கலாநிதி, தயாநிதி முதல் கதிர், கார்த்தி வரை…!

வாரிசுகள் களம் காணும் தொகுதிகள் நிலவரம்!

தமிழகத்தில், மக்களவைத் தேர்தலில் அனைத்து பிரதான கட்சிகளுமே தலைவர்களின் வாரிசுகளை  களத்தில் இறக்கிவிட்டுள்ளன.

புதிதாக கட்சியைக் கட்டமைத்த தலைவர்கள், கட்சியைக் கட்டிக்காத்த தலைவர்களின் வாரிசுகள் இதில் அடங்குவார்கள்.

இன்னாள், முன்னாள் அமைச்சர்களின் மகன்களும் பரவலாக தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அந்த தொகுதிகளின் நிலவரம்:

வட சென்னை

தமிழகமெங்கும் இன்று ஆலமரமாய் வளர்ந்து, நகரங்களிலும், கிராமங்களிலும் கிளைகள் பரப்பி நிற்கும் திமுகவின் நாற்றங்கால், வட சென்னை.

இங்குள்ள ராயபுரம் ராபின்சன் பூங்காவில் தான் அறிஞர் அண்ணா, கடந்த 1949-ம் ஆண்டு திமுக என்ற கட்சியின் உதயத்தை அறிவித்தார்.

அதனால் தானோ என்னவோ வட சென்னை, திமுகவின் எக்குக் கோட்டையாகத் திகழ்கிறது. இதுவரை நடைபெற்ற 14 தேர்தல்களில் 11 தேர்தல்களில் திமுக வாகை சூடியுள்ளது.

திமுகவின் மூத்த தலைவர்களான நாஞ்சில் மனோகரன், ஆசைத்தம்பி, என்.வி.என்.சோமு, தொழிற்சங்கத் தலைவர் குப்புசாமி, டி.கே.எஸ் இளங்கோவன் என பலரும் இங்கு போட்டியிட்டு வென்றுள்ளனர்.

கொளத்தூர், ராயபுரம், ஆர்.கே.நகர், திருவொற்றியூர், பெரம்பூர், திருவிக நகர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் வடசென்னையில் உள்ளன.

இவற்றில் கொளத்தூர் முதலமைச்சர் ஸ்டாலின் வென்ற சட்டமன்றத் தொகுதியாகும்.

முன்னாள் அமைச்சரும் திமுக தலைவர் கருணாநிதியின் வலதுகரமுமான ஆற்காடு வீராசாமியின் மகன் டாக்டர் கலாநிதி, இந்தத் தொகுதியில் திமுக வேட்பாளராக  போட்டியிடுகிறார்.

கடந்த முறையும் அவரே நின்றார்.

சுமார் 4 லட்சத்து 61 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்த மக்களவைத் தொகுதியில் அடங்கும் 6 தொகுதிகளையும் திமுகவே வென்றது.

திமுகவின் கூட்டணிக் கட்சிகளான இரு கம்யூனிஸ்டுகள் மற்றும் விசிகவுக்கு இந்தத் தொகுதியில் பலமான வாக்கு வங்கி உள்ளது.

’’வட சென்னையில் திமுகவுக்கு போட்டியே இல்லை – இரண்டாம் இடம், மூன்றாம் இடத்தை யார் பெறுவது என்பதில் தான் போட்டி” என்கிறார், திமுக வேட்பாளர் கலாநிதி.

மத்திய சென்னை

தமிழகத்தை இயக்கும் அனைத்து ஸ்தாபனங்களும், அருகருகே அடர்த்தியாய் படர்ந்திருக்கும் தொகுதி, மத்திய சென்னை மக்களவை தொகுதி.

தலைமைச் செயலகம், உயர்நீதிமன்றம், துறைமுகம், மாநராட்சியின் ரிப்பன் மாளிகை, சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம், சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்கள் இந்த தொகுதிக்குள்  வருகின்றன.

அறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களும் இந்த தொகுதியில் தான் அடங்குகின்றன.

இது, திமுகவின் கோட்டை.

7 முறை திமுக வென்றுள்ளது. 2 முறை காங்கிரஸ் வேட்பாளர் வென்றுள்ளார்.

அதிமுக, ஜனதா ஆகிய கட்சிகள் தலா ஒரு முறை ஜெயித்துள்ளன.

முன்னாள் மத்திய அமைச்சரும், கருணாநிதியின் மனசாட்சியுமான முரசொலி மாறன், இந்த தொகுதியில் தொடர்ச்சியாக மூன்று முறை வென்றுள்ளார்.

முரசொலி மாறன் மறைவுக்கு பிறகு, அவரது  மகன் தயாநிதி மாறன் இங்கு தொடர்ச்சியாய் போட்டியிட்டு வருகிறார்.

கடந்த முறை அவரே வென்றார். இப்போதும் தயாநிதி மாறனே, திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

மத்திய சென்னை மக்களவை தொகுதியில் வில்லிவாக்கம், எழும்பூர், துறைமுகம், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணாநகர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆறு இடங்களையும், திமுகவே அள்ளியது.

தயாநிதி மாறனை எதிர்த்து, பாஜக, தேமுதிக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

’மத்திய சென்னையில், தயாநிதி மாறன் எளிதாக வெல்வார்’ என்கிறார்கள் உடன் பிறப்புகள்.

பெரம்பலூர்

 நீண்டகாலமாக தனித் தொகுதியாக இருந்தது,  பெரம்பலூர் மக்களவைத் தொகுதி ,

இந்த தொகுதியில் திமுக 7 முறை வெற்றி பெற்றுள்ளது.

அதிமுக 6 முறையும், காங்கிரஸ் இரண்டு முறையும் வெற்றி வாகை சூடியுள்ளன.

தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி, ஐஜேகே ஆகிய கட்சிகள் தலா ஒரு முறை வென்றுள்ளன.

2009-ம் ஆண்டு மறுசீரமைப்புக்குப் பிறகு பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டது.

பெரம்பலூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர், குளித்தலை ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகள், பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில்  உள்ளன.

கடந்த சட்டமன்றத் தேர்தலில்  இந்த 6 தொகுதிகளிலும் திமுகவே வென்றது.

கடந்த மக்களவைத் தேர்தலில் இந்த தொகுதி, திமுக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சிக்கு (ஐஜேகே) ஒதுக்கப்பட்டது. அதன் தலைவர் பாரிவேந்தர் வேட்பாளராக போட்டியிட்டு, சுமார் 4 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார்.

இந்த முறை பாரி வேந்தர், பாஜக கூட்டணியில் நிற்கிறார்.

அவருக்கு எதிராக களம் இறக்கப்பட்டுள்ளார், அமைச்சர் நேருவின் மகன் அருண்நேரு. இவர் முதன் முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார்.

அதிமுக சார்பில் சந்திரமோகன் நிறுத்தப்பட்டுள்ளார்.

அமைச்சர் மகன் தொகுதி என்பதால் திமுகவினர் ஓடியாடி வேலை செய்கிறார்கள்.

வேலூர்

சுதந்திர போராட்டத்தில் முத்திரைப் பதித்த நகரம் வேலூர்.

பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக நிகழ்ந்த வேலூர் புரட்சி, வரலாற்றில் முக்கிய பதிவாக திகழ்கிறது.

அரசியல் ரீதியாகவும் வேலூர் பகுதி முக்கியத்துவம் வாய்ந்தது. காங்கிரஸுக்கு எதிராக திராவிட இயக்கம் வலிமையடைந்தபோது, வேலூர் மிக முக்கிய பகுதியாக விளங்கியது.

வேலூர் மக்களவைத் தொகுதியில் 5 முறை திமுகவும், காங்கிரஸ் 3 முறையும், அதிமுக, பாமக இரு முறையும் வெற்றி பெற்றிருக்கிறது

வேலூர், வாணியம்பாடி,ஆம்பூர்,அணைக்கட்டு,கே.வி.குப்பம் ,குடியாத்தம்  ஆகிய  6 சட்டமன்ற தொகுதிகள் வேலூர் மக்களவை தொகுதியில் அடங்கியுள்ளன.

இந்த தொகுதியில் கடந்த மக்களவை தேர்தலில் தி,முக வேட்பாளராக அமைச்சர் துரைமுருகன்  மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டு, வெறும் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

அவரை எதிர்த்து, புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், அதிமுக கூட்டணி சார்பில், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார்.

இந்த முறை கதிர் ஆனந்த் மீண்டும் போட்டியிடுகிறார்.

ஏ.சி.சண்முகமும் களம் காண்கிறார். ஆனால் இந்த முறை அவர் பாஜக கூட்டணி வேட்பாளராக, அந்த கட்சியின்  தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

பாமக பலமாக உள்ள தொகுதிகளில் இதுவும் ஒன்று. சண்முகத்தை அந்த கட்சி ஆதரிக்கிறது.

வேலூரில் போட்டி பலமாகவே உள்ளது.

சிவகங்கை

வீரம் செறிந்த சீமை என்று அழைக்கப்படும் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை, திருமயம், ஆலங்குடி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் வேட்பாளராக  போட்டியிட்டார்.

அவர், 5 லட்சத்து 66 ஆயிரத்து 104 வாக்குகள் பெற்று வென்றார்.

அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜகவின் ஹெச்.ராஜா 2 லட்சத்து 33 ஆயிரத்து ,860 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.

இந்த முறையும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரமே மீண்டும் போட்டியிடுகிறார்.

அதிமுகவில் சேவியர்தாஸ் களம் காண்கிறார். அவருக்கு தேமுதிக ஆதரவு அளிக்கிறது.

பாஜக கூட்டணியில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் தேவநாதன் போட்டியிடுகின்றனர்.

பாஜக, தினகரனின் அமமுக, ஓபிஎஸ் அணி ஆகிய கூட்டணிக் கட்சியினர் தொகுதியில் கணிசமாக வாக்குகளைக் கொண்டிருப்பது அவருக்கு சாதகமாக விளங்குகின்றன.

கார்த்தி சிதம்பரத்துக்கு திமுக கூட்டணிக் கட்சிகளின் வாக்குகள் பெரும் பலமாக அமைந்துள்ளது.

– பி.எம்.எம்.

You might also like