தமிழ் சினிமாவில் 80-களில் ஓங்கி ஒலித்த குரல் ஜென்ஸியுடையது. புகழின் உச்சத்தில் இருந்த காலத்தில் திடீரென்று திரையிசையை விட்டு விலகிய ஜென்ஸி, குடும்பத் தலைவியாகவும், ஆசிரியையாகவும் மாறினார்.
கேரளாவில் உள்ள எர்ணாகுளத்தில் இருக்கும் ஜென்ஸி இணைய இதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியின் ஒரு பகுதி.
கேரளாவில் கச்சேரிகளில் பாடிக்கொண்டிருந்த உங்களை, இளையராஜா தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியது எப்படி?
தாஸேட்டன்தான் (ஜேசுதாஸ்) என்னை இளையராஜாவிடம் அறிமுகப்படுத்தினார்.
இளையராஜா மிகவும் கோபக்காரர் என்று சிலர் சொல்வார்கள். நீங்கள் அவரிடம் பாடியபோது உங்களை திட்டியிருக்கிறாரா?
இளையராஜா என்னை அவ்வளவாக திட்டியதில்லை. நான் தவறுகள் செய்தாலும் அவர் எனக்கு பொறுமையாக சொல்லிக் கொடுப்பார்.
நீங்கள் பாடிய பாடல்களிலேயே அதிகம் கஷ்டப்பட்டு பாடிய பாடல் எது?
‘புதிய வார்ப்புகள்’ படத்தில் வரும் ‘தம்தன… தம்தன… தாளம் வரும்” பாடலை மிகவும் கஷ்டப்பட்டு பாடினேன். இந்த பாடல் பல டேக்குகளை வாங்கியது.
அதேபோல் ‘மெட்டி’ படத்தில் வரும், ‘கல்யாணம் என்னை முடிக்க..’ பாடலையும் நான் மிகவும் கஷ்டப்பட்டு பாடினேன்.
இதில் நாதஸ்வரம் போன்ற இசைக்கருவிகளுக்கு இணையாக பாடவேண்டி இருந்ததால் ரொம்பவே கஷ்டப்பட்டேன்.
தமிழில் நீங்கள் இளையராஜா இசையில்தான் அதிகம் பாடியிருக்கிறீர்கள். மற்ற இசையமைப்பாளர்கள் இசையில் அதிகம் பாடாதது ஏன்?
நான் அப்போது கேரளாவில் குடியிருந்தேன். இளையராஜா பாடுவதற்கு அழைத்தால் மட்டுமே சென்னைக்கு வந்து சென்றேன்.
அந்த காலத்தில் மற்ற இசையமைப்பாளர்களை சந்தித்து வாய்ப்பு கேட்க வேண்டும் என்றெல்லாம் எனக்கு தெரியவில்லை. அதனால் வாய்ப்புகள் வந்தால் மட்டுமே பாடினேன். அப்படியும் சங்கர் கணேஷ் மற்றும் கங்கை அமரன் இசையில் சில பாடல்களைப் பாடியிருக்கிறேன்.
தமிழ் சினிமாவில் புகழின் உச்சியில் இருந்த நேரத்தில் நீங்கள் திடீரென்று பாடுவதை நிறுத்திவிட்டீர்கள். இப்படி ஒரு முடிவை ஏன் எடுத்தீர்கள்?
இதே கேள்வியை பலரும் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். நான் பிஸியாக இருந்த நேரத்தில் எனக்கு கேரளாவில் ஆசிரியையாக வேலை கிடைத்தது.
அப்போது சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைப்பது நிச்சயமில்லை, ஆனால் ஆசிரியர் வேலை நிரந்தரமாக இருக்கும் என்று பலரும் எனக்கு ஆலோசனை கூறினார்கள். அதனால் நான் சினிமா உலகை விட்டு சென்றுவிட்டேன்.
ஆனால் அப்போதே இளையராஜா நான் இசையுலகை விட்டு வேலைக்கு போகக்கூடாது என்றார். ஆனால் நான்தான் கேட்கவில்லை.
திரையுலகில் உங்களுக்கு நெருக்கமான தோழி யார்?
நானும் சுஜாதாவும் சிறு வயதில் இருந்தே பல கச்சேரிகளில் ஒன்றாக கலந்துகொண்டுள்ளோம். அதனால் எனக்கு மிகவும் நெருக்கமான தோழி என்று சுஜாதாவைச் சொல்ல்லாம்.
எஸ்.ஜானகி, பி.சுசீலா ஆகிய இருவரையும் என் தோழிகள் என்று சொல்ல முடியாது. அவர்கள் இருவரும் எனக்கு மூத்தவர்கள். இருந்தாலும் நான் இன்னும் எஸ்.ஜானகியுடன் தொடர்ந்து அடிக்கடி போனில் பேசி வருகிறேன். அவரது சிறந்த பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் நான் அவரை போனில் அழைத்து பேசுவேன். அவரும் என்னுடன் நன்றாகப் பேசுவார்.
நீங்கள் பாடியதிலேயே உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் எது?
‘காதல் ஓவியம்… பாடும் காவியம்…’ பாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும்.
இளையராஜாவை கடைசியாக நீங்கள் எப்போது பார்த்தீர்கள்?
‘இளையராஜா 1000’ நிகழ்ச்சியின்போது அவரை கடைசியாக சந்தித்தேன். சமீபத்தில் அவரது மகள் பவதாரிணி இறந்தபோது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அவரை சந்திக்க விரும்பினேன். ஆனால் அப்போது நான் ஆஸ்திரேலியாவில் உள்ள மகள் வீட்டில் இருந்ததால் என்னால் போக முடியவில்லை.
ஆனால், இளையராஜாவை மீண்டும் பார்க்க விரும்புகிறேன். எப்போதாவது சென்னைக்கு வந்தால் அவரைச் சந்திப்பேன்.
நீங்கள் இப்போது எப்படி இருக்கிறீர்கள்?
நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் கணவர் கிரிகரி தாமஸ் பிசினஸ் செய்கிறார். குழந்தைகள் நன்றாக இருக்கிறார்கள்.
மீண்டும் பாட வருவீர்களா?
வரணும்னு இருக்கு. வருவேன்.
- நன்றி : வாவ் தமிழா இணைய இதழ்