என்னைப் பொறுத்தவரை கவிதையும் சித்திரமும் ஒன்றை ஒன்று விழுங்கிக் கொள்ளும் இரண்டு பாம்புகள்.
ஒரு ஓவியனின் மகனாகப் பிறந்த நான் அடிப்படையில் ஒரு ஓவியன்தான். எனக்கு எழுத்து வசப்படும் வரையிலும் நான் முதலும் கடைசியுமாக ஒரு ஓவியன்தான் என்று நம்பிக் கொண்டிருந்தேன்.
இன்றுவரை சித்திரங்கள் தீட்டுவதை நான் நிறுத்தியது இல்லை. எனது பல கவிதைகள் நான் வரையத் தொடங்கிய சித்திரங்களில் இருந்து தோன்றியவைதான்.
எப்போதும் எதையாவது கிறுக்கிக் கொண்டே இருக்கும் பழக்கம் உள்ள எனக்கு, அசாதாரணமான காட்சிகள் எனது சித்திரங்களில் கிடைக்கும். அதை ஒட்டி எழுதத் தொடங்கிவிடுவேன்.
சில நேரங்களில் எழுதுவதை நிறுத்திவிட்டு ஓவியம் தீட்டத் தொடங்கி விடுவதும் நிகழ்ந்திருக்கிறது.
இப்படி சிததிரத்துக்கும் என் கவிதைக்கும் இடையே நடைபெறும் அனுபவத்தையே ‘புள்ளி’ எனும் ஒரு கவிதையாக ஒரு முறை எழுதினேன். அது அழகிய சிங்கரின் ‘விருட்சம்’ இதழில் வெளியாயிற்று.
இப்படி நான் எழுதிய கவிதைகளில் ‘புள்ளி’ எனும் கவிதை பற்றி நகுலன், “படித்ததுமே இந்திரனின் புள்ளி என் மனதில் ஒரு விளைவை ஏற்படுத்தியது” என்று, தானாகவே முன்வந்து ‘விருட்சம்’ இதழில் மூன்று பக்கக் கட்டுரை எழுதியிருக்கிறார்.
என் வாழ்க்கையில் நான் நகுலனை நேரில் சந்தித்ததோ, தொலைபேசியில் பேசியதோ கிடையாது.
நகுலனை ஒருமுறை கோமல் சுவாமிநாதனின் ‘சுபமங்களா’ இதழில், ”நகுலன் இனிமேலும் போர்வாளால் சவரம் செய்வதை நிறுத்திக்கொள்ளவேண்டும்” என்று கடினமாக விமர்சனம் செய்து எழுதியிருந்தேன்.
அந்த நகுலன்தான் எனது ஒரே ஒரு கவிதைக்கு மூன்று பக்க விமர்சனத்தைத் தானாகவே முன்வந்து ‘விருட்சம்’ இதழில் எழுதினார்.
இக்கட்டுரையை சுந்தரபுத்தன் தொகுத்த ‘கவிதை, ஓவியம், சிற்பம், சினிமா’ எனும் டிஸ்கவரி புக்ஸ் வெளியிட்ட நூலில் 57ஆம் பக்கத்தில் காணலாம்.
நன்றி: முகநூல் பதிவு