மனுஷன் அப்பவே அப்படித்தான்!..
தமிழ்ப்பட உலகில் நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் நகைச்சுவை நடிகர் நாகேஷ். இவரைப் போல வேறு எந்த நடிகருக்கும் பாடி லாங்குவேஜ் வராது. மனிதர் டைமிங் காமெடியிலும் பின்னிவிடுவார். எம்ஜிஆர், சிவாஜி படங்களில் பெரும்பாலும் காமெடியனாகக் கொடி கட்டிப் பறந்தவர் நாகேஷ் தான்.
இவரது ஏடாகூடமான பேச்சு பார்க்கும் ரசிகர்களை சிரிப்பில் ஆழ்த்திவிடும். இதே உணர்வு நிஜத்திலும் இவருக்கு இருந்ததாம். தனது வெகுளித்தனமான கேள்விகளால் பலரின் கோபத்தையும் சம்பாதித்துள்ளார்.
இவரது ஆரம்பகாலத்தில் நாடகங்களில் நடிப்பதற்காக வாய்ப்பு தேடி அலைந்துள்ளார். பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்ததும் அலுவலகத்தில் பணியாற்றியுள்ளார். அங்கு இருந்து கொண்டே இதற்கான வாய்ப்பைத் தேடினார். ஒரு முறை அலுவலகம் சென்றபோது மறுநாள் நாகேஷுக்கு மேனேஜரிடம் நாடக ஒத்திகைக்கு லீவு கேட்க வேண்டி இருந்ததாம்.
என்ன செய்வது என்று யோசித்தார். மளமளவென கடிதம் ஒன்றை எழுதினார். மேனேஜரிடம் கொடுத்தார். அதைப் படித்துப் பார்த்த மேனேஜர் நாகேஷைத் திட்டி லீவெல்லாம் கிடையாது. நாளைக்கு ஆபீஸ் கண்டிப்பா வரணும்னு சொல்லிவிட்டாராம்.
இதனால் கோபத்தின் உச்சிக்குச் சென்ற நாகேஷ் அதை மேனேஜரிடம் காட்ட முடியாமல் அவரை ஒரு வழி பண்ண வேண்டும் என்று நினைத்தாராம். மறுநாள் ஆபீசுக்கு டவுசர், பனியனுடன் வந்தாராம். இதைப் பார்த்த அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தார்களாம். மேனேஜர் கோபம் கொண்டு ”ஏன் இந்த டிரஸில் வந்துருக்கே?” என கேட்டாராம்.
எனக்கு இருப்பதோ 2 பேண்ட், 2 சர்ட் தான். ஒண்ணு நேற்று தான் போட்டேன். இன்னொன்னு மழையில் நனைந்துவிட்டது. அதைப் போட்டால் எனக்கு ஜலதோஷம் பிடிக்கும். அதனால் தான் இப்படி வந்தேன். இதை வெளியே சொல்ல முடியாத காரணத்தினால் தான் லீவு கேட்டேன் என்று சொல்ல அதன்பிறகு லீவு கிடைத்ததாம். நாடக ஒத்திகைக்கும் போய் விட்டாராம்.
– நன்றி கயல்விழி முகநூல் பதிவு
#நடிகர்_நாகேஷ் #எம்ஜிஆர் #சிவாஜி #actor_nagesh #mgr #sivaji