‘மூளையை கழட்டி ஓரமா வச்சிட்டு, லாஜிக்கை எதிர்பார்க்காம ஒரு காமெடி படம் பார்க்கலாமா?’ என்பவர்களுக்காகவே அவ்வப்போது சில திரைப்படங்கள் வெளியாகும். அந்த வரிசையில் ஒன்றாக இடம்பெறுகிறது ‘டபுள் டக்கர்’.
தீரஜ், ஸ்மிருதி வெங்கட், கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், மன்சூர் அலிகான், ராம்தாஸ், காளி வெங்கட், சுனில் ரெட்டி, ஆர்ஜே ஷரா, கருணாகரன், யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை மீரா மஹதி இயக்கியுள்ளார். வித்யாசாகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
நகைச்சுவை திரைப்படங்களை உருவாக்குவதில் இருக்கும் பெரிய ஆபத்து, திரையில் சரியாக அது வெளிப்படாமல் போனால் ‘அறுவை’, ‘ரம்பம்’, ‘மொக்க’ என்பது போன்ற விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட கருத்துகளைப் பெற்ற பல திரைப்படங்கள் பின்னாட்களில் ரசிகர்களால் வரவேற்கப்பட்டதும் உண்டு.
அப்படிப்பட்ட சூழலில், ‘டபுள் டக்கர்’ எப்படிப்பட்ட நகைச்சுவையை ரசிகர்களுக்குத் தருகிறது?
ரைட் அண்ட் லெப்ட்!
அரவிந்த் (தீரஜ்) சிறு வயதிலேயே தனது தாய் தந்தையை இழந்தவர். பெரிய வீடொன்றில் தனியாக வாழ்பவர்.
கல்லூரியில் உடன் படித்த பாரு (ஸ்மிருதி வெங்கட்) மீது அவருக்குக் காதல் அதிகம். அதனாலேயே, அவர் தன்னார்வலராகப் பணியாற்றும் புற்றுநோய் மருத்துவமனைக்குப் பணத்தை வாரி வழங்குகிறார்.
அங்கிருக்கும் கார்த்திக் எனும் சிறுவன், அவரைத் தனது நெருங்கிய உறவாகக் கருதுகிறான். அவனிடத்தில் ‘கோமாளி’யாக வேஷமிட்டு காமெடி செய்வது அவரது வழக்கம்.
ஆனாலும், அவனிடம் தனது முகத்தைக் காட்ட அரவிந்த் விரும்புவதில்லை. காரணம், பெற்றோரைப் பறிகொடுத்த விபத்தின்போது அவரது முகம் நெருப்பில் சேதமடைந்ததுதான்.
தோற்றம் குறித்த தாழ்வு மனப்பான்மையில் உழலும் அவருக்குப் பாருவும் கார்த்திக்குமே ஆறுதல் தருபவர்களாக விளங்குகின்றனர்.
ஒருநாள் முகமூடியை அணிந்து தன்னைப் பார்க்க வந்த அரவிந்தின் முகத்தை நேரில் கண்டவுடன் பயந்து ஓடிவிடுகிறான் கார்த்திக். சில நாட்கள் கழித்து, பாருவிடம் தனது காதலை வெளிப்படுத்துகிறார். அவரும் எந்தப் பதிலும் சொல்லாமல் சென்றுவிடுகிறார்.
அதனால் மனதளவில் உடைந்துபோகும் அரவிந்த் தற்கொலைக்கு முயற்சிக்கிறார். அந்த நேரத்தில் பாருவிடம் இருந்து போன் வருகிறது. அதனைக் கண்டு அவர் பதைபதைக்க, கயிறு அறுந்து கட்டிலில் விழுகிறார். ஆனாலும், அவரது உயிர் பறிபோகிறது. காரணம், அவருடன் இருக்கும் தேவலோகத்தைச் சேர்ந்த ரைட் (காளி வெங்கட்) மற்றும் லெப்ட் (முனீஸ்காந்த்).
அரவிந்தின் விதி முடிந்ததாகத் தவறாகக் கருதி, அந்த ஆண் தேவதைகள் அவரது உயிரைப் பறித்துவிடுகின்றனர். அதன்பிறகே தவறான தகவலின் அடிப்படையில் அது நிகழ்ந்ததை உணர்கின்றனர்.
மீண்டும் அவருக்கு உயிர் தரலாம் என்று யோசித்தால், அரவிந்தின் சடலத்தைத் திருடிச் செல்கிறார் ஒரு நபர். அவரது பெயர் மர்டர் மணி (ஷரா). ராக்கெட் ரெட்டி (சுனில்) எனும் ரவுடியின் கையாள். அரவிந்தைக் கடத்திச் சென்று, அவரது வீட்டை மிரட்டிப் பறிப்பதே அவர்களது நோக்கம்.
அரவிந்தின் உடலை அவர்கள் தூக்கிச் சென்றவுடன், அங்கு வருகிறார் பாரு. அரவிந்த் வீட்டில் இல்லாமல் இருப்பதையும், ஒரு அறையில் கயிறு அந்தரத்தில் தொங்குவதையும் கண்டு திகைக்கிறார்.
அரவிந்த் என்னவானார் என்று தெரியாமல், ’உன்னைக் காதலிக்கிறேன்னு சொல்லத்தானே வந்தேன்’ என்று கதறி அழுகிறார் பாரு. போலீசில் புகார் கொடுக்கச் செல்கிறார்.
அந்தக் காட்சியைக் காணும் அரவிந்த், எப்படியாவது பழைய வாழ்க்கையைத் தனக்கு தரும்படி ரைட், லெப்ட்டிடம் கெஞ்சுகிறார். ஆனால், அவரது உடல் எங்கிருக்கிறது என்றறியத் தங்களிடத்தில் ‘சூப்பர் பவர்’ கிடையாது என்று ரைட்டும் லெப்டும் சொல்கின்றனர்.
அரவிந்தோடு சேர்ந்து அவர்களிருவரும் அதனைத் தேடத் தொடங்குகின்றனர். ஒருகட்டத்தில் தற்காலிகமாக ஒரு உடலில் அவரது உயிரைப் புகுத்தலாம் என்று இருவரும் முடிவு செய்கின்றனர்.
ராஜா (தீரஜ்) என்பவரது உடலுக்குள் அரவிந்தின் ஆன்மாவைச் செலுத்துகின்றனர். புதிய தோற்றத்தைப் பெரும் அவர், பாருவை நேரில் சந்தித்து உண்மையைச் சொல்லச் செல்கிறார் அரவிந்த். ஆனால், ராஜாவைக் கொலை செய்தவர்கள் அவரை நேரில் கண்டதும் அதிர்கின்றனர்.
இதற்கிடையே, பாருவின் பெரியப்பாவுக்கு (மன்சூர் அலிகான்) அவர் அரவிந்தைக் காதலித்தது தெரிய வருகிறது. அவரது ஆட்கள் இருவரையும் சுற்றி வளைக்கத் திட்டமிடுகின்றனர். அதன் தொடர்ச்சியாகப் பல நிகழ்வுகள் அடுத்தடுத்து அரங்கேறுகின்றன.
ரைட் மற்றும் லெப்ட்டால் தனது உடலைப் பறிகொடுத்த அரவிந்த், அந்த பிரச்சனைக்குத் தீர்வு கண்டாரா? தன்னைத் துரத்தும் கும்பலைச் சமாளித்தாரா என்று சொல்கிறது மீதிப்படம்.
இதற்கிடையே, கேங்க்ஸ்டராகத் திகழும் பாருவின் பெரியப்பாவை ஏமாற்றிவிட்டுத் தப்பித்துச் செல்லும் மூர்த்தி (கருணாகரன்), வெல்வெட் வெண்ணிலா (யாஷிகா ஆனந்த்) மது போதையில் விபத்தில் சிக்குவதையும் காட்டுகிறது ‘டபுள் டக்கர்’ திரைக்கதை.
எமதர்மன், சித்திரகுப்தன் பாத்திரங்களைப் போன்று இதில் ரைட், லெப்ட், சென்டர், மாஸ்டர் என்று சில ஆண் தேவதைகளைக் காட்டுகிறது இத்திரைப்படம். அவை அனிமேஷனில் காட்டப்படுவதுதான் இதன் சிறப்பு.
அனிமேஷன் பாத்திரங்கள் படம் முழுக்க வரும் உத்தியைத் தமிழ் திரையுலகம் இதுவரை கண்டதில்லை. அதனைச் சாத்தியப்படுத்திய வகையில் வித்தியாசப்படுகிறது ‘டபுள் டக்கர்’. அதுவே இப்படத்தின் யுஎஸ்பி.
லாஜிக் சுத்தமா இல்ல!
வித்யாசாகரின் இசை இந்த படத்தின் பெரிய ப்ளஸ். ‘வில்லாதி வில்லன்’ படத்தில் அவரே தந்த ‘தீம்தலக்கடி தில்லாலே’ பாடலை இதில் மீண்டுமொரு முறை அதிர விட்டிருக்கிறார். அது போக, இப்படத்திற்காக அவர் தந்திருக்கும் பாடல்களும் ‘ட்ரெண்டு’க்கு ஏற்றாற் போலிருக்கின்றன. மிக முக்கியமாக, திரையில் நகைச்சுவைக் காட்சிகளுக்கு உயிர் தந்திருக்கிறது அவரது பின்னணி இசை.
கௌதம் ராஜேந்திரனின் ஒளிப்பதிவு, காட்சிகள் நிகழும் காலம், களம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அமைந்துள்ளது. திரையில் ‘ரிச்னெஸ்’ தெரிய வழி வகுத்திருக்கிறது.
படத்தொகுப்பாளர் வெற்றிவேல், திரையில் காட்சிகள் பரபரவென்று நகர வேண்டுமென்பதில் கவனம் செலுத்தியிருக்கிறார்.
சுப்பிரமண்ய சுரேஷின் கலை வடிவமைப்பு கதைக்குத் தேவையான சூழலமைப்பை உருவாக்கித் தந்துள்ளது.
அரவிந்தையும் ராஜாவையும் வேறுபடுத்திக் காட்டியதில் பி.எஸ்.குப்புசாமியின் ஒப்பனை ஈர்ப்பைத் தருகிறது.
மீரா மஹதி இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதி இயக்கியிருக்கிறார். எழுத்தாக்கத்தில் அவருக்குக் கைகொடுத்திருக்கிறார் இணை தயாரிப்பாளர் சந்துரு.
‘இதை ரசிகர்கள் ஏத்துக்குவாங்களா’ என்று யோசிக்காமல் காட்சிகளையும் வசனங்களையும் கோர்த்திருக்கின்றனர். அவர்களது அர்ப்பணிப்புமிக்க உழைப்புக்கு ஆங்காங்கே பலன் கிடைத்திருக்கிறது.
அனிமேஷன் பாத்திரமான ரைட் அவ்வப்போது ரஜினி, கமல், சூர்யா அவதாரம் எடுத்து ‘பஞ்ச்’ டயலாக் அடிப்பது அப்படிப்பட்ட தருணங்களில் ஒன்று.
’இன்னுமாடா இந்த படத்துல லாஜிக்கை எதிர்பார்க்குறீங்க’ என்று ரசிகர்களிடமே நேரடியாகக் கேட்கும் வகையில் வசனத்தை இடம்பெறச் செய்து, ‘இதுல லாஜிக் சுத்தமா இல்ல’ என்பவர்களின் கருத்துகளுக்கு அணை போட்டிருக்கிறார் இயக்குனர் மீரா மஹதி.
ஆனால் நாயகன், நாயகி குறித்த ‘டீட்டெய்ல்’ விரிவாகச் சொல்லப்படாததையும், திருப்புமுனையாக விளங்கும் மூர்த்தி, வெல்வெட் வெண்ணிலா பற்றி மிகச்சிறிய அளவில் சொல்லியிருப்பதையும் அந்த வரிசையில் சேர்க்க முடியாது. ‘டைட்டாக எடிட் செய்தால் படம் ஸ்பீடா இருக்கும்’ என்ற கருத்தை நம்பி அப்படியொரு நிலையை ‘டபுள் டக்கர்’ அடைந்திருக்க வாய்ப்புகள் அனேகம்.
நாயகனாக நடித்துள்ள தீரஜ், இரு வேறு பாத்திரங்களில் தோன்றி நல்லதொரு நடிப்பைத் தந்திருக்கிறார். காளி வெங்கட், முனீஸ்காந்த் குரல்கள் படம் முழுக்க இடம்பெற்றுள்ளன. ஒரு காட்சியில் மட்டுமே அவர்கள் நேரடியாகத் தோன்றியிருக்கின்றனர்.
நாயகியாக வரும் ஸ்மிருதி வெங்கட்டுக்கு இதில் அளவாகச் சில காட்சிகள் மட்டுமே தரப்பட்டுள்ளன. அதில் அவர் அழகாக வந்து போயிருக்கிறார்.
நாயகிக்கே அதிகக் காட்சிகள் இல்லை என்ற காரணத்தால் கோவை சரளா, மன்சூர் அலிகான், எம்.எஸ்.பாஸ்கர் போன்ற சீனியர் கலைஞர்கள் முதல் சுனில் ரெட்டி, கருணாகரன், யாஷிகா ஆனந்த், ஷரா, ஜார்ஜ் விஜய் வரை அனைவருக்கும் இரண்டொரு காட்சிகளே தந்திருக்கிறார் இயக்குனர். அந்தக் காட்சிகள் நகைச்சுவையாக உள்ளன என்றபோதும், அடுத்தடுத்து அவர்களைக் காணலாம் என்ற நம் எண்ணம் ஈடேறுவதில்லை.
இந்தப் படத்தைத் தாங்கிப் பிடிக்கும் பாத்திரங்களில் ஒன்றாக, மன்சூர் அலிகானின் கையாளாக வந்து போயிருக்கிறார் டெடி கோகுல்.
டபுள் ட்ரீட்டா?
வெறுமனே சில சம்பவங்களை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு, அவற்றை ஒரு புள்ளியில் கோர்த்து, சீட்டுக்கட்டை கலைத்துப் போடுவது போன்று அனைத்து பாத்திரங்களையும் கையாண்டிருக்கிறார் இயக்குனர். அதுவே, அடுத்தடுத்து என்ன நடக்கவிருக்கிறது என்றறியும் ஆவலைத் தூண்டுகிறது.
படத்தின் நீளத்தைக் குறைப்பதற்காக செய்யப்பட்ட ‘ட்ரிம்மிங்’, தியேட்டரில் இருந்து வெளியே வரும்போது திருப்தியை உணர்வதைத் தடுக்கிறது. அதனைக் கொஞ்சம் கருத்தில் கொண்டிருந்தால், சிறப்பான ‘அவுட்புட்’டாக இப்படம் அமைந்திருக்கும்.
’டபுள் டக்கர்’ படத்தை முழுக்க வித்தியாசமானது என்று சொல்ல முடியாதபோதும், வழக்கத்திற்கு மாறான காட்சியனுபவத்தைத் தருகிறது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
அந்த அனுபவம் சிலருக்கு உவப்பானதாக இருக்கலாம்; சிலருக்கு அது ‘ஒவ்வாமை’யாக அமையலாம்.
எதைப் பற்றியும் சிந்திக்காமல் வெறுமனே திரையைப் பார்த்து சிரிக்க வைக்கும் ‘மைண்ட்லெஸ் காமெடி’ திரைப்படங்களை ரசிக்கத் தயாராக இருந்தால், இந்த ‘டபுள்டக்கர்’ உங்களுக்குப் பிடிக்கும். ‘அது வேண்டாமே’ என்பவர்கள் வேறு திசைக்கு நகரலாம்!
– உதய் பாடகலிங்கம்
#டபுள்_டக்கர்_விமர்சனம் #மீரா_மஹதி_தீரஜ், #ஸ்மிருதி_வெங்கட், #கோவை_சரளா, #எம்_எஸ்_பாஸ்கர் #மன்சூர்_அலிகான் #ராம்தாஸ் #காளி_வெங்கட் #சுனில்_ரெட்டி #முனீஸ்காந்த் #ஆர்_ஜே_ஷரா #கருணாகரன் #யாஷிகா_ஆனந்த் #Double_Tuckerr_Review #meera_mahathi_theeraj #smrithi_venkat #mansoor_alikaan #ramdoss #kaalivenkat #sunil_reddy #munishkanth #rj_shara #karunakaran #yashika_ananth #kovai_sarala