நூல் அறிமுகம்:
‘எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது’ என்ற இந்தக் கதையின் நாயகி குஞ்ஞுஃபாத்துமா, ஒரு அப்பாவி. படிப்பறிவற்ற கிராமத்துப் பெண்மணி.
அவளுடைய தந்தை வாட்டனடிமை. நிறைய சொத்துக்களோடு ஊரில் முக்கியமாய் வலம் வந்த பிரமுகர்.
குஞ்ஞுஃபாத்துமா அவளுடைய உம்மா. உம்மா எப்போதும் பழம் பெருமையில் உழலும் ஒரு பெண். அவளது அப்பாவிடம் ஒரு கொம்பானை இருந்ததாம்; அதைத்தான் அவள் கதை முழுதும் சொல்லிக் கொண்டிருப்பவள்.
அவளது உம்மா, வாப்பா இருவரும் முஸ்லிம்களிடையே இருந்த மூடநம்பிக்கை பழக்கவழக்கங்கள் மீது கடும் நம்பிக்கை கொண்டவர்கள். அதை மீறினால் காபிர்கள் ஆகி, மரித்த பின்பு நரகத்திற்கு சென்று விடுவோம் என்ற எண்ணம் கொண்டவர்கள்.
முஸ்லீம் பெண்கள் தமது மார்கத்தில் சொல்லித் தரப்பட்ட ஐதீகங்களை ஒரு கேள்வியுமின்றி ஒத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லி வளர்க்கப்பட்டவள்.
குஞ்ஞுஃபாத்துமா எல்லா உயிர்களும் மீதும் அன்பும் கருணையும் கொண்ட பெண்.
ஒரு கட்டத்தில் சகோதரிகளுடன் ஆன வழக்கில் அனைத்து சொத்துக்களையும் இழந்து, தன்னுடைய மாளிகை போன்ற வீட்டிலிருந்து மிக எளிமையான வீட்டிற்கு வந்துவிடுகிறார்கள். வரதட்சணை கொடுக்க எந்த பணமும் இல்லாததால் குஞ்ஞுஃபாத்துமாவை மணக்க யாரும் முன் வரவில்லை.
இவர்கள் வீட்டுக்கு பக்கத்தில் ஒரு இஸ்லாமிய குடும்பம் வருகிறது. இஸ்லாம் மார்க்கம் சொல்லும் நல்ல கருத்துக்களைப் பின்பற்றிக்கொண்டு முற்போக்காக வாழும் குடும்பம். அந்த குடும்பத்தில் உள்ள ஆயிஷா என்ற பெண்ணின் மூலம் குஞ்ஞுஃபாத்துமா நிறைய அறிந்து கொள்கிறாள்.
அவளுடைய வாழ்க்கையின் திருப்புமுனையாக அந்தக் குடும்பம் இருக்கிறது என்பது தான் கதை.
பழைய மூட பழக்க வழக்கங்களை பின்பற்றுவதை தவறு என்று சொல்லி கல்வி என்பது எல்லோருக்கும் தேவை என்பதை தான் இந்த கதையில் ஆசிரியர் அவருடைய வழக்கமான பாணியில் சொல்லி இருக்கிறார் ஆசிரியர் வைக்கம் முகமது பஷீர்.
*****
நூல் : எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது.
ஆசிரியர் : வைக்கம் முகமது பஷீர்
தமிழில் : குளச்சல் மு.யூசுப்
காலச்சுவடு பதிப்பகம்
பக்கங்கள் : 112
விலை : ₹150.00