ரீமேக் ராஜாவின் அடுத்த படம் ‘எப்போ’?!

மோகன் ராஜாவின் படங்கள் என்றாலே, நம் மனதுக்குள் பிரமாண்டமான ‘கேன்வாஸ்’ விரியும். கலர்ஃபுல்லான ஒரு காட்சியனுபவத்தை நாம் பெற்றது நினைவுக்கு வரும். முதல் படமான ‘ஹனுமான் ஜங்ஷன்’ முதல் சமீபத்தில் வெளியான ‘காட்ஃபாதர்’ வரை எல்லாமே அப்படிப்பட்டவை தான்.

ரீமேக் ராஜா என்றறியப்பட்டாலும், மூலப்படத்தின் ஆன்மா கெடாமல் ஒரு படைப்பைத் தருவதில் அவர் கில்லாடி. அப்படிப்பட்டவர் தந்த படங்களை ஒருமுறை திரும்பிப் பார்க்கலாமா?

ஹனுமான் ஜங்ஷன்

மலையாளத்தில் வெளியான ‘தென்காசிப் பட்டணம்’ படத்தின் ரீமேக் இது. தற்போது வில்லனாக அறியப்படுகிற ஜகபதிபாபுவும் அர்ஜூனும் நாயகர்களாக நடித்தது.

அறிமுகப் படம் என்றபோதும், பெரிய நட்சத்திரங்களை ராஜா கேமிரா முன்னால் காட்டிய விதமே அவரது படைப்பாக்கத்திற்கு உத்தரவாதத்தை உருவாக்கியது.

ஜெயம்

தெலுங்கில் நிதின் நடிப்பில் வெளியான ‘ஜெயம்’ படத்தை அதே பெயரில் ரீமேக் செய்தார் ராஜா. தந்தை மோகன் தயாரிப்பில், சகோதரர் ரவியை நாயகனாக அறிமுகப்படுத்தினார். ‘ஜெயம்’ படத்தின் வெற்றி, ரவிக்கு ஒரு அடையாளத்தை உருவாக்கியது.

எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி

தெலுங்கில் ரவி தேஜா, அசின் நடிப்பில், பூரி ஜெகன்னாத் இயக்கிய ‘அம்மா நானா ஒக்க தமிழ் அம்மாயி’ படத்தைத் தமிழில் தந்தார் ராஜா. நதியாவை ரவிக்கு அம்மா ஆக்கியவர், அந்த படத்தில் அசினை அழகுறக் காட்டியிருந்தார்.

உனக்கும் எனக்கும்

பிரபுதேவாவை இயக்குனராக உருமாற்றிய ‘நுவ்வொஸ்தான்டே நேனொத்தன் டேனா’ படத்தை ஆங்காங்கே பட்டி டிங்கரிங் செய்து தமிழ் ரசிகர்களுக்கு தகுந்தவாறு மாற்றியிருந்தார்.

அந்த வகையில், இதனை முழுமையான ரீமேக் என்று சொல்லிவிட முடியாது. ‘சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்’ என்ற வண்ணமயமான டைட்டிலை இட்டவர், அதன்பிறகு தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்ற காரணத்திற்காக ‘சம்திங் சம்திங்’கை துறந்தார்.

சந்தோஷ் சுப்பிரமணியம்

ராஜாவின் தோழரான பாஸ்கர், தெலுங்கில் இயக்குனராக அறிமுகமான படம் ‘பொம்மரிலு’. அதில் சித்தார்த் ஏற்ற வேடத்தில் தமிழில் ரவி நடித்திருந்தார். அவரது தந்தையாக பிரகாஷ் ராஜ் வந்து போயிருந்தார்.

பெரிய நட்சத்திரப் பட்டாளம் இடம்பெற்ற இப்படத்தில், ஒவ்வொரு பாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கிடைக்கும் வகையில் இதனை உருவாக்கியதே ராஜாவின் சாதனை!

தில்லாலங்கடி

‘எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ போன்றே ‘தில்லாலங்கடி’யிலும் ரவி தேஜா ஏற்ற பாத்திரத்தைத் தமிழில் பிரதிபலித்திருந்தார் ஜெயம் ரவி. ‘கிக்’ படத்தின் ரீமேக் இது. வடிவேலு, தமன்னா, ஜெயம் ரவி சம்பந்தப்பட்ட நகைச்சுவை காட்சிகள் இதில் நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும்.

வேலாயுதம்

ராஜாவின் நண்பரான திருப்பதிசாமி இயக்கிய தெலுங்குப் படம் ‘ஆசாத்’. நாகார்ஜுனா நடித்த அப்படத்தைத் தமிழுக்குத் தக்கபடி பல்வேறு மாற்றங்களுடன் ‘வேலாயுதம்’ ஆக உருவாக்கினார் ராஜா.

விஜய்யை படுஸ்டைலாக திரையில் காட்டியிருந்தார். காமெடி, ரொமான்ஸ், ஆக்ஷன் என்று அனைத்து ரசங்களும் ஒன்றிணைந்து நல்லதொரு மசாலா படமாக அமையும் என்று உணர்த்திய படம் இது.

தனி ஒருவன்

ராஜாவாக இருந்தவர், தந்தையின் மோகன் என்ற பெயரையும் இணைத்தபிறகு பிரமாண்டமான படங்களைத் தரத் தொடங்கினார். வேறு மொழியின் தழுவலாக இல்லாமல், நேரடி தமிழ் படமாக அமைந்தது ‘தனி ஒருவன்’.

அரவிந்த் சாமிக்கு முக்கியத்துவம் தரும் வில்லன் வேடத்தைக் கொடுத்தாலும், ஜெயம் ரவிக்கு அடக்கி வாசிக்கும் நாயக பாத்திரத்தைத் தந்திருந்தார் ராஜா. அந்த முடிவை அவர் எடுத்ததுதான், அப்படத்தை தனித்துவமானதாக மாற்றியது.

வேலைக்காரன்

‘தனி ஒருவன்’ படத்திற்குப் பிறகு, மீண்டும் அதே போன்ற நாயக சாசகத்தை முன்னிறுத்திய படம் இது. சிவகார்த்திகேயன், பஹத் பாசில், நயன்தாரா, பிரகாஷ்ராஜ் என்று நீண்ட நட்சத்திர வரிசையில் சினேகாவுக்கும் ஒரு இடமுண்டு. பெரிதாக கவனிப்பைப் பெறாத ‘வேலைக்காரன்’, தற்போது ‘கல்ட்’ அந்தஸ்தைப் பெற்றிருக்கிறது.

காட்பாதர்

மோகன்லாலை நாயகனாகக் கொண்டு பிருத்விராஜ் இயக்கிய மலையாளத் திரைப்படம் ‘லூசிபர்’. அதனைத் தெலுங்கு ரசிகர்களுக்குப் பிடித்த வகையில் ரீமேக் செய்தார் ராஜா.

சிரஞ்சீவியோடு ஒரு காட்சியில் சல்மான்கானையும் நடிக்கச் செய்தார். நட்சத்திரங்களை அவர்களது ரசிகர்கள் எப்படி எல்லாம் ரசிப்பார்கள் என்பதனை மோகன் ராஜா எந்தளவுக்குப் புரிந்து கொண்டிருக்கிறார் என்பதை நமக்கு உணர்த்திய படம் இது.

அடுத்தது..!

நீண்ட இடைவேளைக்குப் பிறகு ‘தனி ஒருவன் 2’ படத்திற்காக மீண்டும் ஜெயம் ரவியோடு கைகோர்க்கிறார் மோகன் ராஜா.

இப்படத்திற்காக ரசிகர்கள் பலரும் காத்திருக்கின்றனர்.

ஒரு சாதாரண கமர்ஷியல் படக் கதையையும் பிரமாண்டமாகத் திரையில் விரியச் செய்யும் வித்தை ராஜாவுக்கு உண்டு. அதனைக் காண்பது ரசிகர்களுக்குப் பேரின்பம் தரும்.

அந்த வகையில், இன்றைய தினம் ‘தனி ஒருவன் 2’ தொடர்பான ஏதேனும் புதிய அப்டேட்களை அவரிடத்தில் எதிர்பார்க்கிறது ரசிக உலகம். ஏனென்றால், இன்று மோகன் ராஜாவின் பிறந்த நாள்..!

– உதய் பாடகலிங்கம்

You might also like