கூத்துப்பட்டறையால் செதுக்கப்பட்ட மகாக் கலைஞன்!

கோலிவுட் சினிமா என்று அழைக்கப்படும் தமிழ் சினிமா கோடம்பாக்கத்தை மையமாக வைத்து இயங்கி வந்தாலும், இதில் பணியாற்றும் நடிகர்கள், டாப் டெக்னீஷயன்கள் போன்ற பெரும்பாலனவர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த தமிழ் சினிமாவில் தனக்கென தனியொரு இடத்தை பிடித்தவர்களில் முக்கியமானவர் நடிகர் பசுபதி.

கூத்துப்பட்டறை டூ நடிகர்

வட சென்னை பகுதியில் அமைந்திருக்கும் வண்ணான்துறையில் தான் பசுபதி பிறந்த ஊர் என கூறப்படுகிறது. நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட அவர் 1980-களில் கூத்துப்பட்டறையில் சேர்ந்து பல்வேறு நாடகங்களில் நடித்துள்ளார்.

அப்போது அங்கு இருந்த நாசருடன் பழக்கம் ஏற்பட்டு அவரது நண்பராகியுள்ளார். 1990-களின் பிறபகுதியில் சினிமாவில் நடிப்பதற்கு முன்பு வரை கூத்துப்பட்டறையில் முக்கிய கலைஞராக இருந்து வந்துள்ளார் பசுபதி.

அத்துடன், கூத்துப்பட்டறையில் இருந்த தமிழ் சினிமாவுக்கு வந்து முத்திரை பதித்த நடிகர்களின் முக்கியமானவாராக இருந்து வருகிறார்.

மிரட்டல் வில்லனாக அறிமுகம்

பசுபதியின் நடிப்பு திறமையைக் கண்டு வியந்துபோன நடிகர் நாசர், அவரை கமலிடம் அறிமுகப்படுத்திய நிலையில் மருதநாயகன் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து.

ஆனால் அந்த படம் பாதியில் நின்றது உலகறிந்த விஷயம்.

இதற்கிடையே பார்த்திபன் இயக்கி நடித்த ஹவுஸ்ஃபுல் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றிய பசுபதி, நாசர் இயக்கிய மாயன் படத்தில் மிரட்டல் வில்லனாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இதைத்தொடர்ந்து மணிரத்னத்தின் கன்னத்தில் முத்தமிட்டால், விக்ரம் நடித்த தூள், எஸ்பி ஜனநாதன் இயக்கிய இயற்கை போன்ற படங்களில் வில்லன், குணச்சித்திரம் போன்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்.

திருப்புமுனை தந்த விருமாண்டி

கமலின் விருமாண்டி படத்தில் கொத்தால தேவர் என்ற முக்கிய கதாபாத்திரத்தில், படம் முழுவதும் தோன்ற வில்லத்தனத்தில் மிரட்டியிருப்பார். பின்னர் வழக்கமான கமர்ஷியல் பட வில்லனாக மாறிய பசுபதி, ஒவ்வொரு படத்தில் தனது கேரக்டர் மூலம் பேச வைத்தார்.

தனுஷின் சுள்ளான் படத்தில் சூரி, விஜய்யின் மதுர படத்தில் கேடிஆர், திருப்பாச்சி படத்தில் பட்டாசு பாலு என கலக்கினார்.

குணச்சித்திரம் மற்றும் ஹீரோ

வில்லன் கதாபாத்திரத்தில் இருந்து குணச்சித்திரம், கதையின் நாயகன் என தனது நடிப்பை ஷிப்ட் செய்த பசுபதி அதிலும் ஜொலித்தார்.

மீண்டும் கமலுடன் இணைந்து மும்பை எக்ஸ்பிரஸ் படத்தில் நடித்த அவர் காமெடி கலந்த வில்லனாக ப்ளாக் காமெடியில் ரசிக்க வைத்திருப்பார்.

தொடர்ந்து மஜா படத்தில் விக்ரமின் அண்ணனாக இரண்டாவது ஹீரோவாகவும், வெயில் படத்தில் பரத் அண்ணனாக கதையின் நாயகனாகவும் நடித்திருப்பார்.

குறிப்பாக வெயில் படத்தில், வாழ்க்கையில் தோல்வி அடைந்த ஒரு மனிதனின் கதாபாத்திரத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தும் விதமாக இருக்கும் பசுபதியின் நடிப்பு பாராட்டுகளைப் பெற்றது.

ஈ, குசேலன், அரவான் போன்ற படங்களில் கதைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்கள் தோன்ற ரசிகர்களின் மனதில் பதிந்தார்.

கடந்த 2019-ல் வெளியான அசுரன், 2021-ல் வெளியான சார்பட்டா பரம்பரை படங்கள் பசுபதி நடிப்பின் மற்றொரு பரிணாமத்தை வெளிக்காட்டும் விதமாக அமைந்தது.

குறிப்பாக சார்பட்டா படத்தில் ரங்கன் வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில், நிஜமாகவே வாழ்ந்து வந்த அந்த கேரக்டரை ஸ்கரீனில் பிரதிபலித்திருப்பார். ரங்கன் வாத்தியாராக அவரது நடிப்பு ரசிகர்களால் வெகுவாக கொண்டாடப்பட்டது.

எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் தங்கலான்

பா. ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் விக்ரமுடன் இணைந்து தங்கலான் படத்தில் நடித்துள்ளார் பசுபதி.

எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் படம் முடிவடைந்து ரிலீசுக்காக காத்திருக்கிறது.

இதுதவிர கமல்ஹாசனுடன் இணைந்து கல்கி 2898 ஏடி என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

பொன்னியின் செல்வன் நாடகமாக அரங்கேற்றிய போது, அதில் ஆதித்தய கரிகாலனாக நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.

தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் பசுபதி நடித்திருக்கிறார். வில்லன், குணச்சித்திரம், காமெடி, ஹீரோ என அனைத்து விதமான கதாபாத்திரமும் நடிக்கக்கூடிய மகா கலைஞனும், சென்னை மண்ணின் மைந்தனாகவும் வலம்வருகிறார் பசுபதி.

– நன்றி: இந்துஸ்தான் தமிழ்

#Pasupathy #பசுபதி_நடிகர் #பசுபதி #நடிகர்_நாசர் #சார்பட்டா_பரம்பரை #தங்கலான் #பா_ரஞ்சித் #sarpatta_parambarai #actor_Pasupathy_bday_spl #naazar #thagalan #pa_ranjith

You might also like