நாகேஷ் வீட்டில் இருந்த நான் வரைந்த ஓவியம்!

திரைக்கலைஞர் சிவகுமார் 

நாகேஷ் நடிக்காத கம்பெனியோ – அவர் போடாத வேஷமோ – அவரை டைரக்ட் பண்ணாத டைரக்டரோ – அவர் கூட 40 வருடத்தில் நடிக்காத ஹீரோவோ யாருமே இருக்க முடியாது.  1000 – த்திற்கும் மேல் படங்கள்.
‘காக்கும் கரங்கள்’ என் முதல் படம், ‘பூவெல்லாம் உன் வாசம்’ 192-வது படம். முதல் படத்திலும் நாகேஷ் இருந்தாரு. 192-வது படத்திலும் இருந்தாரு. இடையில் கிட்டத்தட்ட 30 படங்களில் நாங்கள் சேர்ந்து நடிச்சிருக்கோம்.
என்னை அழகுப் பையான்னுதான் ரொம்ப வருஷம் கூப்பிடுவாரு. கடைசி நாட்களில் கவுண்டரே என்று செல்லமா கூப்பிடுவாரு.
திடீர்னு ஒருநாள் சீதம்மா கல்யாண மண்டபத்துக்கு 10 நிமிஷம் வந்திட்டுப் போப்பான்னு கூப்பிட்டாரு.
மொபரீஸ் ரோட்ல உள்ள அந்த மண்டபத்துக்குப் போனேன். அவர் பேரனுக்கு பூணூல் கல்யாணம் நடந்திட்டிருந்தது. “பையனை ஆசீர்வதிச்சுட்டுப் போ!”ன்னாரு.
அப்போ பேசும்போது, “மனுஷங்க வாழ்க்கையில விபத்துங்கிறது பலவிதமா நடக்குது. என் வாழ்க்கையில் காதல்ங்கிற பேர்ல அந்த விபத்து நடந்தது.
கிறிஸ்தவப் பெண் ரெஜினா. நான் கன்னட பிராமணன். என் பேரை பீட்டர்னு மாத்தி கல்யாணம் பண்ணி வச்சாங்க. எப்படியோ திசைமாறிப் போன வாழ்க்கை – மீண்டும் பழைய பாதைக்கே வந்திருச்சு. என் பேரன் உபநயனம் பண்ணி என் வம்சத்தை விருத்தி செய்யப்போறான். இனி நான் நிம்மதியா கண்ணை மூடலாம்”ன்னு சொன்னார்.
நாகேஷ் புகைப்பழக்கம், மதுப்பழக்கம் உள்ளவர்னு எல்லோருக்கும் தெரியும். அதையெல்லாம் தவிர்த்திருந்தா ஒருவேளை அந்த ஸ்ட்ரெஸ்லயே அவர் தற்கொலை கூட பண்ணியிருக்க வாய்ப்புண்டு என்று நினைப்பேன்.
2009-ஜனவரி 26-ம் தேதி ‘கம்பன் என் காதலன்’ங்கிற தலைப்பில ஈரோடு திண்டல் வேளாளர் கல்லூரியில் கம்பராமாயண உரையை 8000 பேர் முன்னாடி நிகழ்த்திவிட்டு, 31-ம் தேதி தமிழ்ச்சங்கம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள டெல்லியிலிருந்தபோது நாகேஷ் உலக வாழ்க்கையிலிருந்து விடுபட்டுப் போய் விட்டார் என்கிற செய்தி வந்தது.
என் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இதை அறிவித்து ஒரு நிமிடம் மெளனம் அனுசரித்தபின் என் உரையைத் தொடங்கினேன்.
சென்னை வந்து நாகேஷ் இல்லம் போனேன். பரந்து விரிந்து வெறிச்சோடி கிடந்த ஹாலில் நடுவில் மாலையுடன் ஒரு படம்.
நான் வரைந்த நாகேஷின் ஓவியம். அந்த ஒன்றே ஒன்றுதான் அந்த வீட்டில் வைக்கப்படிருந்தது.
1970-ஜனவரி 6-ம் தேதி அந்த ஓவியத்தை நான் வரைந்து முடித்து நாகேஷ் கையில், ‘இது என் அன்பளிப்பு!’ என்று கொடுத்தபோது, அதைக் கண்ணில் ஒற்றிக்கொண்டு அவர் வாங்கிக் கொண்டது படமாக அப்போது மனதில் வந்து நின்றது.
நன்றி:  முகநூல் பதிவு
You might also like