ஏப்ரல்-20, மாலை சென்னை நாரத கான சபா அரங்கில் இயக்குநர் கே.சுப்பிரமணியம் – 120 விழா.
அனைவரையும் வரவேற்றவர் நடனக் கலைஞரான பத்மா சுப்பிரமணியம். தொகுத்து வழங்கியவர் கண்ணன்.
முதலில் தந்தை கே.எஸ். பற்றி அவரது மகன் கிருஷ்ணசுவாமி எடுத்த ஒரு மணி நேர ஆவணப்படத்தைத் திரையிட்டது முக்கியமானது.
கே.எஸ். வழக்கறிஞர் என்றாலும், ராஜா சாண்டோவிடம் உதவி இயக்குநராகப் பணி புரிந்த பின்னணியோடு இயக்கிய முதல் படம் தியாகராஜ பாகவதர் நடித்த ‘பவளக் கொடி’.
ஐம்பது பாடல்கள் வரை இடம்பெற்ற அந்தப் படத்தில் மெலிந்த தோற்றத்தில் வசீகரமாகப் பாடல்களைப் பாடியிருந்தார் எம்.கே.டி.
படப்பிடிப்பு நடந்த இடம் – சத்யா ஸ்டூடியோ இருந்த அதே இடத்தில் தான்.
கல்கியின் ‘தியாகபூமி’ படத்தை கே.எஸ். இயக்கியபோது அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியில் விதிக்கப்பட்ட தடையைப் பற்றிச் சொன்னார்கள்.
‘தியாகபூமி’ படத்தின் பல காட்சிகளையும் நவீனத் தொழில்நுட்பம் சார்ந்த துல்லியத்துடன் திரையிட்ட போது ஆச்சர்யம். படத்தின் வசனங்களில் கூர்மை தெரிந்தது.
பிடிக்காத கணவனுடன் இருப்பதைவிட, அவருக்கு ஜீவனாம்சம் தந்து தனியே வாழ்ந்து கொள்கிறேன் என்று வாதிடுகிற கதாநாயகி. குறிப்பிட்ட சமூகத்தினரைக் கோவிலுக்குள் அனுமதிக்க மறுப்பதைக் கண்டிக்கும் காட்சிகள் அப்போதே இடம் பெற்றிருக்கின்றன.
பிராமண சமூகத்தில் பிறந்து அவர்களின் சம உரிமைக்காஎப் பாடுபடுகிறவராக நடித்திருந்தவர் பாபநாசம் சிவன்.
மும்பையில் உள்ள ஒரு லேப்-பில் இருந்து அந்தப் படத்தின் பிலிம் சுருளைத் தேடி எடுத்தபோது தான் அடைந்த பரவசத்தை நினைவுகூர்ந்தார் கிருஷ்ணசுவாமி.
டி.ஆர்.ராஜகுமாரி, எம்.எஸ்.சுப்புலெட்சுமி, பத்மினி, சரோஜாதேவி வரை பலரைத் தான் இயக்கிய படங்களில் இடம் பெற வைத்திருக்கிறார். கடைசியாக கே.எஸ். இயக்கிய ‘பாண்டித் தேவன்’ படத்தில் நடித்திருந்தவர் சந்திரபாபு.
தமிழ் சினிமாவில் சமூக உணர்வைத் துணிவுடன் வெளிப்படுத்திய கே.எஸ். குறித்த சிறப்பான ஆவணப் படத்திற்குப் பிறகு நான்கு கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்வு.
விழாவில் பேசிய முனைவர் குமார் ராஜேந்திரன் ரத்தினச் சுருக்கமாகத் தங்களுடைய குடும்பத்திற்கும், கே.எஸ். குடும்பத்திற்கும் இருந்து வரும் பிணைப்பைப் பற்றிப் பேசினார்.
எம்.ஜி.ஆருக்கு அவரது தாய் சத்யாவின் மறைவுக்குப் பிறகு, அவருக்குத் தந்தையும், தாயுமாக இருந்தவர் கே.எஸ். என்று எம்.ஜி.ஆர் பேசியதைக் குறிப்பிட்டவர், திருமதி ஜானகி எம்.ஜி.ஆருக்கு நாட்டியத்தைப் பயிற்றுவித்து, தான் இயக்கிய திரைப்படத்திலும் இடம் பெற வைத்தவர் கே.எஸ் என்றும் குறிப்பிட்டார்.
எம்.ஜி.ஆர் கே.எஸ்.அவர்களை “அப்பா” என்றே அழைத்து வந்திருக்கிறார். நிறைவாகப் பேசிய இயக்குநர் எஸ்.பி.முத்துராமனின் உரை நெகிழ்வோடு இருந்தது.
90 வயதைக் கடந்திருக்கிற அவரிடம் கே.எஸ். உருவாக்கியிருக்கும் பிரமிப்பை விவரித்தவர் “தான் வாழ்ந்த காலத்தில் இருத்த சமூக உணர்வை எப்படி கே.சுப்பிரமணியம் தான் இயக்கிய படங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதைத் தற்போதைய திரையுலகத்தினர் கற்றுக் கொள்ள வேண்டும்” என்று பேச்சை நிறைவு செய்தவிதம் உரிய அஞ்சலியாக இருந்தது.
திரையில் சமூக உணர்வை வெளிப்படுத்திய கலைஞர்கள் காலங்கடந்தும் நினைக்கப்படுகிறார்கள் என்பதற்கு உதாரணம் கே.எஸ் 120 விழா.
#பத்மா_சுப்பிரமணியம் #கே_எஸ்_கிருஷ்ணசுவாமி #இயக்குநர்_கே_சுப்பிரமணியம் #இயக்குநர்_கே_சுப்பிரமணியம்_120_விழா #ராஜா_சாண்டோ #தியாகராஜ_பாகவதர் #பவளக்_கொடி #கல்கி #தியாகபூமி #பாபநாசம்_சிவன் #டி_ஆர்_ராஜகுமாரி #எம்_எஸ்_சுப்புலெட்சுமி #பத்மினி #சரோஜாதேவி #சந்திரபாபு #முனைவர்_குமார்_ராஜேந்திரன் #எம்ஜிஆர் #ஜானகி_எம்.ஜி.ஆர் #இயக்குநர்_எஸ்_பி_முத்துராமன் #Padma_Subramaniam #K_S_Krishnaswamy #Director_K_Subramaniam #Director_K._Subramaniam_120_birthday_Festival #Raja_Sando #Thiyagaraja_Bhagavathar #Kalki #Thyagabhumi #Babanasam_Sivan #DR_Rajakumari #M_S_Subbulakshmi #badmini #Sarojadevi #Chandrababu #Dr_Kumar_Rajendran #MGR #Janaki_mgr #Director_S_B_Muthuraman