எம்ஜிஆரின் நிழலாய்க் கருதப்பட்ட ஆளுமை ஆர்.எம்.வீ!

- முதல்வர் மு.க.ஸ்டாலின்

சில மாதங்களாக வயது மூப்பு பிரச்சினையால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஆர்.எம்.வீரப்பன் நேற்று காலை மரணம் அடைந்தார். 

ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு தலைவர்கள், திரை உலகத்தினர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “திராவிட இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும், எம்ஜிஆர் கழகத்தின் நிறுவனருமான ஆர்.எம். வீரப்பன் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன்.

அவரது 98-வது பிறந்த நாளான கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி நேரில் அவரது இல்லத்துக்கே சென்று அவரைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்த நினைவுகள் நிழலாடுகின்றன.

அரசியலில் மட்டுமின்றி, திரைத்துறையிலும் வரலாற்று முத்திரையைப் பதித்துள்ள ஆர்.எம்.வீரப்பன், நூறாண்டுகளும் கடந்து நிறைவாழ்வு வாழ்வார் என்ற எம் போன்ற அவரது நலம் விரும்பிகளின் எதிர்பார்ப்பு, எதிர்பாராத விதமாக நிறைவேறாமல் போயிருப்பது வருத்தமளிக்கிறது.

ஆர்.எம்.வீ என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் ஆர்.எம்.வீரப்பன், பெரியார், அண்ணா, எம்ஜிஆர், மறைந்த முதல்வர் கருணாநிதி என அனைத்து தலைவர்களுடனும் நெருக்கமும், நட்பும் கொண்டிருந்தவர்.

எம்ஜிஆரின் மனச்சாட்சியாகவும், நிழலாகவும் கருதப்பட்ட ஆளுமையாக அரசியலில் வலம் வந்தவர். அவரது அமைச்சரவையில் இடம்பெற்று செய்தி மக்கள் தொடர்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு அமைச்சராகவும் பணியாற்றிப் புகழ் பெற்றவர்.

பின்னாளில், எம்ஜிஆர் கழகம் என்று தமக்கென தனி இயக்கம் கண்டாலும், திமுகவுடனும், மறைந்த முதல்வர் கருணாநிதியுடனும் அரசியல் ரீதியாக மட்டுமின்றி, தனிப்பட்ட முறையிலும் நல்லுறவையும், நட்பையும் பேணி வந்தார். அதே அன்பையும், பரிவையும் என்னிடத்திலும் அவர் காட்டி வந்தார்.

எம்ஜிஆரின் சத்யா மூவீஸ் நிறுவனத்தைத் திறம்பட நிர்வகித்து தமிழ்த்திரையுலகுக்கு பல்வேறு வெற்றிப் படங்களைத் தந்த சிறந்த தயாரிப்பாளராகவும் அவர் திகழ்ந்தார். அத்துடன், அவரது தமிழ்ப்பற்று காரணமாக சென்னை கம்பன் கழகத்துக்கும் தலைவராகப் பொறுப்பேற்று, இலக்கியத்துறையிலும் தனது தடத்தைப் பதித்தார்.

அத்துடன், ஆழ்வார்கள் ஆய்வுமையம் என்ற அமைப்பின் தலைவராகப் பணியாற்றி, ஆன்மிகத்துறையிலும் ஈடுபாடு கொண்டவராக அவர் இருந்து வந்தார். அரசியல், திரைத்துறை, தமிழ்த்துறை, ஆன்மிகம் என்று அனைத்துத் துறைகளிலும் சாதனை படைத்த ஆர்.எம்.வீரப்பன் , அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அனைத்துத் தரப்பினராலும் விரும்பப்படும் பேராளுமையாகத் திகழ்ந்தார்.

அவரது மறைவு, அரசியல் உலகுக்கு மட்டுமின்றி, அவர் இயங்கி வந்த திரையுலகம், இலக்கியம், ஆன்மிகம் உள்ளிட்ட அனைத்துறைகளுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது துணைவியார், குடும்பத்தினர் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். திராவிட இயக்கம் இருக்கும் வரை ஆர்.எம்.வீரப்பனின் புகழும் நிலைத்திருக்கும்!” என்று கூறியுள்ளார்.

நன்றி; தினத்தந்தி

You might also like