ஒருகாலத்தில் சர்வதேசக் கால்பந்து போட்டிகளில் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது தெரியுமா என்று எவராவது சொன்னால், அதை நம்பாமல் கேலி செய்பவர்களின் எண்ணிக்கையே அதிகமிருக்கும்.
ஏனென்றால், மக்கள்தொகையில் மிகச்சிறிய நாடுகள் கூட ஆதிக்கம் செலுத்தும் அவ்விளையாட்டில் இந்தியாவின் தேசிய அணி தற்போது அடைந்திருக்கும் நிலை.
அப்படிப்பட்ட சூழலில், 1950களில் கால்பந்தில் இந்தியா எழுச்சி பெற்றிருந்தது எனும் உண்மை ஆச்சர்யத்தையே தரும்.
அந்த எழுச்சிக்குக் காரணமாக விளங்கியவர் இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர் சையத் அப்துல் ரஹீம். அவரது வாழ்வையொட்டி உருவாக்கப்பட்டுள்ளது ‘மைதான்’ திரைப்படம்.
அமித் ரவீந்திரநாத் சர்மா இயக்கியுள்ள இப்படத்தில் ரஹீமாக அஜய் தேவ்கன் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இதற்கு இசையமைத்துள்ளார். போனி கபூர் இதனைத் தயாரித்துள்ளார்.
சரி, இப்படம் எப்படிப்பட்ட அனுபவத்தைத் தருகிறது?
மைதானத்தில் அதிர்வு!
1952ஆம் ஆண்டு ஹெல்சிங்கியில் நடந்த ஒலிம்பிக் கால்பந்து போட்டியில் யுகோஸ்லோவிய அணியிடம் 10 – 1 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வியடைந்தது. அதில் இருந்து ‘மைதான்’ திரைக்கதை தொடங்குகிறது.
அந்த தோல்விக்குப் பொறுப்பேற்பது யார் என்று இந்தியக் கால்பந்து கூட்டமைப்பு சம்மேளனத்தின் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
அதற்குத் தான் பொறுப்பேற்பதாகச் சொல்லும் பயிற்சியாளர் ரஹீம் (அஜய் தேவ்கன்), அடுத்தடுத்த போட்டிகளில் பங்கேற்பதற்கான இந்திய அணியைத் தானே தேர்வு செய்யச் சம்மதிக்க வேண்டுமென்று அக்கூட்டத்தில் நிபந்தனை விதிக்கிறார்.
கூட்டமைப்பின் உறுப்பினர்களில் பெரும்பாலானோர் அதனை ஏற்கின்றனர்.
செகந்திராபாத், கல்கத்தா, பெங்களூர், பம்பாய் என்று பல ஊர்களில் திறமையாக விளையாடிவரும் இளம் வீரர்களின் ஆட்டத்தை நேரில் கண்டு, அவர்களைத் தேர்வு செய்கிறார் ரஹீம். ஒரு அணியாக ஒன்றிணைந்து விளையாடக் கற்றுக் கொடுக்கிறார்.
1956 ஒலிம்பிக் போட்டியில் அரையிறுதி வரை சென்றது உட்பட அக்காலகட்டத்தில் இந்தியக் கால்பந்து அணி பெற்ற வெற்றிகளுக்குக் காரணமாக விளங்குகிறார் ரஹீம். ஆனால், 1960 ஒலிம்பிக்கில் முதல் சுற்றோடு இந்திய அணி வெளியேற வேண்டியதாகிறது. அதனால், அவர் பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார்.
ஹைதராபாதில் இருக்கும் தனது வீட்டுக்குத் திரும்புகிறார். அந்த காலகட்டத்தில், சிகரெட் புகைத்து நுரையீரல் புற்றுநோய்க்கு ஆளாகிறார்.
நீண்ட நாட்கள் உயிரோடு இருக்க முடியாது என்ற உண்மையைத் தெரிந்ததும் மனைவி சாயிரா (பிரியாமணி), மகன், மகளோடு இருக்க வேண்டுமென்று விரும்புகிறார். ஆனால், அவரால் அங்கு மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. மனதளவில் ரொம்பவே சோர்ந்து போகிறார்.
அதனைப் பார்க்கும் சாயிரா, ’இதற்கு முன் வாழ்ந்தது போல கால்பந்து பயிற்சியாளராக இருப்பதே உங்களுக்குச் சரி’ என்கிறார். இந்தியக் கால்பந்து கூட்டமைப்பு சம்மேளனத்தில் புதிதாகப் பதவிக்கு வந்தவர்களால் தான், ரஹீம் வெளியேற்றப்பட்டிருக்கிறார். அதே நபர்களிடம், மீண்டும் பயிற்சியாளர் ஆக வாய்ப்பு கேட்கிறார்.
முன்னாள் சம்மேளனத் தலைவரின் ஆதரவு காரணமாக, அங்கிருக்கும் புதிய உறுப்பினர்கள் ரஹீமுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். அதனால், மீண்டும் அவர் பயிற்சியாளர் ஆகிறார்.
பத்திரிகையாளர் ராய் சவுத்ரி (கஜராஜ் ராவ்), சம்மேளனத்தின் தலைவராக இருக்கும் சுபாங்கர் அது சிலருக்கு எரிச்சல்படுத்துகிறது. அவர்களது சதிகளை மீறி, ஆசியக் கோப்பை போட்டிக்கு இந்திய அணியைத் தயார்படுத்துகிறார் ரஹீம்.
பல்வேறு தடைகளைக் கடந்து அப்போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் பெறுவதோடு ‘மைதான்’ முடிவடைகிறது.
அந்த போட்டி முடிந்த சில மாதங்களில் ரஹீம் இறந்து போகிறார். வாழ்ந்த காலத்தில், இந்தியக் கால்பந்து சார்ந்த அவரது முடிவுகள் அனைத்தும் மைதானத்தில் அதிர்வுகளை ஏற்படுத்துபவையாக இருந்திருக்கின்றன.
அந்த உண்மைக் கதையில் மிகச்சிலவற்றை மட்டும் கையிலெடுத்துக்கொண்டு. தனது சகாக்களுடன் இணைந்து இதன் திரைக்கதை வடிவத்தை ஆக்கியிருக்கிறார் இயக்குனர் அமித்.
அஜய் தேவ்கனின் அர்ப்பணிப்பு!
விரலிடுக்கில் புகையும் சிகரெட், கோட் அணிந்த தோற்றம், அதிகம் பேசாத இயல்பு, எப்போதும் தன்மானத்தை விட்டுக்கொடுக்காத குணாதிசயம் என்று ரஹீம் பாத்திரத்திற்குத் திரையில் உயிர் தந்திருக்கிறார் அஜய் தேவ்கன். வெறுமனே ஒரு பாத்திரமாக மட்டுமே அவர் இக்கதையில் தென்படுவது நிச்சயம் ஆச்சர்யத்திற்குரியது. அவரது அர்ப்பணிப்பு மிக்க நடிப்பு பாராட்டுக்குரியது.
பிரியாமணி இதில் நாயகியாக நடித்துள்ளார். அவர் வரும் காட்சிகள் குறைவென்றபோதும், நிறைவான நடிப்பைத் தந்துள்ளார்.
இதில் பத்திரிகையாளர் ராய் சவுத்ரி ஆக ‘பதாய் ஹோ’ கஜராஜ் ராவ் தோன்றியுள்ளார். மனதில் குயுக்திகளுடன் நாயகனுக்கு எதிராகக் காய் நகர்த்தும் அப்பாத்திரத்தில் மிடுக்கான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
சுபாங்கர் ஆக வரும் ருத்ரனில் கோஷ், அஞ்சான் ஆக நடித்துள்ள பஹருல் இஸ்லாம் உட்படப் பலர் இதில் நடித்துள்ளனர்.
குறிப்பாக வீரர்கள் பி.கே.பானர்ஜி, பீட்டர் தங்கராஜ், ஜர்னைல் சிங், சுனி கோஸ்வாமி, துளசிதாஸ் பலராம், பிராங்கோ வேடங்களில் நடித்தவர்கள் நம் மனதில் பதிகின்றனர்.
இவர்கள் தவிர்த்து சுமார் இரண்டு டஜன் நடிகர்களாவது இதில் முகம் காட்டியிருப்பார்கள். வெளிநாட்டு அணிகளைச் சேர்ந்தவர்களாக, வர்ணனையாளர்களாக, பத்திரிகையாளர்களாக வந்தவர்கள் கணக்கு தனி.
தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பும் ஒருங்கிணைப்பும் ‘மைதான்’ படத்தைச் சர்வதேசத் தரத்தை எட்டச் செய்திருக்கிறது. இந்தியாவில் இப்படியொரு நிலையை எந்தவொரு படமும் எட்டவில்லை என்று சொல்ல முடியும். நிச்சயமாக, இது ஒரு மைல்கல் சாதனை.
அற்புதமான விஎஃப்எக்ஸ், கியாதி மோகன் காஞ்சனின் தயாரிப்பு வடிவமைப்புடன் கைகோர்த்து ஒரு ‘கிளாசிக்’ உலகைப் படைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் துஷார் காந்தி ரே.
கால்பந்து போட்டிகளைக் காட்டும் இடங்களில் வீரர்களின் பாய்ச்சலுக்கும் பந்தின் வேகத்திற்கும் இணையாகப் பயணித்திருக்கிறது பியோதர் லியாஸின் ஒளிப்பதிவு.
போலவே, அக்காட்சிகளை ஷாநவாஸ் மோசனி தொகுத்திருக்கும் விதம், தற்போதைய யுகத்தில் ஒரு கால்பந்து போட்டியைக் காணும் அனுபவத்தைத் தருகிறது.
இதர காட்சிகளைத் தொகுத்திருக்கும் தேவ் ராவ் ஜாதவ், திரையில் எந்தவிதக் குழப்பமும் இன்றி கதை விரிய வழிவகை செய்திருக்கிறார்.
மிகச்சிறப்பான ஹீரோயிசம் கொண்ட படங்களில் நாயகன் எவ்வாறு முன்னிறுத்தப்படுவாரோ, அதைவிட ஒருபடி மேலாக ‘மைதான்’ படத்தின் பாத்திரங்களை உயர்த்திக் காட்ட உதவியிருக்கிறது ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை. அணிக்கான 11 வீரர்களைத் தேடி அஜய் தேவ்கன் பயணிக்கையிலேயே அது வெளிப்பட்டுவிடுகிறது.
போலவே இரண்டு, மூன்று காட்சிகள் ஊட்ட வேண்டிய தகவல்களை ரஹ்மானின் பாடல்கள் நமக்குச் சொல்லி விடுகின்றன.
டிஐ, விஎஃப்எக்ஸ், ஆடை வடிவமைப்பு, ஒப்பனை, ஒலி வடிவமைப்பு என்று பல துறைகளில் நேர்த்தியைக் கொண்டுள்ளது இத்திரைப்படம். நிச்சயம் அதற்காகச் சர்வதேச விழாக்களில் நிறைய விருதுகளையும் அள்ளும்.
சைவின் குவாத்ரஸ், ஆகாஷ் சாவ்லா, அருணவ ஜாய் சென்குப்தா ஒன்றிணைந்து இதன் கதையை ஆக்கியுள்ளனர். சைவின் குவாத்ரஸ் அதற்குத் திரைக்கதை அமைக்க, அதில் அவருக்கு அமன் ராய், அதுல் சஹி, அமித் சர்மா உதவியிருக்கின்றனர். ரிதேஷ் ஷா, சித்தாந்த் மாகோ வசனங்களை அமைத்துள்ளனர்.
எழுத்தாக்கத்தில் வெளிப்பட்ட இந்த கூட்டுழைப்பே, திரையில் செறிவானதொரு காட்சியாக்கம் நிகழ வழி வகுத்திருக்கிறது. அதனை உணர்ந்து, மிகச்சிறப்பானதொரு அனுபவத்தைத் திரையில் நாம் காணத் தருகிறார் இயக்குனர் அமித் சர்மா.
கிளாசிக் அனுபவம்!
உலக மொழிகளில் கிளாசிக்கான திரைப்படங்களை விதவிதமான வகைமைகளில் பார்த்து மகிழ்ந்தவர்களை, ‘மைதான்’ நிச்சயம் திருப்திப்படுத்தும். அதுவே இப்படத்தின் சிறப்பு. திரைப்படத் துறையைச் சார்ந்தவர்கள் இதில் கொட்டப்பட்டிருக்கும் உழைப்பைக் கண்டு வியப்பார்கள்.
சாதாரண ரசிகர்கள் இப்படத்தினை எவ்வாறு வரவேற்பார்கள் என்ற கேள்விக்குப் பதில் சொல்வது கடினம்.
ரஹீம் என்ற மனிதரின் வாழ்க்கை இதில் வெளிப்பட்டிருப்பதை மறுக்க முடியாது. ஆனால், சினிமாத்தனமான திருப்பங்கள் ஏதுமில்லாமல் வெறுமனே அவரது கால்பந்து சார்ந்த வேட்கையைக் காட்டும் வகையில் திரைக்கதையும் காட்சியாக்கமும் அமைந்துள்ளன.
‘மைதான்’ படத்தின் முடிவில், ரஹீம் கண்டெடுத்த இந்தியக் கால்பந்து வீரர்கள் திரையில் தோன்றுகின்றனர். அந்த காலகட்டத்தில் அவர்கள் பங்கேற்ற போட்டிகளும் பரிசுகளும் புகைப்படங்களாக நாம் காணக் கிடைக்கின்றன.
அவை அனைத்தும், ஒருகாலத்தில் இந்தியாவில் கால்பந்து அணி சிறந்து செயல்பட்டதைக் காட்டுகிறது. அது கற்பனையல்ல, உண்மை என்று உணர்த்துகிறது. அந்த வகையில், கால்பந்தை நேசிப்பவர்கள் இதனை நிச்சயம் காண வேண்டும்.
அது மட்டுமல்லாமல், ஒரு சாதாரண மனிதன் இப்படத்தைப் பார்க்கும்போது சில பாடங்களைப் பெறுவது நிச்சயம். நாம் விரும்பும் ஒன்றின்மீது நூறு சதவிகிதம் நம்பிக்கையையும் உழைப்பையும் செலுத்த வேண்டுமென்பது அதிலொன்று.
அதனைப் பெறுவதற்காக, மூன்று மணி நேரம் ஓடும் இத்திரைப்படத்தினை லாஜிக் சார்ந்த எந்தக் கேள்விகளும் எழுப்பாமல் பார்த்து ரசிக்கலாம். அந்த வகையில், ‘மைதான்’ ஒரு மாஸ்டர்பீஸ்!
– உதய் பாடகலிங்கம்