்த வகையில், 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரவிருக்கும் மிகவும் அரிய நிகழ்வு ஒன்று, வரும் ஜுன் மாதம் 3-ம் தேதி வானில் நிகழ உள்ளது.

இது கிரகங்களின் அணிவகுப்பு ‘PARADE OF PLANETS’ அல்லது கோள்களின் சீரமைப்பு ‘PLANETS ALIGNMENT’ என அழைக்கப்படுகிறது.

விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள தகவலின்படி, “புதன், செவ்வாய், வியாழன், சனி, யூரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய கிரகங்கள் ஒரே நேர்க்கோட்டில் வர உள்ளன. மிகச்சரியாக இந்த 6 கோள்களும் ஒரே நேர்க்கோட்டில் வரும் நிகழ்வு வரும் ஜூன் 3-ம் தேதியும் 4-ம் தேதியும் நிகழ உள்ளது.

கோள்களின் சீரமைப்புகள் ஒப்பீட்டளவில் பொதுவான நிகழ்வுகளாகும், சில கோள்களின் சீரமைப்புகள் வருடத்திற்கு பல முறை நிகழ்கின்றன. இருப்பினும், ஆறு கோள்களின் சீரமைப்பு என்பது அரிதான நிகழ்வாகும்

நமது சூரியக் குடும்பத்தில் ஒவ்வொரு கோளும் ஒவ்வொரு தூரத்திலும், ஒவ்வொரு சாய்வு கோணத்திலும் சுற்றி வருகின்றன. அவை எப்போது ஒரே நேர்கோட்டில் அணிவகுப்பது சாத்தியமில்லை.

எனினும், பூமியிலிருந்து பார்க்கும்போது இந்தக் கோள்கள் ஒரே நேர்கோட்டில் இருப்பதுபோல ஒரு தோற்றம் ஏற்படுகிறது.

இதுபோன்ற ஐந்து அல்லது ஆறு கோள்களின் அணிவகுப்பு மீண்டும் 2024 ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதியிலும், 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் 18, பிப்ரவரி 28, ஆகஸ்ட் 29 ஆகிய தேதிகளிலும் நிகழ இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like