‘ரி-ரிலீஸ்’ ஜுரத்தில் சேருமா ஜீன்ஸ்!?

பிரசாந்தின் திரையுலக வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக அமைந்தது ஷங்கரின் ‘ஜீன்ஸ்’. அதில் இரட்டை வேடங்களில் அவர் நடித்திருந்தார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, அசோக் குமாரின் ஒளிப்பதிவு, தோட்டா தரணியின் கலை வடிவமைப்பு, பி.லெனின் – வி.டி.விஜயனின் படத்தொகுப்பு, எஸ்.டி.வெங்கியின் ஸ்பெஷல் எபெக்ட்ஸ் என்று தொழில்நுட்பக் கலைஞர்கள் பலரது சிறப்பான பங்களிப்போடு அப்படம் உருவானது.

ஷங்கரின் முந்தைய படங்களான ஜென்டில்மேன், காதலன், இந்தியனை விட அதிக பட்ஜெட்டில் தயாரானது. 1998 ஏப்ரல் 24 அன்று ’ஜீன்ஸ்’ வெளியானது. தற்போது 26 ஆண்டுகளை அப்படம் நிறைவு செய்திருக்கிறது.

கதையின் அடிப்படை!

ஜீன்ஸ் திரைப்படத்தின் சிறப்பே, அதில் நாசரும் பிரசாந்தும் இரட்டை வேடங்களில் நடித்தது தான். படத்தின் கதை நமக்கு நன்கு தெரியும் என்பதால் அது பற்றி விவாதிப்பது வீண் வேலை.

இரட்டையர்களான பேச்சியப்பனும் நாச்சியப்பனும் வெவ்வேறு திசைகளில் பிரிவார்கள். அதற்கு பேச்சியப்பனின் மனைவி சுந்தராம்பாள் (ராதிகா) தான் காரணம் என்று நினைப்பார் நாச்சியப்பன்.

அதனால், தனது மகன்கள் விஸ்வநாதன், ராமமூர்த்தி இரட்டையராகப் பிறந்த சகோதரிகளையே மணம் முடிக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருப்பார்.

விஸ்வநாதனை மதுமிதா விரும்பத் தொடங்கியபிறகு, அந்த எண்ணம் தவிடுபொடியாகும்.

மதுமிதாவின் குடும்பத்தினர் நாச்சியப்பனை ஏமாற்ற, தங்களுக்கு வைஷ்ணவி என்ற இன்னொரு பெண் இருப்பதாகச் சொல்வதாகக் கதை நகரும்.

நாச்சியப்பன் என்ற பாத்திரத்தின் விருப்பமும், அதனை அப்படியே பின்பற்றும் அவரது மகன்களின் கீழ்ப்படிதலுமே ‘ஜீன்ஸ்’ கதையின் அடிப்படை.

இந்த படத்தில் நாசர், கீதா, ராதிகா சம்பந்தப்பட்ட பிளாஷ்பேக் காட்சிகள் ரொம்பவே சீரியசாக இருக்கும். அது முடிந்தபிறகும் கூட, கதையில் காமெடி காணாமல் போயிருக்கும்.

ஷங்கரின் முந்தைய படங்களான ஜென்டில்மேன், இந்தியனிலும் கூட இது போன்ற பிளாஷ்பேக் இருக்கும். அப்படங்களில் பிளாஷ்பேக் காட்சிகள் முடிவடைந்ததும், ஆக்‌ஷன் உச்சகட்டம் பெறும். அப்போது பிளாஷ்பேக் தந்த சோகம் மறைந்து மனம் உத்வேகம் பெறும்.

‘ஜீன்ஸ்’ படத்தில் அதற்கு உல்டாவாக செண்டிமெண்ட் காட்சிகளை அள்ளித் தெளித்திருந்தார் ஷங்கர். அதனால், மிகச் சீரிய வகையில் உருவாக்கப்பட்ட ‘ஜீன்ஸ்’, அதில் கொட்டப்பட்ட உழைப்புக்கு ஏற்ற வெற்றியைப் பெறவில்லை.

ஷங்கர் கேட்டது..!

கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டு கால உழைப்பில், சுமார் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ‘ஜீன்ஸ்’ உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

கிட்டத்தட்ட ரொமான்ஸ் டிராமா வகைமையைச் சார்ந்த படம் இது.

‘நான் கேட்டது.. ஆனா அவர் தந்தது’ என்று இயக்குனர் கௌதம் சொன்னது போல, ஜீன்ஸ் படத்தை ‘ரொமான்ஸ் காமெடி’யாகவே ஷங்கர் உருவாக்க விரும்பியிருக்கிறார்.

அது நிகழ்ந்திருந்தால், அவரது திரைக்கதை ட்ரீட்மெண்ட் பல இயக்குனர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் கூட திகழ்ந்திருக்கும்.

‘பாய்ஸ்’ படத்தில் இதே பாணியில் திரைக்கதை ட்ரீட்மெண்டை அமைத்திருந்தார் ஷங்கர். ஆனால், அது கலவையான விமர்சனங்களைப் பெற்றது தனிக்கதை.

ஒருவேளை ‘ஜீன்ஸ்’ படம் முழுக்க காமெடியாக அமைந்திருந்தால், வேறுமாதிரியான ட்ரெண்ட்செட்டர் ஆகியிருக்க வாய்ப்புண்டு.

இப்படிச் சொல்லக் காரணம் உண்டு. முதலில் நாசர் பாத்திரத்தில் கவுண்டமணியையே நடிக்க வைக்க விரும்பியிருக்கிறார் ஷங்கர். ஆனால், ‘உள்ளத்தை அள்ளித்தா’ வெற்றிக்குப் பிறகு நாயகனுடன் வரும் நகைச்சுவை நட்சத்திரமாக மாறிப் போனார் கவுண்டமணி.

கிட்டத்தட்ட இன்னொரு நாயகன் என்று சொல்லும் அளவுக்கு கார்த்திக், சத்யராஜ், அர்ஜுன் போன்ற மூத்த நடிகர்கள் மட்டுமல்லாமல் விஜய், அஜித், அருண்குமார் என்று இளைய நடிகர்களுடனும் நடிக்கத் தொடங்கினார்.

அதன் விளைவாக, கவுண்டமணியால் இந்தப் படத்திற்கு அதிக நாட்கள் ஒதுக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா ராயின் பெற்றோராக இதில் எஸ்.வி.சேகர் – ஜானகி சபேஷ் நடித்திருந்தனர். முதலில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தான் எஸ்.வி.சேகருக்குப் பதிலாக நடிப்பதாக இருந்திருக்கிறது. என்ன காரணத்தாலோ அது நிகழவில்லை.

பிரசாந்துக்குப் பதிலாக இதில் அப்பாஸ், அஜித்குமாரை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

கிட்டத்தட்ட ஒரு வருடத்தை ஒதுக்க முடியாமல் அவர்கள் ஒதுங்கிக் கொள்ள, தனக்கிருந்த 7 படங்களுக்கான கமிட்மெண்ட்களை விட்டுவிட்டு ‘ஜீன்ஸ்’ வாய்ப்பை பிரசாந்த் ஏற்றதாகச் சொல்லப்படுகிறது.

ஆனால், பிரசாந்த் நம்பிக்கையைக் காக்கும் அளவுக்கு இந்தியா முழுக்க அவருக்கு அறிமுகத்தைத் தந்தது ‘ஜீன்ஸ்’. வெளிநாடுகளிலும் அவரது படங்களுக்குப் பெரிய சந்தை உருவாக வழி வகுத்தது.

இது போன்று படத்தின் உருவாக்கத்தில், பல மாற்றங்களைப் படக்குழு சந்தித்திருக்கலாம். அதையெல்லாம் மீறி ‘ஜீன்ஸ்’ ஒரு நல்லனுபவத்தைத் தந்தது என்பதே உண்மை.

ஏனென்றால், நாசரின் குணசித்திர நடிப்பை நாடே கண்டு ரசித்தது.

ஐஸ்வர்யா ராய் ஒரு வெற்றிகரமான நாயகியாக அடையாளம் காணப்பட்டார்.

லட்சுமி, எஸ்.வி.சேகர், ஜானகி சபேஷ் உடன் கொரியோகிராபர் ராஜு சுந்தரமும் இதில் காமெடி வேடத்தில் அசத்தியிருந்தார். இந்த ‘காம்போ’ இயக்குனர் ஷங்கரால் மட்டுமே சாத்தியமானது.

மீண்டும் ரி-ரிலீஸ் ஆகுமா?

‘ஜீன்ஸ்’ படத்தில் பாடல்கள் ஒவ்வொன்றும் முத்துகளாகவும் வைரங்களாகவும் இன்னபிற ரத்னங்களாகவும் இன்றுவரை மின்னி வருகின்றன.

‘கொலம்பஸ்.. கொலம்பஸ்..’, ‘கண்ணோடு காண்பதெல்லாம்’, ‘வாராயோ தோழி’ பாடல்கள் துள்ளலை அதிகப்படுத்த, ‘அன்பே.. அன்பே’, ’எனக்கே.. எனக்கா..’, ‘பூவுக்குள் ஒளிந்திருக்கும்’ பாடல்கள் மெலடி மெட்டுகளாக நம் உயிருடன் கலக்கும்.

முக்கியமாக, அனைத்து பாடல்களும் ஒலிக்கும் ‘ஜிலீர்’ ஒலிக்கோர்வை நம்மை வசியப்படுத்தும்.

அந்த வகையில், அனைத்து பாடல்களுமே ‘மூட் சேஞ்சர்’ வகையைச் சார்ந்தவை. ஏ.ஆர்.ரஹ்மான் திரை வரலாற்றில் நிச்சயம் ‘ஜீன்ஸ்’ படத்திற்கு தனியிடம் உண்டு. ஏனென்றால், அவரது படப்பாடல்களின் உள்ளடக்கத்தில் இருந்து மாறுபட்டது இப்படம்.

‘ஜீன்ஸ்’ வெற்றிக்குப் பிறகு ‘கண்ணெதிரே தோன்றினாள்’, ‘காதல் கவிதை’, ‘பூமகள் ஊர்வலம்’, ‘ஜோடி’, ‘அப்பு’, ‘பார்த்தேன் ரசித்தேன்’, ‘பிரியாத வரம் வேண்டும்’, ‘ஸ்டார்’, ‘சாக்லேட்’, ‘தமிழ்’, ‘விரும்புகிறேன்’, ‘வின்னர்’ என்று ரசிகர்கள் ஆராதிக்கத்தக்க பல படங்களைத் தந்தார் பிரசாந்த்.

ஆனால், ‘பான் இந்தியா’ அந்தஸ்து தந்த ‘ஜீன்ஸ்’ போன்று இன்னொரு படம் அமையவில்லை. அவரது எதிர்பார்ப்பு, அவர் நடித்த தமிழ் படங்களின் உள்ளடக்கத்தை வெகுவாகச் சிதைத்தது.

2004-க்குப் பிறகு அவர் தேர்ந்தெடுத்த கதைகள் எதுவுமே பெரிய வெற்றியைப் பெறவில்லை.

2013 வாக்கில் தந்தை தியாகராஜன் இயக்கத்தில் ‘ஜீன்ஸ் 2’ படத்தில் நடிப்பதாகவும் அறிவித்தார்.

ஆனால், ‘ஜீன்ஸ்’ தயாரிப்பாளர் அசோக் அமிர்தராஜ் எதிர்ப்பு தெரிவிக்க, அந்த முயற்சி நின்றுபோனது.

தற்போது, நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் – வெங்கட்பிரபுவின் ‘கோட்’ படத்தில் பிரசாந்தும் இடம்பெற்றிருக்கிறார்.

இந்தச் சூழலில், ‘ஜீன்ஸ்’ ரி-ரிலீஸ் ஆவது பொருத்தமாக இருக்கும். ஏனென்றால், இடைப்பட்ட காலத்தில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு பரவலான வரவேற்பை அப்படம் பெற்றது.

அது மட்டுமல்லாமல், மீண்டும் பெரிய திரையில் அந்த படத்தை ஒரு ‘கிளாசிக்’ ஆக ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.

தியேட்டர்களில் இப்போதிருக்கும் ஒலித்தரமும், திரைப்பிம்பத்தின் துல்லியமும் நிச்சயமாக ஒளிப்பதிவாளர் அசோக்குமாரையும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானையும் இன்னபிற கலைஞர்களையும் கொண்டாட வைக்கும்.

கூடவே, இயக்குனர் ஷங்கரின் ரசனையை இன்றைய 2கே கிட்ஸ்கள் அறியச் செய்யும். அது நிகழுமா?

– உதய் பாடகலிங்கம்

You might also like