நட்பின் பாசி படர்ந்த நினைவுகள் லேசில் அழிவதில்லை!

மீள்பதிவு:

அதிர்ச்சியூட்டும் படி இருக்கின்றன கொரோனா காலத்திய மரணங்கள்.

இன்று (28.05.2021) காலை கொரோனாவால் பாதித்த நிலையில் மறைந்திருக்கிறார் மூத்த பத்திரிகையாளரான இரா.ஜவகர்.

பொதுவுடமைத் தத்துவத்தில் ஆழ்ந்த ஈடுபாடு. தொழிற்சங்க இயக்கத்தின் மீது அளவற்ற நம்பிக்கை. எளிமையான தொண்டனுக்கும் புரியும்படியான குழப்பம் இல்லாத பேச்சு. பேச்சின் எளிமை கலந்த எளிமையும், உக்கிரமும் கூடிய எழுத்து.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு திரு.சின்னக் குத்தூசியின் அறையில் அறிமுகம். எப்போதும் பேச்சை ஆர்ப்பாட்டமான சிரிப்போடு ஆரம்பிப்பார் ஜவகர். மெரினாக் கடற்கரையில் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் பத்திரிகை நண்பர்கள் சின்னக்குத்தூசி சகிதமாகக் கூடுவோம்.

பல விஷயங்கள் குறித்து விவாதங்கள் நடக்கும். சில சமயங்களில் பிரபஞ்சமும், இளவேனிலும் வருகிறபோது சபையின் ஆரவாரம் அதிகரிக்கும்.

திராவிட இயக்க உணர்வோடு பேசுவார் சின்னக்குத்தூசி. பொதுவுடமைப் பார்வையை முன் வைத்துக் குரலை ஓங்கிப் பேசுவார் ஜவகர்.

சமயங்களில் மூன்று மணி நேரம் வரை கூட நீளும் அந்த ஒன்றுகூடலுக்குப் பிறகு வேர்க்கடலையைக் கொறித்தபடி நட்புணர்வுடன் பிரிந்து போவோம்.

தமிழன் எக்ஸ்பிரஸ், ஜூனியர் போஸ்ட் உள்ளிட்ட பல இதழ்களில் அவர் பணியாற்றிய போதும் அவருடைய எழுத்தின் பார்வை மாறியதில்லை.

எந்த ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டாலும், மிக எளிமையாக கட்டுரையை மெருகேற்றியிருப்பார். கட்டுரையின் உள்ளடக்கத்தில் அவ்வளவு நேர்த்தி வெளிப்பட்டிருக்கும்.
ஒரு கட்டுரைக்கான விஷயங்களைத் திரட்டும்போது “ஹோம் ஒர்க் பண்ண வேண்டியிருக்கு தோழர்” என்பார். பல புத்தகங்களை வாசித்து அந்த ஒருங்கிணைப்பின் சாரமாக அவருடைய கட்டுரை இருக்கும்.

சின்னக்குத்தூசிக்கும், ஜவகருக்கும் இருந்த உறவு அவ்வளவு நேசம் மிக்கதாக இருந்தது. அவரைத் தன்னுடைய ‘ஞானத்தந்தை’ என்றே சொல்வார்.

திருவல்லிக்கேணி வல்லப அக்ரஹாரத்தில் உள்ள சின்னக்குத்தூசி வாழ்ந்த குறுகிய அறைக்கு வாரா வாரம் வந்து விடுவார்கள் ஜவகரும், அவருடைய மனைவி பூரணமும்.

அவர்கள் வரும்போது முகம் மலரப் பேசிக் கொண்டிருப்பார் சின்னக்குத்தூசி. எந்த மாதிரி விவாதம் நீண்டாலும், பேச்சில் அன்பு பொதிந்திருக்கும்.

“இங்கே வர்ற ஒவ்வொருத்தருக்கும் ஒரு பார்வை இருக்கலாம். ஆனால் அதுக்காக நாம் நமக்குள் விரோதம் பாராட்டிக் கொள்ள வேண்டியதில்லை. எதற்காகவும் மனிதத்தை இழக்க வேண்டியதில்லை” என்பது தான் சின்னக்குத்தூசி, ஜவகர் இருவருடைய நிலைப்பாடாகவும் இருந்தது. அப்படித்தான் இருந்திருக்கிறார்கள் இருவருமே இறுதி வரையிலும்.

ஜவகருக்கு முதல்முறையாக மாரடைப்பு வந்தபோது துடித்துக் கண்கலங்கிப் போய்விட்டார் சின்னக்குத்தூசி.

அவருடன் இணைந்து மருத்துவமனைக்குப் போனபோது சி.குத்தூசியின் மனக்கொந்தளிப்பை உணர முடிந்தது.

“எல்லாத்தைப் பற்றியும் பேசுறீங்க ஜவகர்.. ஆனா உங்க உடம்பையும் நீங்க பார்த்துக்கிற வேண்டாமா?” – தழுதழுக்கிற குரலில் சின்னக்குத்தூசி சொல்லும்போது, ஜவகர் சிறு புன்னகையுடன் அதைக் கடந்து போனார்.

முதல் மாரடைப்பு வந்தபிறகு ஒருநாள் மாலை சின்னக்குத்தூசி அறைக்கு தனித்து வந்திருந்தார் ஜவகரின் மனைவியான பூரணம். ஆச்சர்யப்பட்ட சின்னக்குத்தூசி வந்த விபரத்தை விசாரித்ததுமே, பொங்கிய அழுகை வெளிப்பட்டது கல்லூரிப் பேராசிரியராக இருந்த அவரிடமிருந்து.

“மாரடைப்பு வந்துட்டுப் போயிடுச்சு. அவர் நல்லா இருக்கணும். அதுக்கு முதலில் சிகரெட்டை அவர் விடணும்.. நாங்க எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டோம். அவர் கேக்கலை. நீங்க வந்து சொன்னீங்கன்னா அவர் கேப்பார்.

நான் வந்ததை நீங்க சொல்ல வேணாம். இந்த வாரமே வாங்க” என்று சொன்னவர் அந்த அறையைவிட்டு வெளியேறும்போதும் கண் நிறைந்து அழுதார்.

“நீங்க போங்கம்மா.. இந்தா இருக்கார்லே இவரைக் கூட்டிட்டு ரெண்டு நாளுக்குள் வர்றேம்மா.. பார்த்துப் போங்க” என்று சாந்தப்படுத்தி அவர் வந்த ஆட்டோ வரை சென்று அவரை வழியனுப்பிவிட்டு வந்தார் சின்னக்குத்தூசி.

இரண்டு நாட்களுக்குப் பிறகு சின்னக்குத்தூசி தங்கியிருந்த அறைக்குப் போய், மாலை நேரத்தில் அவருக்குத் தெரிந்த ஆட்டோவில் திருவான்மியூர் பத்திரிகையாளர் குடியிருப்பில் இருந்த ஜவகரின் வீட்டுக்குப் போனோம்.

“நீங்க தான் ‘இந்த சிகரெட்டை விட்றலாமே’ன்னு பேச்சை ஆரம்பிக்கணும்.. அப்புறம் நான் சொல்லிக்கிறேன்” – எனக்குப் பயிற்சி கொடுக்கிற மாதிரி சொல்லிக்கொண்டு வந்தார் சின்னக்குத்தூசி.

வீட்டை நெருங்கியதும் ஜவகரின் மனைவி பூரணம் அவர்களின் முகத்தில் அப்படியொரு மலர்ச்சி. ஜவகருக்கு ஆச்சர்யம்.

“வாங்க… வாங்க… திடு திப்புன்னு வந்திருக்கீங்களே?” வாய் திறந்த சிரிப்புடன் வரவேற்று வீட்டுக்குள் அமர வைத்தார்.

கால் மணி நேரம் சம்பிரதாயமாகப் பேசிக்கொண்டிருந்தோம். அருகில் அமர்ந்திருந்த என்னை நிமிண்டினார் சி.குத்தூசி. பேச்சை எப்படித் துவக்குவது என்பதில் இருவருக்குமே தயக்கம் இருந்தது.

இதற்கிடையில் ஜவகருடன் பேசிக்கொண்டிருக்கும்போதே கீழே விழுந்த எதையோ எடுப்பதற்காக குனிந்தபோது, அவருடைய வெள்ளையான சட்டைப் பாக்கெட்டில் இருந்து வெளிவந்து கீழே விழுந்தன இரண்டு சிகரெட்கள்.

சிரித்தபடி அவர் எடுத்து மறுபடியும் சட்டைப் பாக்கெட்டில் ஜவகர் வைத்துக்கொண்ட போது, சின்னக்குத்துசியின் முகத்தில் வினோதமான முகபாவம்.

குடிக்கத் தண்ணீர் கேட்டார் சி.குத்தூசி. எழுந்து உள்ளே போனார் ஜவகர்.

அந்த இடைவெளியில் “இன்னைக்கு அவர்கிட்டே பேச வேணாம்னு பார்க்கிறேன். அவர் வந்ததும் எந்திரிச்சுருங்க. நாம கிளம்பிறலாம்” – கிசுகிசுப்பான குரலில் காது நெருங்கிச் சொன்னார் சின்னக்குத்தூசி.

“திடீர்னு வந்தீங்க.. இப்போ திடீர்னு கிளம்புறீங்களே?” – ஜவகர் கேட்டுக் கொண்டிருந்த போதும், ஆட்டோவில் ஏறிவிட்டோம் நாங்கள் இருவரும்.

பேசாமல் கனத்த மௌனத்தோடு வந்த சின்னக்குத்தூசி எங்கோ பார்வை பார்த்தபடி மென்மையாகச் சொன்னார்.

“எப்படிப்பட்ட அருமையான நண்பர்… பாருங்க.. இருந்தாலும் அவரோட உடல்நலத்திலே அவரை அக்கறை காட்டச் சொல்ல நம்மால் முடியலையே.. வருத்தமா இருக்கு” – என்றபடி அவர் சொன்னபோது அதில் அன்பின் வீர்யம் தெரிந்தது.

நட்பின் பாசி படர்ந்த நினைவுகளை லேசில் அழிக்க முடியவில்லை.

– மணா

#பத்திரிகையாளர்_இரா_ஜவஹர் #பூர்ணம்_ஜவஹர் #பொதுவுடமைவாதி #chinna_kuthusi #சின்னக்குத்தூசி #ira_jawahar

You might also like