கைது மூலம் எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த நினைக்கும் ஆளும் கட்சி!

- அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

மதுபானக் கொள்கை வழக்கில், உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியதைத் தொடர்ந்து சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு, இன்று டெல்லியின் கன்னாட் பகுதியில் உள்ள ஹனுமன் கோயிலில் அரவிந்த் கெஜ்ரிவால் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கெஜ்ரிவால், “ஆம் ஆத்மி என்பது இரண்டு மாநிலங்களில் ஆட்சி செய்யக்கூடிய சிறிய கட்சி. ஆனால், நமது கட்சியை அழிப்பதற்கான எந்த வாய்ப்பையும் பிரதமர் தவறவிடவில்லை.

என்னைத் தொடர்ந்து நமது கட்சியைச் நான்கு தலைவர்களை சிறைக்கு அனுப்பி உள்ளார். நம்மை அழிக்க வேண்டும் என பிரதமர் எண்ணுகிறார். நாட்டிற்கு சிறந்த எதிர்காலத்தை ஆம் ஆத்மி தரும் என அவர் நம்புகிறார்.

கடந்த 75 ஆண்டுகளில் எந்தக் கட்சியும், நம்மை போன்று துன்புறுத்தலை சந்தித்ததில்லை.

ஊழலுக்கு எதிராக போராடுவதாக பிரதமர் சொல்கிறார். ஆனால், அனைத்து திருடர்களும் அவரது கட்சியில் தான் உள்ளனர்.

பா.ஜ.க, வெற்றி பெற்றால், மம்தா பானர்ஜி, ஸ்டாலின், உத்தவ் தாக்கரே, பினராயி விஜயன் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட வாய்ப்புள்ளது.

ஊழலுக்கு எதிராகப் போராட வேண்டும் என பிரதமர் எண்ணினால், அவர் என்னிடம் இருந்து பாடம் படிக்க வேண்டும்.

டெல்லியில் ஆட்சி அமைத்த பிறகு, எனது அமைச்சர்களில் ஒருவரை டிஸ்மிஸ் செய்து நான் சிறைக்கு அனுப்பினேன். பஞ்சாபில், அமைச்சர் ஒருவரை சிறைக்கு அனுப்பினோம்.

என்னை கைது செய்ததன் மூலம் எந்தத் தலைவரையும் கைது செய்ய முடியும் என நினைக்கின்றனர். அவர்களின் இந்த இயக்கத்திற்கு ஒரே நாடு, ஒரே தலைவர் என பெயர் சூட்டி உள்ளனர்” எனக் கூறினார்.

You might also like