இந்தியத் தொல்லியல் கழகத்தின் தலைமை இயக்குநராக ஜான் மார்ஷல் இருந்தபோது, 1924-ம் ஆண்டு ‘சிந்துவெளி நாகரிகம்’ என்ற செழித்தோங்கிய பண்பாடு குறித்து உலகிற்கு அறிவித்தார்.
அந்த அறிவிப்பு, இந்தியத் துணைக் கண்ட வரலாற்றின்மீது அதுநாள் வரையில் படிந்திருந்த அறிவியலற்ற பார்வையை உடைத்து, புதிய ஆக்கப்பூர்வமான திசைவழியை நோக்கி வரலாற்று ஆய்வுகளை வழி நடத்தியது.
ஜான் மார்ஷலின் ஒருங்கிணைப்பில் பல இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் காணப்பட்ட ஒத்தக் கூறுகளைக் கண்டுபிடித்து, இந்தியத் துணைக் கண்டத்தில் ஒரு பண்பட்ட நாகரிகம் செழித்து இருந்துள்ளதை உலகிற்குக் காட்டினார்.
தொல்பொருள் கண்டுபிடிப்புகளைக் கவனமாக ஆவணப்படுத்துதல், பாதுகாத்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை ஜான் மார்ஷல் வலியுறுத்தினார்.
சிந்துவெளிப் பண்பாட்டில் ஒரு தனித்த எழுத்துமுறை இருந்தது என்பதை அங்கீகரித்து, அடையாளம் கண்டு, வெளிக்கொணர்ந்தார். அதுவே பண்டைய எழுத்துமுறை குறித்த ஆராய்ச்சிக்கு வழிவகுத்தது.
மார்ஷல் தனது மேற்பார்வையில் நடத்திய அகழாய்வு கண்டுபிடிப்புகளைப் பல அறிக்கைகளாக, கட்டுரைகளாக வெளியிட்டார்.
இத்துடன் சிந்துவெளிப் பண்பாட்டில் திராவிடக் கருதுகோளை முன்மொழிந்து, வலியுறுத்தி முன்னெடுத்துச் சென்றவர்களில் முன்னோடி ஜான் மார்ஷல்.
தொல்லியல் ஆய்வுகளில் ஜான் மார்ஷலின் அர்ப்பணிப்பும் ஆவணப்படுத்தலில் அவரின் நுணுக்கமான அணுகுமுறையும் தெளிவான நோக்கும் தெற்காசிய தொல்லியல் துறையில் ஒரு நீண்ட மரபை உண்டாக்கியது.
ஜான் மார்ஷலால் வெளியிடப்பட்ட அறிவிப்பு வெளியாகி நூறாண்டுகள் ஆகிறது. அதனையொட்டி “சிந்துவெளிப் பண்பாட்டு நூற்றாண்டு விழா (1924-2024)” தமிழ்நாடு அரசு, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் மற்றும் பலரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இன்று (19.03.24) சர் ஜான் மார்ஷல் அவர்களின் பிறந்தநாள்.
#induscentenary #1924to2024 #CulturalHeritage #indus100 #TamilSangam #tamil archaeologist #sir_John_Marshall #சர்_ஜான்_மார்ஷல் #John_Marshall #ஜான்_மார்ஷல் #சிந்துவெளி நாகரிகம் #தொல்பொருள் #அகழாய்வு #தொல்லியல்_துறை #தொல்லியல்_ஆய்வு #ரோஜா_முத்தையா_ஆராய்ச்சி_நூலகம்