ஆவேசம் – ‘விக்ரம்’ படத்தின் காப்பியா?!

மலையாளத் திரையுலகம் மட்டுமல்லாமல் பிற மொழி ரசிகர்களையும் வசீகரித்துவரும் ஒரு நட்சத்திர நடிகர் பகத் பாசில். அவரது படங்கள் வித்தியாசமானதாக இருக்கும் என்ற நம்பிக்கையைத் தொடர்ந்து ரசிகர்களிடத்தில் வலுப்படுத்தி வருவதே அவரது பலம்.

அப்படிப்பட்ட ஒருவர் முழுக்க கமர்ஷியல் அம்சங்கள் கொண்ட ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார் எனும்போது, அதன் மீதான எதிர்பார்ப்பு நிச்சயம் எகிறும். அந்த வகையிலேயே ‘ஆவேசம்’ படத்தின் டீசர், ட்ரெய்லர் அனைத்தும் வரவேற்பைப் பெற்றன.

‘ரோமாஞ்சம்’ தந்த ஜித்து மாதவன் இயக்கியுள்ள இப்படம் தற்போது தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.

படம் எப்படியிருக்கிறது?

பெங்களூருவைக் கலக்கும் ரவுடி!

கேரளாவைச் சேர்ந்த அஜு (ஹிப்ஸ்டர்), பிபி (மிதுன் ஜெய் சங்கர்), சாந்தன் (ரோஷன் ஷானவாஸ்) மூவரும் பெங்களூருவில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்கின்றனர்.

அவர்களது பெற்றோர் பெரிதாகக் கல்வியறிவு பெறாதவர்கள். அதனால், பிள்ளைகள் பெரிய நிலைக்கு வர வேண்டும் என்றெண்ணித் தங்களது சேமிப்பைச் செலவழிக்கத் தயாராக இருக்கின்றனர்.

அதற்கு மாறாக, கல்லூரிக் காலத்தில் ‘ஜாலியாக’ இருக்க வேண்டுமென்று மூவரும் நினைக்கின்றனர். கல்லூரி விடுதிக்குச் செல்லாமல் பிகே விடுதி எனும் தனியார் விடுதியில் தங்குகின்றனர். அங்கு மது, சிகரெட் தாராளமாகக் கிடைக்கும் என்பதே அதற்கான காரணம்.

கல்லூரியில் சீனியரான குட்டி (மிதுட்டி) கேங் ராகிங்கில் ஈடுபடுகிறது. அவர்களிடம் இருந்து தப்பிக்க, பிகே விடுதியில் இருக்கும் முதலாமாண்டு மாணவர்கள் ஒரு கும்பலாகத் தெரிய வேண்டும் என்கிறார் அஜு.

அது போலவே, அவர்கள் ஒரு ‘கேங்’ ஆக நடமாடுவது குட்டி கேங்கை எரிச்சலடையச் செய்கிறது.

ஒருநாள் பிகே விடுதிக்கு வந்து அஜு, பிபி, சாந்தனை இழுத்துச் செல்கிறது அந்த கேங். அவர்களைக் கும்மி எடுக்கிறது.

அந்த அவமானத்திற்குப் பழி வாங்க, அந்த ஏரியாவில் இருக்கும் ஒரு ரவுடியின் உதவியைப் பெறுவதென்று மூவரும் முடிவு செய்கின்றனர்.

அப்படியொரு ரவுடியைக் கண்டுபிடிப்பதற்காகவே வெவ்வேறு பார்களுக்கு செல்கின்றனர்.

ஒருநாள், ஒரு பாரில் ரங்காவைத் (பகத் பாசில்) தற்செயலாக அவர்கள் சந்திக்கின்றனர். அவரிடம் எப்படியாவது அறிமுகமாகிவிட வேண்டுமென்று துடிக்கின்றனர். அவர்களது எதிர்பார்ப்புக்கு மாறாக, அவரே தானாக முன்வந்து பழகத் தொடங்குகிறார். மெல்ல அந்த பழக்கம் நட்பாக மாறுகிறது.

மூவருக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் நிலையைத் தொடுகிறார் ரங்கா. அவர்களுக்குத் தனது பைக், வீட்டைக் கொடுக்கிறார். அந்த வீட்டில் மது பாட்டில்களும் சிகரெட் பாக்கெட்களும் நிறைந்து இருப்பது, அவர்களுக்குச் சொர்க்கமாகத் தெரிகிறது.

ரங்காவின் ரவுடித்தனத்தை நேரில் காண்பது, அவர் மூலமாக குட்டி கேங்கை துவம்சம் செய்வதே அவர்களது திட்டம். அதற்காகவே தினமும் ரங்காவையும் அவரது ஆட்களையும் தினமும் சந்திக்கின்றனர்.

ஒருகட்டத்தில் ரங்கா குறித்து அவரது கையாள் அம்பான் (சஜின் கோபு) சொல்லும் தகவல்கள் எல்லாம் அவர்களுக்குக் கட்டுக்கதைகளாகப் படுகின்றன. குட்டி கேங்கை அடித்து துவைத்தபிறகு, அந்தக் கதைகளை எல்லாம் கேட்கத் தேவையில்லை என்ற எண்ணத்தில் அவர்கள் இருக்கின்றனர்.

அஜு, பிபி, சாந்தன் நினைத்தது போலவே, ஒருநாள் ரங்காவின் ஆட்கள் குட்டி கேங்கை கல்லூரி வளாகத்திலேயே புரட்டி எடுக்கின்றனர். அதன்பிறகு, மூவரும் அந்த கல்லூரி மாணவர்களிடையே ‘பேமஸ்’ ஆகின்றனர்.

ஆனால், விஷயம் கல்லூரி நிர்வாகம் வரை செல்கிறது. ஏற்கனவே ‘பெயில்’ ஆன பாடங்களுக்காக நடக்கும் மறுதேர்வில் ‘பாஸ்’ ஆகாவிட்டால், அவர்களது பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்படும் என்று எச்சரிக்கிறார் நிர்வாக இயக்குனர் (ஆசிஷ் வித்யார்த்தி).

அதனைத் தொடர்ந்து, பதினைந்து நாட்களுக்குள் ‘பெயில்’ ஆன பாடங்களைப் படித்தாக வேண்டுமென்ற கட்டாயத்திற்கு மூவரும் ஆளாகின்றனர். அதனை ரங்காவிடம் தெரிவித்துவிட்டு ‘நைசாக’ நழுவ நினைக்கின்றனர்.

ஆனால், விதி அவர்களை விடுவதாக இல்லை. பொறியில் சிக்கிய எலி போல ரங்காவின் அசுரத்தனமான பாசப்பிணைப்பில் இருந்து விடுபட முடியாமல் அவர்கள் தவிக்கின்றனர்.

அவரை ஏமாற்றிவிடலாம் என்ற நினைப்பில், வேறொரு விடுதியில் தங்கிப் பரீட்சைக்குப் படிக்கின்றனர். அந்த காலகட்டத்தில், அவர்களது மொபைல் போன்களையும் ‘ஸ்விட்ச் ஆஃப்’ செய்துவிடுகின்றனர்.

இடைப்பட்ட காலத்தில், அவர்களைத் தேடி மீண்டும் குட்டி கேங்கை புரட்டி எடுக்கிறார் ரங்கா. இம்முறை விஷயம் ஊடகங்களிலும் கசிகிறது. அதன்பிறகே, தாங்கள் ரங்காவின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது என்பதை உணர்கின்றனர்.

அதன்பிறகு, அவர்கள் என்ன செய்தார்கள்? தன்னை ஏமாற்றியவர்களுக்குக் கொடூரமாகத் தண்டனை கொடுக்கும் வழக்கமுள்ள ரங்கா, அந்த இளைஞர்களை என்ன செய்தார் என்று சொல்கிறது ‘ஆவேசம்’ படத்தின் மீதி.

‘ரோமாஞ்சம்’ போலவே இப்படத்தின் கதையும் பெங்களூருவில் நடப்பது போன்று வடிவமைத்திருக்கிறார் இயக்குனர் ஜித்து மாதவன். அதற்கேற்ப மலையாளம், கன்னடம், இந்தி கலந்து பேசுகிறது ரங்கா பாத்திரம்.

அது மட்டுமல்லாமல் அப்பாத்திரத்தின் தனித்துவமான குணாதிசயங்களே, ரொம்பவும் சாதாரணமான ஒரு கேங்க்ஸ்டர் கதைக்கு கிளாசிக் அந்தஸ்தை வழங்கியிருக்கிறது.

படம் முழுக்க உருண்டோடும் மது பாட்டில்களும், நிறைந்து நிற்கும் சிகரெட் புகையும், இதனைப் புறக்கணிக்கப் போதுமான காரணங்களை வழங்கும். அதையும் மீறி இப்படத்தினைக் காணச் செய்கிறது ஜித்து மாதவன் குழுவின் காட்சியாக்கம் செய்திருக்கும் மாயாஜாலம்.

பகத்பாசிலின் அசுரத்தனம்!

வன்மத்தை வெளிப்படுத்தும் அஜு பாத்திரத்தில் ஹிப்ஸ்டரும், எதையும் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளத் துடிக்கும் பிபியாக மிதுன் ஜெய்சங்கரும், ’வின்னர்’ கைப்புள்ள போன்றிருக்கும் சாந்தனாக ரோஷன் ஷாநவாஸும் நடித்துள்ளனர். அவர்களது பாத்திரங்கள் வலுவாக அமைந்துள்ளதே இப்படம் காட்டும் உலகுக்குள் நாம் நுழையக் காரணமாக உள்ளது.

ஆக்டோபஸ் கரங்கள் போன்று மொத்தப் படத்தையும் ஆக்கிரமித்துள்ளது பகத் பாசிலின் அசுரத்தனமான நடிப்பு. கெட்டியான மீசை, குறைவான தலைமுடி, வெள்ளை பேண்ட் சர்ட், கழுத்து நிறைய தங்க நகைகள் என்று படம் முழுக்க வித்தியாசமானதொரு தோற்றத்தில் அவர் வருகிறார்.

‘டப்மாஷ்’ அலப்பறைகளில் பகத் பாசில் ஈடுபடுவதாக வரும் காட்சிகள் மிகச்சில நொடிகளே வந்தாலும், நம்மை வயிறு வலிக்கச் சிரிக்க வைக்கின்றன.

முன்பாதியில் அவர் தனியாக ‘டான்ஸ்’ ஆடுவதாக ஒரு காட்சி உண்டு. அதில் முழுக்க முழுக்க எண்பதுகளில் இருந்த ரஜினி, கமலை நினைவூட்டியிருக்கிறார். அதனை வடிவமைத்த சாண்டி மாஸ்டருக்கு தனிப்பட்ட பாராட்டுகள்!

பகத்தின் அடியாளாக வரும் சஜின் கோபு, ‘யார் இவர்’ என்று கேட்கும் அளவுக்கு நகைச்சுவையில் பின்னியெடுத்திருக்கிறார்.

அதுவும் ‘ரங்கா எப்படிப்பட்டவர் தெரியுமா’ என்று அவர் கூறும் கதைகள் ஒவ்வொன்றும் வெடிச்சிரிப்புக்கு உத்தரவாதம் தரும்.

மன்சூர் அலிகான் இதில் வில்லனாக நடித்துள்ளார். ஆசிஷ் வித்யார்த்தி ஒரு காட்சியில் கௌரவமாகத் தோன்றியிருக்கிறார்.

இந்தப் படத்தில் சில பெண் கலைஞர்கள் இடம்பெற்றிருந்தாலும், பிரதானமான பெண் பாத்திரம் என்று எதுவுமில்லை. ஆனால், அம்மா சென்டிமெண்டை வலியுறுத்தும் காட்சிகள் உண்டு.

‘ஸ்டைலான மேக்கிங்’ மட்டுமே இப்படத்தை இன்னொரு முறை கண வேண்டுமென்ற உத்வேகத்தைத் தருகிறது. அதற்குப் பாதை அமைத்து தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சமீர் தாஹிர்.

சேதன் டிசௌசா வடிவமைத்துள்ள சண்டைக்காட்சிகளில் கேமிரா சுற்றிச் சுழன்றாடியிருக்கும் விதம், அவரது கற்பனையை வியக்க வைக்கிறது.

வெவ்வேறு தகவல்களைச் சொல்லும் காட்சிகளை ஆங்காங்கே இடைச்செருகலாகக் காட்டியபோதும், கதையில் எந்தக் குழப்பமும் இன்றி நாம் ஒன்ற வழி வகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷன்.

சுஷின் ஷ்யாம் பின்னணி இசை, நம்மைத் திரையுடன் ஒன்ற வைக்கிறது. இப்படத்தில் வரும் பாடல்களும் கூட வழக்கமான ‘குத்து’ பாடல்களாக இல்லை. அதனால், கொஞ்சம் ‘ப்ரெஷ்’ஷான ஒரு படம் பார்த்த திருப்தி கிடைக்கிறது.

தனியார் விடுதி, ரவுடிகளின் இருப்பிடம், மதுபானக் கடைகள் மட்டுமல்லாமல் ரங்காவின் வீடு என்று கதை நிகழும் களங்களுக்கே நம்மை அழைத்துச் செல்கிறது அஸ்வினி காலேவின் தயாரிப்பு வடிவமைப்பு.

கூடவே, மசார் ஹம்சாவின் ஆடை வடிவமைப்பு இரு வேறு விதமான மனிதக் குழுக்களை நமக்குத் திரையில் காட்டுகிறது.

ஜித்து மாதவன் இப்படத்தின் எழுத்தாக்கத்தினைக் கையாண்டிருப்பதோடு இயக்கவும் செய்திருக்கிறார். மலையாளத் திரையுலகில் இது அரிதாக நடைபெறும் ஒரு விஷயம்.

ரங்கா மட்டுமல்லாமல் படத்தில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் தனித்துவமாகத் தெரிய வேண்டுமென்று அவர் மெனக்கெட்டிருப்பதே, இப்படத்தைத் தனித்துவமானதாக மாற்றியிருக்கிறது.

வழக்கமான கமர்ஷியல் படமல்ல!

முழுக்க ஒரு நடிகரின் நட்சத்திர அந்தஸ்தைத் தாங்கிப் பிடிக்கும்விதமான ஆக்‌ஷன் படங்களில் அவரது அறிமுகக் காட்சி, திரைக்கதை தொடங்கி அரை மணி நேரம் கழித்து இடம்பெறுவது ஒருவகையான ஸ்டைல்.

அதன்பிறகு, அவர் மட்டுமே அந்த படத்தில் பிரதானமாகக் காட்டப்படுவார். அப்படியொரு படமாக அமைந்துள்ளது ‘ஆவேசம்’.

‘கேங்க்ஸ்டர்’ கதை என்றபோதும், ‘ஆவேசம்’ ஒரு வழக்கமான கமர்ஷியல் படம் அல்ல; காரணம், ரவுடித்தனத்தைக் கொண்டாடுகிற மனோபாவம் இதில் அறவே இல்லை.

அதேநேரத்தில், அதனை மிகவும் சிலாகிப்பது போன்று பல காட்சிகள் உண்டு. அந்த முரணைப் புரிந்துகொண்டால், இப்படத்தைக் கொண்டாடித் தீர்க்கலாம்.

‘ரங்கா யார் தெரியுமா’ என்று சஜின் கோபு பாத்திரம் படம் முழுக்கச் சில தகவல்களைச் சொல்லும். அது காட்சிகளாகவும் விரியும். ஆனால் பிபி, சாந்தன், அஜு பாத்திரங்கள் அதனை ‘காமெடியாக’ எண்ணிச் சிரிக்கும்.

பிற்பாதியில் அந்த தகவல்கள் உண்மை என்று தெரியவரும்போது, மூவரும் அலறி ஓடுவதாகக் காட்டியிருப்பார் இயக்குனர். அந்தக் கணமே, இத்திரைக்கதையில் வரும் இரண்டாவது திருப்பம். அதுவே, ரங்கா பாத்திரம் எப்படிப்பட்டது என்பதை உணர்த்தும்.

‘விக்ரம்’ படத்திலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இதே உத்தியைக் கையாண்டிருப்பார். ‘விக்ரம் யார் தெரியுமா’ என்ற கேள்விக்குப் பதிலாகப் பல பாத்திரங்கள் சொல்லும் தகவல்களின் இன்னொரு பக்கத்தை வேறு கோணத்தில் காட்டியிருப்பார்.

ஆதலால், ரங்கா பாத்திரம் கட்டமைக்கப்பட்டுள்ள விதம் ‘அது விக்ரம் படத்தின் காப்பியா’ என்ற கேள்வியை நமக்குள் நிச்சயம் எழுப்பும்.

எத்தனை கொடூரமானவராக இருந்தாலும், தான் சிறுவயதில் தவறவிட்ட விஷயங்கள் அந்த இளைஞர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று ரங்கா நினைப்பதே இக்கதையின் அடிநாதம்.

அவர்களில் ஒரு இளைஞனின் தாய், ‘மகனே’ என்று அழைக்கும்போது அவர் உருகிப்போவார்.

அதேநேரத்தில், தன்னைப் பற்றிய மற்றவர்களின் கணிப்புகளுக்கு மாறாக மிகக்கொடூரமான காரியங்களையும் செய்து முடிப்பார். அந்த பாத்திர வார்ப்பே ‘ஆவேசம்’ படத்தின் பலமும் பலவீனமுமாக இருக்கிறது.

‘அவனை இப்படி அடி, இவனை அப்படி அடி’ என்று பகத் பாசில் பாத்திரம் தனது அடியாட்களுக்குக் கட்டளையிடும் இடங்கள் சிலருக்கு ‘காமெடியாக’ தெரியும். சிலருக்கு அது ‘சூர மொக்கை’யாகத் தோன்றும்.

அதில் நீங்கள் எந்த வகை என்பதைப் பொறுத்து, இந்த ‘ஆவேசம்’ உங்களுக்குப் பிடித்தமானதா, இல்லையா என்பதை முடிவு செய்துவிட முடியும்.

சுருக்கமாகச் சொன்னால், சேவல் பண்ணைக்குள் நுழைந்தது போன்று முழுக்க ஆண்களையே மையப்படுத்தியிருக்கும் ‘ஆவேசம்’ வழக்கத்திற்கு மாறான கமர்ஷியல் படமாக நிச்சயம் இருக்கும்!

– உதய் பாடகலிங்கம்

You might also like