ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது.
இந்த நிலையில் அட்சய திருதியையொட்டி நேற்று ஒரே நாளில் தங்கத்தின் விலை 3 முறை உயர்ந்துள்ளது. நேற்று காலை சவரனுக்கு ரூ. 360 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 53,280க்கும், கிராம் ஒன்றின் விலை ரூ.6660க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து சற்று நேரத்தில் மீண்டும் இரண்டாவது முறையாக ரூ. சவரனுக்கு 360 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 53,640க்கு விற்பனை செய்யப்பட்டது. மீண்டும் 3-வது முறையாக கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ. 6,770-க்கும், சவரனுக்கு ரூ. 520 உயர்ந்து ரூ. 54, 160-க்கு விற்பனை செய்யப்பட்டது.
விலை உயர்ந்தால், ஒரு கிராம் தங்கம் வாங்கினால் ரூ.50 முதல் ரூ.100 வரை சிறப்புத் தள்ளுபடி, பழைய தங்கத்தை மாற்றி புதிய தங்கம் வாங்கினால் பழைய தங்கத்துக்கு கிராமுக்கு ரூ.50 கூடுதலாக அளிப்பு, செய்கூலி, சேதாரம் தள்ளுபடி, வைர நகைகளுக்கு ரூ.10,000 வரை தள்ளுபடி என பல சிறப்புத் திட்டங்களை நகைக்கடைகள் அறிவித்ததால் கடைகளில் கூட்டம் அலைமோதியது.
சென்னை மட்டுமல்லாமல் கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாநகரங்கள் மட்டுமல்லாது சிறிய நகரங்களில் உள்ள நகைக்கடைகளிலும் சிறப்பு விற்பனை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள நகைக் கடைகளில் நேற்று மொத்தம் 24,000 கிலோ தங்கம் விற்பனையானதாகவும் விற்பனையான தங்கத்தின் மதிப்பு ரூ.14,000 கோடி என்றும் தெரியவந்துள்ளது.
விற்பனையான தங்கத்தில் 80 சதவீதம் ஆபரண நகைகள் என்றும் 20 சதவீதம் நாணயங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.