அமெரிக்காவில் சாதி!

எழுத்தாளர் பாமரன்

நூல் விமர்சனம்:

கலிபோர்னியாவுக்குப் போனாலும் கருமம் தொலையாதுங்குற புதுமொழிக்கேற்ப திரைகடலோடியும் திரவியம் தேடச் சென்றவர்கள் எப்படி காலிடுக்கிலும் கக்கத்திலும் காவிச் சென்றனர் சாதியை என்பதை விலாவாரியாகச் சொல்லும் நூல்தான் இந்த ‘அமெரிக்காவில் சாதி.’

தோழி அருள்மொழியின் இரண்டாவது நூல் இது. முதல் சிறுகதைத் தொகுப்பான ‘டைரி’ உள்ளூர் சாதிய தலைக்கட்டுகளைப் புரட்டி எடுத்தது என்றால் இக்கட்டுரைத் தொகுப்பு வெளிநாடு வாழ் தறுதலைகளின் சாதீயச் சமாச்சாரங்களைப் புட்டுப்புட்டு வைக்கிறது.

“என்ன பெருமையடா ஏமாளின்னா… தவுட்டுப் பெருமையடா கோமாளி…” என்கிற கதையாய் அஞ்சு பைசாவுக்குக்கூடத் தேறாத இவர்களது சாதிப் பெருமைகளை எப்படி கடல்கடந்தும் சுமந்து செல்கிறார்கள் இந்த மானங்கெட்டவர்கள் என்பதை நெத்தியடியாய்ச் சுட்டுகிறது இந்தப் புத்தகம்.

மன்னர்கள் பிரிட்டிஷ்காரர்கள் தலையில் மிளகாய் அரைத்தது போதாதென்று அந்நியன் வெளியேறிய மறுதினமே அமெரிக்காவுக்கு விசா அப்ளை பண்ணிய கோட்சே சொந்தக்காரர்களின் அலப்பரை ஐம்பதுகளிலேயே ஆரம்பமாகிவிடுகிறது அமெரிக்காவில்.

கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் கால்வைத்த முதல் தலைமுறையினர் பொறியியலிலும் கணிணி தொழில்நுட்பத்திலும் தேர்ச்சி பெற்ற தங்களது பிள்ளைகளை தொண்ணூறுகளில் விமான நிலையங்களுக்கு முதல்முறையாக வந்து வழியனுப்பி வைக்கின்றனர்.

இவ்விரு கூட்டத்துக்கும் அமெரிக்க வருகைக்குமான இடைவெளி என்பது ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள்.

உள்ளூரில் சகல செளபாக்கியங்களையும் பெற்ற முன்னதும் ஏற்றதாழ்வுகளால் சோத்துக்குச் சிங்கியடித்த பின்னதும் அமெரிக்காவில் சந்தித்துக் கொண்டபோது ”சமத்துவத்தின்” சின்னமாக, ”சகோதரத்துவத்தின்” பின்னமாக எப்படி ”ஒருதாய் மக்களாக” ஒன்றிப் போய் நின்றனர்… நிற்கின்றனர் என்பது பற்றிய புத்தகம்தான் “அமெரிக்காவில் சாதி.”

இந்தப் போலி சமத்துவமும் சகோதரத்துவமும் வேலை செய்யும் இடங்களில் பல்லிளிக்க முதல் வழக்கு பதிவாகிறது சிலிக்கான் வேலி – கலிபோர்னிய மாகாணத்தில்.

அங்குள்ளவர்களுக்கு நிறவேற்றுமை தெரியும். மத வேற்றுமை தெரியும். ஆனால் சாதி வேற்றுமை…?

ஒபாமாவுக்கு தென்கலைன்னா என்ன வடகலைன்னா என்ன தெரியுமா?
புஷ்ஷுக்கு காடைகூட்டம்ன்னா தெரியுமா இல்ல மணியங்கூட்டம்ன்னா தெரியுமா?
இல்ல இப்போதிருக்கிற பைடனுக்கு நீங்க ஷத்திரியரா வெள்ளாளரான்னா புரியுமா?
ஆக அவனுக்குத் தெரியாத ஒன்றைப்பற்றி சட்டம் இயற்றத் தேவையுமில்லை….
அதற்கான அவசியமும் இல்லை.
.
ஆனால் ஆனானப்பட்ட அமெரிக்கனுக்கே
அதைப்பற்றி புரியவைத்தவர்கள்
இங்கிருந்து ஐம்பதுகளிலேயே ஹைஜம்ப்பில் அமெரிக்காவில் குதித்த அத்திம்பேர் வகையறாக்கள்தான்.
.
அப்படிப்பட்ட ஒரு வழக்குதான் Cisco Systems நிறுவனத்தில் நிலவிய சாதிய பாகுபாடுகளுக்கு எதிராக எழுந்த வழக்கு.
.
தனது மேலதிகாரிகளான
சுந்தர் அய்யர், ரமணா கெம்பல்ல இருவரும்
தன்னை எவ்விதமெல்லாம் சாதிய பாகுபாடுகளோடு நடத்துகிறார்கள் என ஊழியர் புகார் கொடுக்க….
அந்த வழக்கை எந்த செக்சனில் பதிவது….?
இதற்கு என்ன தண்டனை கொடுப்பது…? என முழிக்கிறது கலிபோர்னிய மாநில அரசு.
.
அப்போதுதான் ஷாமா சாவந்த் என்கிற பெண்மணியும் அவரது தோழர்களும் இணைந்து
நிறப்பாகுபாடு… மதப்பாகுபாடு… பாலினப்பாகுபாடு… போன்று சாதியப் பாகுபாடுகளுக்கு எதிராகவும் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று சியாட்டில் நகரில் குரல் கொடுக்கின்றனர்.
.
அவர்கள் எவ்விதமெல்லாம் போராடினார்கள்…. அவர்களோடு தங்கள் கரங்களைக் கோர்த்துக் கொண்ட நல்லுள்ளங்களெல்லாம் யார் யார்…
என்பதையெல்லாம் விலாவாரியாக விவரித்திருக்கிறார் அருள்மொழி.
.
உலக அரங்கில் (மேற்கத்திய நாடுகளில்) முதல்முறையாக சாதியப்பாகுபாடுகளுக்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டது அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் தான் என
அவர் குறிப்பிடும்போது வியப்பு ஏற்படுகிறது.
.
இதற்குத் துணை நின்றவர்களில் அம்பேத்கர் கிங் படிப்பு வட்டம் (Ambedkar King Study Circle), ஈக்குவாலிட்டி லேப் (Equality Lab) போன்ற அமைப்புகளது பங்களிப்பு என்றும் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று.
.
இதைப்போலவே சாதியப்பாகுபாட்டினை சிவில் குற்றமாக சட்டத்தில் இடம்பெறச் செய்யும்
SB – 403 எனும் சட்ட மசோதாவை கலிபோர்னியாவில் கொண்டுவர முயற்சித்த கதையைச் சொல்கிறார் நூலாசிரியர்.
.
சாதிய ஒடுக்குமுறைகள் கூடாது என்பதற்காக முன்மொழியப்பட்ட அந்த மசோதாவைப் பற்றி…
.
அதற்கான தடை எந்தெந்த ரூபங்களில் எல்லாம் வந்தது….
.
பொதுவிவாதம்… வாக்கெடுப்பு என அனைத்திலும் வெற்றி பெற்றும் அம்மாகாண கவர்னர் நியூசம் டேபிளுக்குப் போனபோது அந்த மகான் ”இந்த சட்டம் அவசியமற்றது” என்று ஒற்றை வரியில் நிராகரிக்கிறார்.
.
ஒருவேளை இவர் நம்மூர் ரம்மி ரவியின் ஒன்றுவிட்ட தம்பியாகவோ அண்ணனாகவோ இருப்பதற்கு சகல சாத்தியக்கூறுகளும் இருக்கின்றது.
.
இந்தக் கைங்கர்யத்திற்குப் பிரதிபலனாக இந்துமத வெறியர்கள் அடுத்த தேர்தலில் அவருக்கு எவ்விதமெல்லாம் கால்கழுவும் ஒப்பந்தங்களில் இருக்கிறார்கள் என்பதையெல்லாம் வாசிக்கும்போது ஒரு மர்ம நாவலுக்குள் புகுந்து வந்த உணர்வே ஏற்படுகிறது.
.
இந்தக் கண்றாவிகளையெல்லாம் தாண்டி…
முன்னாடி போன முண்டங்களாகட்டும்…
பின்னாடி போன Converted பார்ப்ஸ்கள் ஆகட்டும்…
அங்கு போயும் குடும்ப விழாக்கள் என்கிற பெயரால் ஜாதி ரீதியாக ஜோடி சேர்ந்து கும்மியடிப்பது…

இரட்டைக் குவளை மனோபாவத்தில் வீட்டுக்கு வந்த விருந்தாளிக்கு சத்தமில்லாமல் வேறு தட்டில் பரிமாறுவது…

மாப்பிள்ளையோ பொண்ணோ தேடும்போது உட்பிரிவையும் நாசூக்காக நாசாவுக்கே அனுப்பி துப்பறிந்து சந்ததி “விருத்தி” செய்வது…

இதில் உபநயன விழாக்களோ…? கேட்கவே வேண்டாம் போங்கோ… அது தனீ ரகம்.
.
காஞ்சிபுர தேவநாத குருக்களுக்கே சவால் விடக்கூடிய குருக்கள் அங்குள்ள கதைகளையும்…
அவர்களது லீலைகளையும் பேசப்போனால் இந்த அணிந்துரை வேறொன்றாக மாறிவிடக் கூடிய அபாயம் இருக்கிறது.
.
இத்தனையிலும் தங்களது ”திறமையைக்” காட்டுபவர்கள் அங்குள்ள பாடப் புத்தகங்களில் மட்டும் காட்டாமல் இருப்பார்களோ….?
.
அங்கும் காட்டினார்கள்…
வருகை படையெடுப்பாயிற்று.
படையெடுப்பு வருகையாயிற்று.
.
இந்த கர சேவை எல்லாம்
வேதிக் பவுண்டேஷன் (Vedic Foundation)…
ஹிந்து சுயம் சேவக் (Hindu Suyam Sevak – HSS)…
விஷ்வ ஹிந்து பரிஷத் (VHP) போன்றோரது கைங்கர்யம் என்பது சொல்லாமலே புரியும் உங்களுக்கு.
.

இப்படிப் புரிந்தது புரியாதது… தெரிந்தது தெரியாதது… அறிந்தது அறியாதது… என எண்ணற்றவை உண்டு இந்த நூலில்.
.
இந்த நூல்:
தன் தாயும் தந்தையும் பட்ட துயரங்களை தீர்த்தாக வேண்டும் என்கிற கனவோடு நாளை விமானப்படிக்கட்டுகளில் கால்வைக்கும் தலைமுறைக்கும்….
ஏற்கெனவே கால் பதித்தாலும் இத்தனை பாகுபாடுகளை எப்படி எதிர்கொள்வது என திகைத்து நிற்கும் முந்தைய தலைமுறைக்கும்….
.
தோலுரிக்க வேண்டியவர்கள் யார்…?
தோள் கொடுக்க வேண்டிய தோழமை சக்திகள் யார்…?
என்பதைத் துல்லியமாகச் சொல்கிறது.
.
இதன் வழியில் தொடரட்டும் உங்கள் இனிதான பயணம்.
.
தடம் காட்டும் அருள்மொழிக்கும் துணை நிற்கும் நண்பர்களுக்கும் எம் அன்பு.
.
இப்படியொரு அட்டகாசமான புத்தகத்தையும் பதிப்பித்து அதற்கொரு மொக்கையான அட்டையையும் அணிவித்திருப்பவர்கள் பாரதி புத்தகாலயத்தினர்.
.
புத்தகம் வேண்டுவோர் All Side ம் Attack பண்ண வேண்டிய அலைபேசி எண் : 94430 66449.

நன்றி: பாமரன் முகநூல் பதிவு

You might also like