இயக்குநர் எஸ்.சற்குணம் இயக்கத்தில் விமல், இனியா, கே.பாக்கியராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் 2011-ல் வெளிவந்த படம் ‘வாகை சூட வா’.
சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது இந்தப் படம் அனைவராலும் கவனிக்கப்பட்டது.
கல்வி கற்க முடியாமல் குழந்தை தொழிலாளர்களாக மாறி கொடுமை அனுபவிக்கும் உலகில் உள்ள அத்தனை ஏழை குழந்தைகளுக்கும் சமர்ப்பணம் செய்யப்பட்ட படம்.
இந்தப் படத்தைப் பற்றி சுவாஸ்ரயமான தகவலை ஒருவர் முகநூலில் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவு இதோ.
வாகை சூடவா திரைப்படத்தின் ஒரு காட்சியில், வாத்தியார் தன் வீட்டை கூட்டி பெருக்கிக் கொண்டிருப்பார்.
அந்த ஊரில் ஆண்கள் வீடு கூட்டுவதை முதல்முறையாக பார்க்கும் அந்த சிறுவர், சிறுமியர்கள் வித்தியாசமாகவும் ஆச்சரியத்துடன் அதைப்பார்த்து சிரித்து கொண்டிருப்பார்கள்.
அவர் வானொலியில் “வாங்க மச்சா வாங்க வந்த வழிய பாத்துப்போங்க.. ஏங்கி ஏங்கி நீங்க ஏன் இப்பிடி பாக்கறீங்க“ என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும்..
வாத்தியார் திரும்பி அவர்களை பார்த்ததும் அனைவரும் ஓடி விடுவார்கள். ஒரு சிறுமி மட்டும் நின்று கொண்டிருப்பாள்.
வாத்தியார் அவளிடம் ஏன் நீங்க மட்டும் ஓடலையா என்று கேட்டதும்,
அவள், “பொம்பள இருக்கும்பொழுது ஆம்பள கூட்டக்கூடாது வாத்தியாரே.
தினமும் நானே வந்து கூட்டி பெருக்கிடுறேன், ஆனா என்ன மட்டும் படிக்க கூப்டாதீங்க வாத்தியாரே” என்பாள்.
அதற்கு விமல், “கூட்டுறதும் பெருக்கறதும் மட்டும் தான் உன் வேலை. ஆனா ரெண்டும் ரெண்டும் நாலுன்னு கூட்டணும், மூணும் மூணும் ஒன்பதுன்னு பெருக்கணும். சாயங்காலம் 5 மணி ஆன உடனே சமத்தா இங்க வந்துறணும் சரியா…” என்று சொல்லிவிட்டு, துடைப்பத்துடன் மீண்டும் உள்ளே செல்வார்.
அவர் கூட்டிப் பெருக்கும் சத்தம் கேட்டுக் கொண்டிருக்கும்.
அவ்வளவுதாங்க கல்வி.
மற்றொரு காட்சியில்,
மதி வாத்தியாரின் வானொலியில்.. “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்” என்ற பாடலை ரசித்து கேட்டுக் கொண்டிருப்பாள், “எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் சார் மறுபடியும் போட்டாங்கன்னா கூப்பிடுறீங்களா” என்பாள்.
ஆனால், வாத்தியார் ஊரை விட்டு போகும்வரை அந்த பாடல் அந்த வானொலியில் ஒலிக்கவே ஒலிக்காது.
இறுதிக் காட்சியில், தொலைவில் “நான் பேச நினைப்பதெல்லாம்” பாடல் ஒலிக்கும்.
வாத்தியாரும் மதியும் சட்டென ஒரு நொடி இசை வந்த திசை திரும்பி பார்த்துவிட்டு அடுத்த நொடி ஒருவருக்கு ஒருவர் காதல் பார்வையை பொழிவார்கள்.
அப்போது, வாத்தியார் மதியிடம்,
“சாப்பாடு கிடைக்குமா” என்பார்.
“அவள் இப்பயா” என்று கேட்பாள்.
வாத்தியார், “இப்பக்கி மட்டும் இல்ல… வாழ்க்கை பூரா சாப்ட” என்பார்.
அவள் வெட்கத்துடன் பாடல் ஒலித்த இடம் நோக்கி ஓடிக் கொண்டிருப்பாள்.
வாத்தியாரும் மதியை நினைத்து சிரித்துக் கொண்டிருப்பார்.
அப்பொழுது அருகில்,
லாரியில் லோடு ஏற்றியதற்காக லாரிக்காரன் சிறுவர்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருப்பான். சிறுவர்கள் அவனிடம் சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள்.
ஒரு சிறுவன், “என்னன்ணே மூன்று ரூபாய் கொடுக்கிற” என்பான்.
லாரிக்காரன் ஏ அவ்ளோதாண்டா வரும் என்பான்.
அதற்கு அந்த சிறுவன், “அண்ணே, ஒரு நட கல்லுக்கு ஒண்ணே கால் ரூவாயினாலும் நாலு நட நல்ல கல்லுக்கு நாலு ஒண்ணு நாலு, நாலு க்கா ஒன்னு மொத்தம் அஞ்சு ரூபா ஆகுது. மூணு ரூபாய குடுத்துட்டு வெச்சிக்கோ வெச்சிக்கோ ன்ற.. இல்ல நீயே கணக்கு சொல்லு” என்பான்.
அந்த லாரிக்காரன் மீதம் இரண்டு ரூபாய் கொடுத்து செல்வான்.
சிறுவர்கள் மகிழ்ச்சியுடனும் திரும்பி கொண்டிருப்பார்.
மதியின் வெட்கத்தில், காதல் புன்னகையாய் தொடங்கிய வாத்தியாரின் புன்னகை இந்த நொடி வெற்றி புன்னகையாய் மாறிக் கொண்டிருக்கும்.
அப்போது பின்னணியில்,
“கல்லாத ஒரு ஜாதி கல்வியும் கற்று விடுமே..
மண்ணாலும் சிறு கூட்டம் விண்வெளி தொட்டு விடுமே..” என்ற பாடல் ஒலிக்கும்.
இந்த காட்சி கவிதையாய் நிகழும்.
கல்வியும் காதலும் மட்டுமே எல்லாத் தடைகளையும் அடித்து நொறுக்கி நம்மை அடுத்த நிலைக்கு இட்டுச் செல்லும்.
– நன்றி: முகநூல் பதிவு