சிறிய பட்ஜெட்டில் தயாராகும் திரைப்படங்கள் தான், சினிமா துறையை வாழ வைப்பதாகப் பேச்சுகள் எழுவது அவ்வப்போது நிகழும். அதற்கேற்பச் சில படங்கள் கவனிக்கத்தக்க வரவேற்பைப் பெறும்.
அவற்றில் சில, ‘எவர்க்ரீன்’ அந்தஸ்தைப் பெறும்; திரும்பத் திரும்ப ரசிகர்களால் ரசித்துக் கொண்டாடத்தக்கதாக மாறும். இந்தி திரையுலகில் குறிப்பிடத்தக்க நடிகராக வலம் வரும் குணால் கேமு, ஒரு இயக்குனராக அறிமுகமாகியிருக்கும் ‘மட்காவ்ன் எக்ஸ்பிரஸ்’.
‘ஸ்கேம் 1992’ பிரதீக் காந்தி, ‘மிர்ஸாபூர்’ திவ்யேந்து, ‘பம்பாய் மேரி ஜான்’ அவினாஷ் திவாரி என்று இதில் வெப்சீரிஸ்களில் நடித்து புகழ் பெற்ற மூன்று பேர் நாயகர்களாக நடித்துள்ளனர். இந்த படம் எப்படிப்பட்ட நகைச்சுவையை நம்முள் நிறைக்கிறது?
கோவா செல்லும் கனவு!
தனுஷ் சாவந்த் எனும் டோடோ (திவ்யேந்து), பிரதீக் கொராடியா எனும் பிங்கு (பிரதீக் காந்தி), ஆயுஷ் குப்தா (அவினாஷ் திவாரி) மூவரும் பள்ளிப் பருவத்தில் இருந்தே நண்பர்கள்.
‘தில் சாஹ்தா ஹை’ படத்தில் வருவது போன்று கோவா செல்வதன் மூலமாகத் தங்களது வாழ்க்கையில் பல மாறுதல்கள் ஏற்படும் என்ற நம்பிக்கை பதின்ம வயதில் அவர்களைத் தொற்றுகிறது.
பள்ளிப் படிப்பு முடிந்ததும் அதனைச் செயல்படுத்த முனைகின்றனர்; அவர்களால் இயலவில்லை. கல்லூரி முடித்ததும் கோவாவுக்குக் கிளம்பும்போது ஒரு விபத்து ஏற்படுகிறது.
கால ஓட்டத்தில், பிங்கு தனது குடும்பத்தினரோடு தென்னாப்பிரிக்காவில் உள்ள கேப்டவுனில் செட்டில் ஆகிறார். அங்கு ஒரு வேலையில் சேர்ந்து நன்றாகச் சம்பாதிக்கத் தொடங்குகிறார்.
ஆயுஷ் நியூயார்க் சென்று கை நிறையச் சம்பாதிக்கிறார். ஆனால், டோடோவுக்கு அப்படியொரு சந்தர்ப்பம் அமையவில்லை.
சின்னச் சின்னதாகச் சில வேலைகளைச் செய்துகொண்டு, அந்த பணத்தைக் கொண்டு ஆடம்பரமாக வாழ முடியவில்லையே என்று கவலைப்படுகிறார். தனது தந்தையோடு மிகச்சிறிய பிளாட்டில் வசிக்கிறார்.
அக்கம்பக்கத்தில் மட்டுமல்லாமல் வெளியிடங்களிலும் டோடோவுக்கு நண்பர்கள் வாய்க்கவே இல்லை. ஒருகட்டத்தில் சமூகவலைதளங்களில் அவர் நட்பைத் தேடத் தொடங்குகிறார். அப்போது பிங்கு, ஆயுஷை மீண்டும் கண்டெடுக்கிறார்.
அவர்களிடத்தில் தான் வளமாக வாழ்வது போன்று பொய்யான பிம்பத்தை உருவாக்குகிறார் டோடோ. பல பிரபலங்களோடு தான் ‘செல்ஃபி’ எடுத்துக்கொண்டது போன்று ஏமாற்றுகிறார். அது, அந்த தளங்களில் அவரைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.
திடீரென்று ஒருநாள் பிங்குவும் ஆயுஷும் மும்பை வருவதாகச் சொல்கின்றனர். ‘உன்னோட பங்களாவுலயே தங்குறோம்’ என்கின்றனர். ‘போட்டோஷாப் உதவியோடு தான் இட்ட பொய்யான தகவலை நம்பிவிட்டார்களே’ என்று அதிரும் டோடோ, அவர்களைத் திசை திருப்ப ‘நாம் கோவா செல்லலாம்’ என்கிறார்.
தன்னிடம் இருக்கும் பணத்தில் விமானத்தில் அவர்களை அழைத்துச் செல்ல முடியாது என்றெண்ணும் டோடோ, ‘மட்காவ்ன் எக்ஸ்பிரஸ்’ ரயிலில் அவர்களைக் கோவா அழைத்துச் செல்ல முயல்கிறார்.
‘கல்லூரி முடிந்தபோது நாம் என்ன சூழலில் இருந்தோமோ, அதேபோன்று ஒரு பயணம் மேற்கொள்வோம்’ என்று கூறி அவர்களைச் சமாளிக்கிறார் டோடோ. ஆனால், விதி வேறு வடிவில் குறுக்கிடுகிறது.
தான் கையில் வைத்திருந்த மருந்து பேக்குக்கு பதிலாக, வேறொரு நபரின் பேக்கை எடுத்துச் செல்கிறார் பிங்கு. அதில் துப்பாக்கி, ஒரு ஹோட்டல் அறையின் சாவி, கட்டுக்கட்டாகப் பணம் ஆகியன இருக்கின்றன.
அதனை வீசியெறிந்துவிடுவதாக ஆயுஷ், பிங்குவிடம் சொல்லும் டோடோ, அவர்களுக்குத் தெரியாமல் பணத்தையும் சாவியையும் கையில் எடுத்துக் கொள்கிறார்.
தங்க இடம் கிடைக்காமல் மதுபான விடுதிக்குச் செல்லும் மூவரும் எதிர்பாராதவிதமாக ஒரு போதைப்பொருளைச் சுவைக்கின்றனர். அதற்கடுத்த நாள் ஒரு ஹோட்டல் அறையில் தாங்கள் இருப்பதைக் காண்கின்றனர்.
டோடோ தங்களை ஏமாற்றிவிட்டதாக உணரும் பிங்குவும் ஆயுஷும் அவரை கும்மியெடுக்கத் தொடங்குகின்றனர்.
அப்போது, அந்த அறையில் இருந்த கட்டில் மீது விழுகிறார் பிங்கு. அசுத்தக் குறைவைச் சிறியளவில் கண்டாலே அலர்ஜியில் அலறும் அவர், கட்டிலின் அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கொக்கைன் குவியலில் விழுகிறார். அதன்பிறகு அவரது சுபாவமே தலைகீழாகிறது. மிகப்பெரிய பலசாலி போல உணர்கிறார்.
இன்னொரு புறம் அந்த போதைப்பொருளைத் தேடி மெண்டோசா பாய் (உபேந்திரா லிமாயே), காஞ்சன் கோம்ப்டி (சாயா கடம்) தலைமையிலான ரவுடிக் கும்பல்கள் அங்கு வருகின்றன. அதேநேரத்தில் போலீசாரும் அங்கு வருகின்றனர்.
தங்களைச் சுற்றி நடக்கும் அசம்பாவிதங்களை அறிந்தபிறகு மூவரும் என்ன செய்தார்கள்? எந்தவிதக் குற்றத்திலும் ஈடுபடாத அவர்கள் அப்பிரச்சனையில் இருந்து விடுபட்டார்களா என்பதை வயிறு குலுங்கச் சிரிக்கும் வகையில் சொல்கிறது இப்படத்தின் மீதி.
கோவா செல்வதை வாழ்நாள் கனவாகக் கொண்ட மூன்று பேர், அதனைச் செயல்படுத்த முயலும்போது என்னவானார்கள் என்பதுதான் இதன் ஒருவரிக் கதை. அதுவே இப்படத்தில் எந்தளவுக்கு நகைச்சுவை இருக்கும் என்பதைச் சொல்லிவிடுகிறது.
செறிவான உள்ளடக்கம்!
இப்படத்தின் எழுத்தாக்கத்தை இயக்குனர் குணால் கேமுவே கையாண்டிருக்கிறார். கதை கடுகளவு இருந்தாலும், அதனைத் திரையில் வீரியமாகச் சொல்லும் வகையில் திறம்படக் காட்சிகளைக் கோர்த்திருக்கிறார்.
கதையில் நிகழும் திருப்பங்கள், அவற்றை நாயகர்கள் எதிர்கொள்ளும் விதம், பிரச்சனையில் இருந்து விடுபட அவர்கள் எடுக்கும் முடிவுகள், அதன் விளைவுகள் என்று எல்லாவற்றையும் ‘ரசிகர்கள் சிரிப்பதே நோக்கம்’ எனும் நோக்கோடு வடிவமைத்திருக்கிறார்.
நிற்காமல் நகர்ந்து கொண்டே இருக்கும் ஒளிப்பதிவைத் தந்து, இத்திரைக்கதைக்கு உயிரூட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அடில் அப்சர்.
ஆனந்த் சுபாயா – சஞ்சய் இங்ளே இருவரும் படத்தொகுப்பைக் கையாண்டிருக்கின்றனர். ‘தில் சாஹ்தா ஹை’ உட்படப் புகழ்பெற்ற சில இடங்களை ‘ஸ்ஃபூப்’ செய்யுமிடத்தில் அவற்றிலிருப்பது போன்றே படத்தொகுப்பு உத்திகளைப் பயன்படுத்தியிருப்பது அழகு.
சமீர் உத்தின் இதற்குப் பின்னணி இசை அமைத்துள்ளார். ஒரு நகைச்சுவை படத்தில் நாம் எப்படிப்பட்ட இசையை எதிர்பார்ப்போமோ, அதனைத் தந்திருக்கிறார். முக்கியமாக, பரபரப்பூட்டும் காட்சிகளில் இசையின் வழியே விறுவிறுப்பூட்டியிருக்கிறார்.
அதற்கு இணையாகப் பாடல்களும் உள்ளன. ஆனால் சமீர் மட்டுமல்லாது சாகர் தேசாய், அஜய் – அதுல், ‘ஷாரிப் – தோஷி, அங்கூர் திவாரி ஆகியோர் தனித்தனியே ஒரு பாடலைத் தந்துள்ளனர்.
பிராச்சி தேஷ்பாண்டேவின் தயாரிப்பு வடிவமைப்பில் திரையில் தெரியும் களங்கள் யதார்த்தமும் சினிமாத்தனமும் கலந்ததாக உள்ளன.
ஆடை வடிவமைப்பு, ஒப்பனை உள்ளிட்ட தொழில்நுட்பப் பணிகள் செம்மையான பங்களிப்பைத் தந்திருப்பது இப்படைப்பை செறிவான உள்ளடக்கம் கொண்டதாக மாற்றியிருக்கிறது.
நடிப்பைப் பொறுத்தவரை நாயகர்கள் மூவருமே போட்டி போட்டு தங்கள் திறனை வெளிப்படுத்தியுள்ளனர்.
திவ்யேந்துவிடம் இருந்து கதை தொடங்கினாலும், மிகச்சில காட்சிகளிலேயே பிரதீக் காந்தியும் அவினாஷ் திவாரியும் தங்களுக்கான இடத்தை வரித்துக் கொள்கின்றனர்.
முழுக்கப் பெண்களே இருக்கும் காஞ்சன் கும்பல் இருக்குமிடத்திற்கு திவ்யேந்துவும் பிரதிக்கும் பெண் வேடமிட்டுச் செல்லும் காட்சியில் தியேட்டரில் சிரிப்பு அலையெனப் பரவுகிறது.
நோரா பதாஹி இதில் தாஷா எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார். கொஞ்சம் கவர்ச்சி, கொஞ்சம் நடிப்பு என்று அவர் திரையில் தோன்றியிருக்கிறார்.
மெண்டோஸா, காஞ்சம் பாத்திரங்களாக வந்து வில்லத்தனம் செய்யும் உபேந்திரா லிமாயே, சாயா கடம் கூட நம்மை இறுதி வரை சிரிக்க வைக்கின்றனர்.
சிரிப்பு மழை!
நடுத்தர பட்ஜெட்டில் தயாரான ‘மட்காவ்ன் எக்ஸ்பிரஸ்’, பல்வேறு பெரிய படங்களின் வரவுக்கு நடுவே தொடர்ந்து தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. ‘ரிப்பீட் ஆடியன்ஸ்’ எனும் பதத்திற்கான சமீபத்திய உதாரணமாக மாறியிருக்கிறது.
அதற்கேற்ப, ஆரம்பம் தொடங்கி இறுதிவரை சிரிக்கத்தக்க படமாக உள்ளது. லாஜிக் மீறல்களைப் பொருட்படுத்தவில்லை என்றால், உங்களால் மழை போலப் பொழியும் நகைச்சுவையை ரசிக்க முடியும்.
திரையில் யதார்த்தம் சிறிதளவு கூட இல்லாதபோதும், நமது கவனத்தைத் திரையைவிட்டு அகலவிடாமல் பார்த்துக் கொள்கிறார் இயக்குனர் குணால் கேமு. அவரது காட்சியாக்கத்திற்கு ரசிகர்கள் ‘ஜே’ சொல்லும்விதமாக இப்படைப்பைத் தந்திருக்கிறார்.
அடுத்த படத்தை எப்படித் தருவார் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறார். இதைவிட வேறென்ன வேண்டும்?
– உதய் பாடகலிங்கம்
#மட்காவ்ன்_எக்ஸ்பிரஸ்_விமர்சனம் #Madgaon_Express_Review #Kunal Kemmu #Pratik_Gandhi #Divyenndu_Sharma #Nora_Fatehi_Delve #திவ்யேந்து #பிரதீக்_காந்தி #அவினாஷ்_திவாரி #இயக்குனர்_குணால்_கேமு #avinash_divari