சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, பாண்டியநாடு, மார்க் ஆண்டனி என்று விஷாலுக்கு மிகப்பெரிய வெற்றியாக அமைந்த படங்கள் சில உண்டு. அவரது ஒவ்வொரு படம் வெளியாகும்போதும், மேற்சொன்ன பட்டியலில் அவை இணையும் என்று எதிர்பார்ப்பு உருவாவதுண்டு.
சில அந்த உயரத்தை எட்ட முயற்சிக்கும்; சில, தொடக்கத்திலேயே அந்த பயணத்தில் இருந்து விலகிவிடும். மேற்சொன்னவற்றில் தாமிரபரணி தந்த ஹரியோடு ‘பூஜை’ படத்தில் இணைந்த விஷால், தற்போது மீண்டும் சேர்ந்து ‘ரத்னம்’ தந்திருக்கிறார்.
ஹரி – விஷால் கூட்டணியில் வந்த முதல் இரண்டு படங்களுமே ஆக்ஷனை மட்டும் பிரதானப்படுத்தாமல் சென்டிமெண்ட்டும் ரொமான்ஸும் கலந்திருந்தன. அதே பாணியில் அமைந்திருக்கிறதா இந்த ‘ரத்னம்’?!
‘ரத்னம்’ கதை!
வேலூரில் வாழ்ந்து வருபவர் பன்னீர் செல்வம் (சமுத்திரக்கனி). ரவுடியான அவரை ஒரு பெண் தாதா தாக்க வருகிறார். அப்போது, சிறுவனான ரத்னம் அப்பெண்ணைக் கொலை செய்கிறார்.
அதன் தொடர்ச்சியாக, பன்னீர் செல்வம் மனம் ரவுடித்தனம் செய்வதைக் கைவிட்டு அரசியலுக்குச் செல்கிறார்.
ஒரு கட்சியில் சேர்ந்து, தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆகிறார். சிறையில் விடுதலையான ரத்னம் (விஷால்), அவர் சொல்வதை அப்படியே செய்து வருகிறார்; அவரது தொழில்களையும் கவனித்துக் கொள்கிறார்.
ஒருநாள் ரத்னம் சாலையில் ஒரு பெண்ணைப் பார்க்கிறார். அவரை எங்கோ பார்த்திருப்பதாகத் தனது நண்பர்களிடம் சொல்கிறார். அப்பெண்ணின் பின்னாலேயே செல்கிறார்.
அந்தப் பெண்ணின் பெயர் மல்லிகா. பெற்றோர் உடன் திருத்தணியில் வாழ்ந்து வருகிறார். அவரை எங்கு பார்த்தார் என்பதைத் தனது நண்பர்களிடம் கூட ரத்னம் தெரிவிக்க விரும்புவதில்லை.
தமிழக, ஆந்திர எல்லையோரப் பகுதிகள் பிரிக்கப்படும்போது, சிலர் ஆந்திராவில் தங்களுக்கு உள்ள சொத்துகளை அப்படியே விட்டுவிட்டு தமிழ்நாட்டுக்கு வருகின்றனர். அப்படி மல்லிகா (பிரியா பவானி சங்கர்) குடும்பத்திற்குச் சொந்தமான நிலம் நகரியில் இருக்கிறது.
அதனை பீமாராயுடுவும் (முரளி சர்மா) அவரது சகோதரர்களும் ஆக்கிரமித்து, ஒரு மருத்துவக் கல்லூரியைக் கட்டுகின்றனர். அதற்கு மல்லிகாவின் தந்தை எதிர்ப்பு தெரிவிக்க, அவர்கள் கோபமுறுகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, வேலூர் வந்திருக்கும் மல்லிகாவைக் கொலை செய்யத் திட்டமிடுகிறார் பீமாராயுடு. சில அடியாட்களையும் அனுப்புகிறார். ஆனால், அவர்களை அடித்து உதைத்து திருப்பியனுப்பிகிறார் ரத்னம்.
திருத்தணி திரும்பும்போதும், அவருடனேயே செல்கிறார். அப்போதும் தாக்குதல் நடத்தப்படுகிறது. மல்லிகாவின் வீட்டில் நகரி நிலப் பிரச்சனை தொடர்பாகக் கேட்டறியும் ரத்னம், அதனைக் கொடுத்துவிடுமாறு சொல்கிறார்.
ஆனால், மீண்டும் அக்குடும்பத்தின் மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கின்றனர் பீமாராயுடுவின் ஆட்கள். அப்போது தான், மல்லிகாவைக் கொல்ல வேண்டும் என்று அவர்கள் துடிப்பதை அறிகிறார் ரத்னம்.
நிலத்தைப் பிடுங்கி வாங்கிக் கொள்வதற்குப் பதிலாக, அக்குடும்பத்தைச் சேர்ந்த மல்லிகாவை ஏன் பீமாராயுடு கொல்ல முயற்சிக்க வேண்டும் என்று யோசிக்கிறார்.
அதற்கான விடையை ரத்னம் கண்டறிந்தாரா? அதற்கும் முன்னதாக, ரத்னம் ஏன் மல்லிகாவுக்கு வலியச் சென்று உதவ வேண்டும் என்ற கேள்வி நமக்குள் எழும். அதற்கும் திரைக்கதையின் நடுவே பதில் தருகிறார் இயக்குனர் ஹரி.
இத்திரைக்கதையின் தொடக்கத்தில், 1994-ல் தமிழக – ஆந்திர எல்லையோரச் சாலையொன்றில் மூன்று இளைஞர்கள் ஒரு பேருந்தைச் சதி செய்து கவிழ்ப்பதும், அதிலிருக்கும் பயணிகளிடம் அவர்கள் நகைகளைப் பறிப்பதும் காட்டப்படுகிறது.
பிறகு, ஒரு போலீஸ் ஜீப்பையும் அவர்கள் சாலையில் இருந்து மலைச்சரிவில் தள்ளிவிடுகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, பர்தா அணிந்த ஒரு பெண்மணி வேலூர் சந்தைக்கு வந்து வேலை செய்வதும், அவருக்கு ஒரு மகன் இருப்பதும் காட்டப்படுகிறது.
இந்த உள்ளடக்கமே, இக்கதையில் ஒரு பிளாஷ்பேக் நிச்சயம் உண்டு என்பதைச் சொல்லிவிடுகிறது.
பழைய பாதையில் ஹரி!
தனது முந்தைய படங்களில் எப்படி கோபக்கார இளைஞனாகத் தோன்றினாரோ, அதே பாணியில் சிறிதளவு கூட பிசகில்லாமல் இதிலும் வந்து போயிருக்கிறார் விஷால்.
ஆனால், உணர்ச்சிப் பெருக்க்கோடு பேசும் காட்சிகளில் அவரது உடலிலும் முகத்திலும் ‘பழைய வேட்கை’ இல்லை. அந்த தளர்ச்சி ஏன் என்பதில் அவர் கவனம் செலுத்த வேண்டும்.
பிரியா பவானி சங்கர் தான் நடித்த படங்களில் எல்லாம் ‘தேவதையன்று அறியாத தேவதை’யாக உலா வருவார். இதிலும் அப்படியே. ஆனால், அந்த போக்கு அவர் விஷால் மீது காதல் பார்வை வீசும்போதும் தொடர்கிறது; அதனால், அவர்களுக்கு இடையே ‘கெமிஸ்ட்ரி’ என்பது சுத்தமாக இல்லை.
‘அலா வைகுண்டபுரம்லோ’ உட்படப் பல தெலுங்கு படங்களில் வில்லனாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்துவரும் முரளி சர்மா, இதில் பீமாராயுடுவாக நடித்துள்ளார்.
அவரது பெர்பார்மன்ஸ் பயத்தை வரவழைப்பது உண்மை. ஆனால், அதற்கேற்ற காட்சிகள் பின்பாதியில் அவருக்குத் தரப்படவில்லை.
‘தமிழ்’ படத்தில் ஆசிஷ் வித்யார்த்தி, ‘சாமி’யில் கோட்டா சீனிவாசராவ், ‘வேல்’ படத்தில் கலாபவன் மணி, ‘சிங்கம்’ படத்தில் பிரகாஷ்ராஜ் என்று பலரைத் தன் படங்களில் வில்லனாகத் திறம்படக் காட்டிய இயக்குனர் ஹரி, இதில் முரளி சர்மா, முத்துகுமார், ஹரீஷ் பேரடி சம்பந்தப்பட்ட காட்சிகளைச் சரிவர வடிவமைக்கவில்லை.
இவர்கள் தவிர்த்து ஜெயபிரகாஷ், துளசி, விஜயகுமார், யோகிபாபு, அஸ்வின் ராஜா, கணேஷ் வெங்கட்ராம், ஒய்.ஜி.மகேந்திரன், மோகன்ராமன், மொட்டை ராஜேந்திரன், டெல்லி கணேஷ் என்று பலர் இதில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார் சண்டைக்காட்சிகளில் பரபரவெனப் பாய்ந்து பாய்ந்து உழைத்திருக்கிறார். பிரியா பவானிசங்கரை விஷால் ஜீப்பில் அழைத்துச் செல்லும் சண்டைக்காட்சி ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டது போன்று காண்பித்திருப்பது அதற்கொரு உதாரணம்.
படத்தொகுப்பாளர் டி.எஸ்.ஜெய், இரண்டுக்கும் மேற்பட்ட பிளாஷ்பேக்குகளை கொண்ட இந்தக் கதையைக் கவனமாகக் கோர்த்திருக்கிறார். பெரிதாகக் கதை சொல்லலில் குழப்பம் இல்லாதவாறு செயல்பட்டிருக்கிறார்.
கலை இயக்குனர் பாலாஜியின் கைவண்ணத்தில் திருத்தணி தெருக்களும் நாயகியின் வீடும் ‘செயற்கை’யாகத் தெரிகின்றன. அதேநேரத்தில் சண்டைக்காட்சிகளில் அவரது பங்களிப்பு அருமையாக வெளிப்பட்டுள்ளது.
கனல் கண்ணன், திலீப் சுப்பராயன், பீட்டர் ஹெய்ன், விக்கி என்று இப்படத்தில் நான்கு ஸ்டண்ட் மாஸ்டர்கள் பணியாற்றியுள்ளனர்.
தேவிஸ்ரீபிரசாத்தின் இசையில் ‘எதுவரையோ’, ‘உயிரே என் உயிரே’ கேட்கும்படியாக உள்ளன. ஆக்ஷன் மற்றும் செண்டிமெண்ட் காட்சிகளில் அவர் தந்த பின்னணி இசை சரியாகப் பொருந்தி நிற்கின்றன.
‘ரத்னம்’ படத்தில் செண்டிமெண்ட், ஆக்ஷன் காட்சிகள் இருக்குமளவுக்குச் சிறப்பாகக் காதல் காட்சிகள் இடம்பெறவில்லை. கதையின் ஆதார மையமாகத் திகழும் ஒரு முடிச்சு அதற்கொரு முக்கியக் காரணம். அதுவே, இப்படத்தில் நாயகிக்கு நாயகன் ஏன் உதவுகிறார் என்பதைச் சொல்கிறது.
இந்த படத்தில் பழைய பாணியில் தனது கதை சொல்லலைக் கையாண்டிருக்கிறார் ஹரி.
தெனாவெட்டான நாயகன், அப்பாவியான நாயகி, இருவருக்குமான அறிமுகம், வில்லனின் கொடூரக் குணம், அவரிடம் இருந்து நாயகியைக் காக்கும் நாயகன், அதற்காக அவர் பயன்படுத்தும் உத்திகள் என்று ஹரி இயக்கிய முந்தைய படங்களை நிறையவே நினைவூட்டுகிறது ‘ரத்னம்’.
குறிப்பாக சாமி, பூஜை, ஆறு படங்களின் தாக்கம் இத்திரைக்கதையில் நிறையவே தெரிகிறது.
ஏன் இந்த வன்முறை?
‘ஆறு’ படத்திலேயே அளவுக்கு அதிகமாக வன்முறையைக் காட்டியவர் இயக்குனர் ஹரி. அதைவிட ஒருபடி கூடுதலாக கேஜிஎஃப், ஜெயிலர், விக்ரம் படங்களின் உள்ளடக்கத்தையும் அவை பெற்ற வெற்றியையும் கண்டு மேலும் நம்மை ‘மெர்சல்’ ஆக்கியிருக்கிறார்.
தனது முந்தைய படங்களின் வெற்றிக்குத் திரைக்கதையில் இருந்த பரபரப்பும் திருப்பங்களுமே காரணம் என்பதை மறந்து போயிருக்கிறார்.
தொடர்ந்து வருவது ‘ஸ்பாய்லர்’ ரகம் என்பதால், அதனை விரும்பாதவர்கள் இதோடு நிறுத்திக் கொள்ளலாம்.
தன்னைத் தவிக்க விட்டுச் சென்ற தாயின் நினைவுகளோடு நாயகன் வாழ்வதும், அதே சாயலில் நாயகி இருப்பதுமே இக்கதையின் அடிப்படை.
அதனால், இக்கதையில் காதல் ‘எபிசோடு’ கொஞ்சம் சிக்கலானது என்பது பார்வையாளர்களுக்கே தெரிந்துவிடும். அப்படியிருந்தும், பழைய பார்முலாவிலேயே அக்காட்சிகளை வடித்திருக்கிறார் ஹரி.
காதல் காட்சிகள் என்றில்லை, காமெடி காட்சிகளும் கூட கடுப்பேற்றும் வகையிலேயே உள்ளன. அந்த வகையில் யோகிபாபு, அஸ்வின் சரவணன் இருவரும் நம்மை ஏமாற்றியிருக்கின்றனர்.
கிளைமேக்ஸில் வில்லனின் தலையை நாயகன் வெட்டி எடுப்பதாக ஒரு காட்சி வருகிறது.
அதனை போஸ்டரில் பார்த்தபோதே தெறித்த எனக்கு, அக்காட்சியில் தென்பட்ட வன்முறை அளவிட முடியாததாகத் தெரிந்தது. ‘இதனால் எல்லாம் ஒரு படம் வெற்றியைச் சுவைக்குமா’ என்ற கேள்வியும் எழுந்தது.
‘ட்ரெண்ட் என்ன’ என்று தெரிந்து எந்த இயக்குனராலும் ஒரு திரைக்கதையை உருவாக்க முடியாது. ஏனென்றால், அது நாளும் மாறக் கூடியது. ஆனால், தனக்குத் திருப்தி தரும் ஒரு படைப்பை ஒருவரால் உருவாக்க முடியும்.
தமிழ், சாமி படங்களில் யதார்த்தம் இல்லை என்றபோதும், அத்திரைக்கதைகள் உண்மைக்கு நெருக்கமாக இருப்பது போன்று தோற்றமளித்தன. அதனாலேயே, அப்படத்தின் ஆக்ஷன் காட்சிகள் நம்மை ஈர்த்தன.
அதன்பிறகான ஹரியின் படங்களில் ஆக்ஷன் காட்சிகளைத் திறம்படக் காட்டுவதற்கான உத்திகளும் புத்திசாலித்தனமான காட்சியாக்கமுமே இருந்தன.
இதற்கு முன்னர் ஹரி தந்த ‘யானை’ அளவுக்குக் கூட ‘ரத்னம்’ படத்தில் அந்த அம்சங்கள் சுத்தமாக இல்லை.
அவற்றை தனக்குத்தானே நினைவூட்டிக் கொள்ளவாவது ஹரி தனது பழைய படங்களை ஒருமுறை பார்க்க வேண்டும். அவற்றை மீண்டும் பார்க்க வேண்டும் என்று ரசிகர்களான நம்மைத் தூண்டும் வகையில் அடுத்த படத்தைத் தர வேண்டும்..!
– உதய் பாடகலிங்கம்