கடவுள் என்னை பூமிக்கு அனுப்பினார்!

பிரதமர் மோடி பேச்சு

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளை சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்து வருவது கண்டனத்துக்கு ஆளாகி உள்ள நிலையில், ‘’நான் மனிதப்பிறவி அல்ல” என அவர் தெரிவித்திருப்பது, புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு மோடி அளித்த பேட்டியில், இந்த சர்ச்சை கருத்தை அவர் கூறியுள்ளார்.

அந்த பேட்டியில் அவர், ‘’என் தாயார் உயிரோடு இருக்கும்வரை, இந்த உலகிற்கு என் தாய் மூலம்தான் வந்தேன் என நம்பிக் கொண்டிருந்தேன் – ஆனால், என் தாயாரின் மரணத்திற்கு பிறகு, நான் பலவற்றை சிந்தித்துப் பார்க்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

‘’ரத்தமும், சதையும் கலந்த உடல்ரீதியான சக்திதான் அனைவரையும் இயக்குவதாக நினைத்திருந்தேன் – அப்படி இல்லை என்பதை இப்போது உணர்கிறேன் – நான் அதை ஏற்றுக்கொள்ளவும் செய்கிறேன் – சிலர் இதற்கு எதிராக பேசலாம் – மற்றவர்கள் இதனை விமர்சனம் செய்யலாம் – நான் ‘பயோலாஜி’ கலாக பிறக்கவில்லை – என்னை இந்த உலகிற்கு அனுப்பியது அந்த பரமாத்மாதான் – ஏதோவொரு விஷயத்தை நடத்த வேண்டும் என்பதற்காக, கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பியிருக்கிறார்.

எனக்குள்ள ஆற்றல் சாதாரண மனிதர் பெற்றிருக்கும் ஆற்றல் அல்ல – கடவுளால் மட்டுமே இந்த ஆற்றலை அளிக்க முடியும்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தப் பேச்சு இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.

’குழப்பத்தை ஏற்படுத்தும் மோடி’

தமிழகம், கர்நாடகம், தெலுங்கானா போன்ற மாநிலங்களில், அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை மாநில அரசுகள் அமல்படுத்தியுள்ளன.

கர்நாடகத்தில் நகரப்பேருந்துகளில் மட்டுமின்றி, அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம். இதனை குறை சொல்லி பிரதமர் மோடி பேட்டி அளித்திருந்தார்.

‘’அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை சில மாநில அரசுகள் செயல்படுத்துகின்றன – இதனால், மெட்ரோ ரயில்களில் 50 சதவீத பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது” என பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் கர்நாடக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்கா ரெட்டியும், மோடியின் கருத்துக்கு பதில் அளித்துள்ளார்.

‘’கர்நாடகத்தில் கடந்த 20-ம் தேதி வரை 67.34 கோடி பேர் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணித்துள்ளனர் – கடந்த ஓராண்டில் மெட்ரோ ரயிலில் பயணிப்போர் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளது” என கூறியுள்ளார்.

‘’மெட்ரோ ரயில்களில் வருவாயும் அதிகரித்துள்ளது – எனவே மாநில அரசின் இலவசப் பேருந்து பயணத் திட்டத்தால், மெட்ரோ ரயில்களில் பயணிகள் எண்ணிக்கை மற்றும் வருவாய் குறையவில்லை – இதுபோன்ற குற்றச்சாட்டுகளால், மக்களைக் குழப்ப பிரதமர் மோடி முயற்சிக்கிறார்” என கர்நாடக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

– மு.மாடக்கண்ணு

#மோடி #modi_speech_issue #modi #pm #metro #bus #பிரதமர் #கர்நாடக_போக்குவரத்துத்_துறை_அமைச்சர் #ராமலிங்கா_ரெட்டி # Karnataka_minister #Ramalinga_Reddy #மெட்ரோ_ரயில் #இலவசப்_பேருந்து

You might also like