மனதில் உள்ள பாரத்தை இறக்கிச் செல்லும் ‘மதில்கள்’!

மலையாளப் புனைவிலக்கிய உலகில் தனிப் பெரும் சுல்தானாகத் திகழ்ந்த வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய மனத்தை நெகிழ வைக்கும் மகத்தான காதல் சித்திரமான ‘மதிலுகள்’ நாவலின் தமிழாக்கம் தான் ‘மதில்கள்’.

பஷீரின் தனித்துவம் வாய்ந்த மொழிநடையின் மெருகு குலையாமல் சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ளார் நவீனத் தமிழின் முக்கியமான கவிஞர்களுள் ஒருவரான சுகுமாரன்.

அரசுக்கு எதிராக எழுதி வந்ததால், ராஜதுரோக வழக்கு ஒன்றில் இரண்டு வருடக் கடும் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டு அரசியல் கைதியாக சிறை செல்கிறார் ஓர் எழுத்தாளர்.

அவர் அடைக்கப்பட்டிருக்கும் அறைக்கு வெளியே பெரிய மதில் சுவர். பெரும் துயரோடு மதில் சுவரை வெறித்தபடி மரங்களோடு பேசிக்கொண்டிருக்கும் அவருக்கு, மதில் சுவருக்கு அப்பாலிருக்கும் பெண்கள் பிரிவிலிருந்து ஒரு பெண் குரல் வயப்படுகிறது.

‘நாராயணீ‘ என்று அறிமுகமாகும் அந்தப் பெண்ணின் குரலில் கரையும் எழுத்தாளர், அவர் மீது காதல்கொள்கிறார். நாராயணியும் இவர் மேல் காதல் கொள்கிறார். இஷ்டம் முதல் இச்சை வரை சகலத்தையும் உரையாடல் மூலமே தங்களுக்குள் பரிமாறிக் கொள்கிறார்கள்.

ஒரு வியாழக்கிழமையில் பகல் 11 மணிக்கு சிறை மருத்துவமனையில் சந்திக்கலாம் என்று முடிவெடுத்துக் காத்திருக்கிறார்கள் இருவரும். அந்த நாளுக்காகக் காத்திருக்கும்போது, எழுத்தாளரை ஓர் அதிர்ச்சி தாக்குகிறது!. அது தான் அவர் விடுதலையாவதற்கான செய்தி.

பெரும் மதில் சுவரின் இருபக்கமும் கசியும் காதலை, உரையாடலை, சிறை வாழ்வை எள்ளல் நடையில் மனதில் புகுத்துகிறது பஷீரின் படைப்புலகம். ஆரம்பித்த சுவடே தெரியாமல் கடகடவென உருண்டோடி சடுதியில் முடிந்து மனதில் ஒரு பாரத்தை இறக்கிச் செல்கிறது கதை.

இந்த குறுநாவல் 1962-63 இல் வைக்கம் முகம்மது பஷீர் அவர்களால் எழுதப்பட்டது. 1942 ஆம் ஆண்டு நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்ட பஷீர் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.

அங்கு சக கைதி நாராயணி மேல் அவருக்கு ஏற்பட்ட காதலும் சிறை அனுபவங்களும் தான் இந்த குறுநாவலாக வடிவெடுத்திருக்கிறது.

பஷீர் தமது காதலை இந்த நாவல் மூலம் அப்படியே நம் மனதிற்குள் பதிவேற்றுகிறார். இந்தியாவின் மிகச் சிறந்த இலக்கிய ஆளுமைகளில் ஒருவராக அவர் போற்றப்படுவதற்கான அடையாளத்தை நாம் இந்த நாவலில் காணலாம்.

இந்த மதிலுக்கு உயிர் இருக்கிறது. பஷீர் அந்த மதிலையும் நாராயணியையும் தமது இறுதி காலம் வரை சுமந்து திரிந்திருப்பார்.

*****

நூல்: மதில்கள்
ஆசிரியர்: வைக்கம் முகம்மது பஷீர்

காலச்சுவடு பதிப்பகம்
தமிழில்: சுகுமாரன்
பக்கங்கள்: 71
விலை: ரூ.90/-

You might also like