கவனம் ஈர்த்த காவ்யா மாறன்!

இந்த ஐபிஎல்லில் கிரிக்கெட் ரசிகர்களைக் கவர்ந்த அணி உரிமையாளர் என்று காவ்யா மாறனைச் சொல்லலாம். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளரான காவ்யா மாறன், தனது அணி ஆடிய அனைத்துப் போட்டிகளின்போதும் மைதானத்தில் ஆஜரானார்.

சன்ரைசர்ஸ் வீரர்கள் அவுட் ஆகும்போது ஒரு ரியாக்‌ஷன், அவர்கள் அதிரடியாக பேட்டிங் செய்யும்போது ஒரு ரியாக்‌ஷன் என்று காவ்யா மாறன் காட்டிய ரியாக்‌ஷன்கள் தொலைக்காட்சியில் தொடர்ந்து காட்டப்பட்டு, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

யார் இந்த காவ்யா மாறன் என்ற கேள்வி பெரிய அளவில் எழுந்திருக்கிறது.

சன் நெட்வொர்க் to சன் ரைசர்ஸ்:

சன் குழுமத்தின் நிறுவனரான கலாநிதி மாறனின் மகள்தான் காவ்யா மாறன். ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் கடந்த 2012-ம் ஆண்டு பி.காம் பட்டம் பெற்ற காவ்யா மாறன், 2016-ம் ஆண்டில் Warwick Business School-ல் படித்து எம்பிஏ பட்டம் பெற்றார்.

அதன்பிறகு தன் அப்பாவின் சன் நெட்வொர்க் நிறுவனத்தை திறம்பட கவனித்து வந்த காவ்யா மாறனுக்கு, கடந்த 2018-ம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதாராபாத் அணியின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பு வழங்கப்பட்டது.

அன்றிலிருந்து வீரர்களை ஏலத்தில் எடுப்பது முதல், முக்கிய போட்டிகளின்போது அணி வீரர்களை சந்தித்து உற்சாகப்படுத்துவது வரை பல்வேறு வகைகளிலும் அணிக்கு பக்க பலமாக இருந்து வருகிறார்.

சொத்து மதிப்பு:

தனிப்பட்ட முறையில் காவ்யா மாறனின் சொத்து மதிப்பு 409 கோடி ரூபாய். அவரது அப்பா கலாநிதி மாறனின் சொத்து மதிப்பு 24,000 கோடி ரூபாய்.

கலாநிதி மாறனுக்கு காவ்யா மாறன் ஒரே மகள் என்பதால் அந்த சொத்தும் எதிர்காலத்தில் அவருக்குத்தான் செல்லவுள்ளது.

அப்படி சென்றால், இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் வரிசையில் காவ்யா மாறன் இடம்பிடிப்பார். இப்போதைக்கு இந்த வரிசையில் அவரது அப்பா கலாநிதி மாறன் 82-வது இடத்தில் இருக்கிறார்.

கார்களின் காதலி:

கிரிக்கெட்டுக்கு அடுத்ததாக காவ்யா மாறன் அதிகம் விரும்புவது கார்களைத்தான். பல கோடி மதிப்புள்ள பல சொகுசுக் கார்களை காவ்யா மாறன் வைத்துள்ளார்.

12.2 கோடி ரூபாய் மதிப்புள்ள Rolls-Royce Phantom VIII EWB, 6 கோடி ரூபாய் மதிப்புள்ள Bentley Bentayga LWB, 3.76 கோடி ரூபாய் மதிப்புள்ள Ferrari Roma, 2.13 கோடி ரூபாய் மதிப்புள்ள BMW i7 ஆகிய கார்கள் அதில் குறிப்பிடத்தக்கவை.

காதல் கிசுகிசுக்கள்:

காவ்யா மாறனின் வயது 32. அவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அதனாலேயே அவரைப் பற்றி ஏராளமான காதல் கிசுகிசுக்கள் றெக்கை கட்டிப் பறக்கின்றன.

முதலில் அவர் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரனை காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. ஆனால் அதை அனிருத் மறுத்தார்.

அனிருத்துக்கும் காவ்யா மாறனுக்கும் இடையில் இருப்பது நட்பு மட்டும்தான் என்று அனிருத் தரப்பில் இருந்து இதற்கு பதில் வந்தது.

பின்னர் அவர் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த்தை காதலிப்பதாக செய்திகள் வெளியாகின.

சமீபத்தில் சன்ரைசர்ஸ் ஆணியின் தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் ஷர்மாவை அவர் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. ஆனால் இந்த கிசுகிசுவை உறுதிப்படுத்தும் தகவல்கள் ஏதும் இதுவரை வரவில்லை.

இந்தக் கிசுகிசுக்கள் குறித்து காவ்யா மாறனோ அவரது குடும்பத்தினரோ கவலைப்பட்டதில்லை.

அலுவலகத்தில் அவர் மிகவும் அன்பானவர் என்று அவரை அறிந்தவர்கள் கூறுகிறார்கள். சன் டிவி நிர்வாகத்தின் முக்கிய முடிவுகளை கலாநிதி மாறன் பார்த்துக் கொள்கிறார்.

தினசரி நடவடிக்கைகளில் முக்கியமானவற்றை காவிரி கலாநிதி கவனிக்கிறார். சன் மியூசிக் மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த நிகழ்ச்சிகளை காவ்யா மாறன் கவனித்துக் கொள்கிறாராம்.

அப்பா, அம்மாவைப் போல் அத்தனை ஸ்ட்ரிக்ட் ஆஃபிசர் இல்லை என்று சன் குழுமத்தில் இருந்து வரும் தகவல்கள் சொல்கின்றன.

சக ஊழியர்களிடம் சகஜமாகவும் அன்பாகவும் அடக்கமாகவும் பழகுவார். தெரியாததை கேட்டுத் தெரிந்துக் கொள்வார்.

அவரிடம் எளிதாக பழக முடியும் என்று அவரை அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

கோடீஸ்வர வாரிசுகள் அடக்கமாக இருப்பது அரிதுதானே. காவ்யா மாறன் அப்படி ஒரு அரிதான வாரிசு.

இந்த அடக்கமான வாரிசு மனம் நோகக் கூடாது என்று சூப்பர் ஸ்டார்கள் ரஜினியும் அமிதாப்பும் குரல் கொடுத்ததும் அரிதான சம்பவம்தான்.

அடுத்த ஐபிஎல்லுக்காக காத்திருக்கிறார்கள் காவ்யா மாறன் ரசிகர்கள்.

– பி.எம். சுதிர்

நன்றி: வாய் தமிழ் இணையதளம்

You might also like