தமிழக வாக்காளர்கள் எப்போதும் புரியாத புதிரே!

கடந்த மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் திமுக கூட்டணி 38 இடங்களை கைப்பற்றியது. அதிமுக ஒரு இடத்தில் மட்டுமே வென்றது.

கடந்த முறை திமுக கூட்டணியில் இருந்த அதே கட்சிகள் இந்தமுறையும் நீடிக்கின்றன. எனவே அதே வெற்றி, திமுகவுக்கு கிடைக்கும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால் அதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதே யதார்த்தம். தமிழக வாக்காளர்கள் பொதுவாக ஒரு கட்சிக்கு மட்டுமே, ஒவ்வொரு முறையும் வாக்களிப்பது கிடையாது. கடந்த 9 தேர்தல் முடிவுகளே அதற்கான சாட்சி.

9 தேர்தல்கள் நிகழ்ந்த நடந்த ஆண்டு, கட்சிகளுக்கு கிடைத்த இடங்கள் குறித்து ஒரு பார்வை:

காலியான திமுக மீண்டு வந்தது

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு, பிளவுபட்ட அதிமுக, 1989-ம் ஆண்டு மீண்டும் ஒருங்கிணைந்தது. அப்போது நடந்த தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது, அதிமுக.

காங்கிரஸ் 27 தொகுதிகளிலும், அதிமுக 11 தொகுதிகளிலும் ஜெயித்தது. திமுக ஒரு இடத்திலும் வெல்லாத நிலையில், அதன் கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் மட்டும் நாகையில் வெற்றி பெற்றது.

1991-ம் ஆண்டு தேர்தலிலும் அதிமுக-காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்தது. அப்போது தேர்தல் பிரச்சாரத்துக்கு தமிழகம் வந்த ராஜீவ்காந்தி, ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்டார்.

அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தான் போட்டியிட்ட 28 தொகுதிகளிலும் வென்றது. அதுபோல் அதிமுகவும் தான் போட்டியிட்ட 11-இடங்களிலும் வாகை சூடியது.

திமுக கூட்டணிக்குப் பூஜ்யம். ஒரு இடத்திலும் திமுக கூட்டணி வெல்லவில்லை.

ஆனால் 1996-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும், திமுக வாகை சூட, அதிமுக ஒரு இடத்திலும் ஜெயிக்கவில்லை. அப்போது காங்கிரஸ் கட்சியுடன் அதிமுக கூட்டணி வைத்தது.

இதனை ஏற்காத காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஜிகே மூப்பனார், தமிழ் மாநில காங்கிரஸ் எனும் பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்து திமுகவுடன் உடன்பாடு கண்டார்.

இவர்களுடன் இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் சேர்ந்து கொண்டது. அந்தத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணி வென்றது.

விவரம்:

தமாகா – 20
திமுக -17
சிபிஐ- 02
அதிமுகவால் ஒரு இடத்திலும் வெல்ல முடியவில்லை.

அதன் பிறகான சில தேர்தல் முடிவுகள் வருமாறு:

1998

அதிமுக – 18
திமுக -05
பாமக -04
மற்றவை-12

1999

திமுக – 12
அதிமுக – 10
பாமக – 05
மற்றவை – 12

2004

திமுக -16
காங்- -10
பாமக -5
மற்றவை-8

2009

திமுக – 18
அதிமுக – 09
காங். -08
மற்றவை -04

அதிமுகவின் வரலாற்று வெற்றி

2014-ம் ஆண்டு அரசியல் களம், தமிழகத்துக்கு புதிய அனுபவமாக இருந்தது. ஜெயலலிதாவும், கருணாநிதியும் உயிருடன் இருந்த நேரம். அதிமுக, திமுக, காங்கிரஸ் ஆகிய மூன்று பிரதான கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டன.

பாமக, மதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. முடிவுகள், இந்தியாவை அதிர வைத்தது. அதிமுக 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

பாஜக கூட்டணியில் பாஜக ஒரு இடத்திலும் (நாகர்கோவில்) பாமக ஒரு இடத்திலும் (தர்மபுரி) வென்றன. திமுகவும், காங்கிரசும் ஒரு இடத்திலும் ஜெயிக்கவில்லை. அடுத்தத் தேர்தலில் (2019) நிலமை, தலைகீழாக மாறியது.

திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெல்ல, அதிமுக ஒரு இடத்தில் மட்டுமே வெல்ல முடிந்தது.

வரும் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்? மக்கள் தீர்ப்பு என்னவாக இருக்கும்? ஜுன் 4 ஆம் தேதி வரை காத்திருப்போம்.

– பி.எம்.எம்.

You might also like