எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பாஜகவின் பலம்?

மக்களவைத் தேர்தலை 7 கட்டங்களாக நடத்த தலைமைத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

முதல்கட்ட வாக்குப்பதிவு தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் அடுத்த மாதம் 19-ம் தேதி நடக்கிறது.

இந்தத் தொகுதிகளில் வேட்பு மனுத் தாக்கல் நாளை (20.03.2024) ஆரம்பம் ஆகிறது. இந்த நிலையில், தேர்தல் தொடர்பாக ‘நியூஸ் 18’ ஊடகம் நாடு முழுவதும் கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது. அதன் முடிவுகள் இப்போது வெளியிடப்பட்டுள்ளன.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பாஜகவின் பலம் என்ன? எத்தனை இடங்களில் அந்தக் கட்சி வெல்லும் என்பது குறித்து அந்தக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

அதன் விவரம்:

தமிழ்நாடு

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெறும் தமிழ்நாட்டில் மொத்தம் 39 தொகுதிகள் உள்ளன.

கடந்த தேர்தலில் மெகா கூட்டணி அமைத்து போட்டியிட்ட திமுக அணி 38 இடங்களை வாரிச் சுருட்டியது.

அதிமுக, பாமக, தமாகா, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைத்திருந்தது. ஆனால் தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.

எஞ்சிய அனைத்து தொகுதிகளிலும் பாஜக கூட்டணி தோற்றுப்போனது. இந்த முறை திமுக கூட்டணியில், கடந்த முறை இடம்பெற்ற கட்சிகள் நீடிக்கின்றன. பாஜகவுடன், சில சிறிய கட்சிகள் சேர்ந்துள்ளன.

அதிமுகவுடன் இந்த நிமிடத்தில் புதிய தமிழகம் மட்டுமே உடன்பாடு கண்டுள்ளது. தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது.

நாம் தமிழர் கட்சி தனித்து நிற்கிறது.

ஆளும் திமுக கூட்டணி, இந்தத் தேர்தலில் 30 தொகுதிகளில் வெல்லும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் சொல்கின்றன. பாஜக கூட்டணிக்கு 5 இடங்கள் மட்டுமே கிடைக்கும்.

கேரளா

நமது அண்டை மாநிலமான கேரளாவில் மொத்தம் 20 தொகுதிகள் உள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரிகள் ஆட்சியில் உள்ளனர்.

தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் இடதுசாரி கட்சிகளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் இந்த மாநிலத்தில், தனித்தனியாக நிற்கின்றன. 3-வது அணியாக பாஜகவும் களத்தில் உள்ளது.

கடந்தத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 19 தொகுதிகளைக் கைப்பற்றியது. இடதுசாரிகள் ஒரே ஒரு இடத்தில் வென்றனர். பாஜகவுக்கு ஒரு இடமும் கிடைக்கவில்லை.

இந்த முறை காங்கிரஸ் கூட்டணிக்கு 14 இடங்களும் இடதுசாரி கூட்டணிக்கு 4 தொகுதிகளும் கிடைக்கும்.

பாஜக 2 தொகுதிகளில் வெற்றி பெறும் என கணிப்புகள் தெரிவிக்கின்றன.

கர்நாடகா

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் அந்த கட்சி தனித்து போட்டியிடுகிறது.

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன், பாஜக உடன்பாடு கொண்டுள்ளது. இங்கு மொத்தம் 28 தொகுதிகள் உள்ளன.

பாஜக கூட்டணி 25 தொகுதிகளில் வெற்றி பெறும். காங்கிரஸ் கட்சிக்கு 3 இடங்களே கிடைக்கும்.

கடந்தத் தேர்தலில் பாஜக தனித்து 25 இடங்களில் வென்றது. காங்கிரசுக்கு ஒரு இடம் மட்டுமே கிடைத்தது. மதச்சார்பற்ற ஜனதா தளம் ஒரு தொகுதியில் ஜெயித்தது.

சுயேச்சையாக மாண்டியா தொகுதியில் போட்டியிட்ட நடிகை சுமலதா வெற்றி பெற்றார்.

ஆந்திரா

ஆந்திர மாநிலத்தில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும், காங்கிரசும் தனித்து களம் காண்கின்றன. தெலுங்கு தேசம், ஜனசேனா ஆகிய கட்சிகளுடன் பாஜக கூட்டணி வைத்துள்ளது.

இங்கு 25 தொகுதிகள் உள்ளன. பாஜக கூட்டணி 18 தொகுதிகளில் வெற்றி பெறும். ஒய்எஸ்ஆர் காங்கிரஸுக்கு 7 தொகுதிகள் கிடைக்கும். காங்கிரசுக்கு இங்கே இடம் இல்லை.

கடந்தத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 22 தொகுதிகளிலும், தெலுங்கு தேசம் 3 தொகுதிகளிலும் வென்றது.

தனித்து போட்டியிட்ட, பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் ஒரு இடமும் கிடைக்கவில்லை. தெலுங்கு தேசம் உதவியால் இந்த முறை பாஜக ஆதாயம் அடைகிறது.

தெலங்கானா

காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் தெலுங்கானாவிலும் மும்முனை போட்டியே ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ், பிஆர்எஸ், பாஜக ஆகிய 3 அணிகள் களத்தில் உள்ளன. இங்கு 17 தொகுதிகள் உள்ளன.

இதில் பாஜக 8, காங்கிரஸ் 6, பிஆர்எஸ் கட்சிக்கு 2 தொகுதிகள் கிடைக்கும் என தெரியவந்துள்ளது.

கடந்தத் தேர்தலில் பி.ஆர்.எஸ்.9, பாஜக 4, காங்கிரஸ் 3 இடங்களில் வென்றது. ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி ஒரு இடத்தில் வென்றது.

மேற்கு வங்கம்

திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் மாநிலம், மே.வங்கம். மம்தா பானர்ஜியின் கோட்டை. அதற்கு முன் கம்யூனிஸ்டுகள் வசம் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தது.

அந்த செங்கோட்டையை தவிடு பொடியாக்கிய மம்தா, இந்த முறை நிறைய இடங்களை வெல்வார் என எதிர் பார்க்கப்பட்டது.

ஆனால், சந்தோஷ்காலி எனும் ஊரில் திரிணாமூல் காங்கிரஸ் நிர்வாகியால் நிகழ்த்தப்பட்ட பாலியல் மற்றும் நில அபகரிப்பு சம்பவம், நாட்டையே உலுக்கி, மம்தா கோட்டையையும் அசைத்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் 42 தொகுதிகள் உள்ளன.

பாஜக கூட்டணி 25 இடங்களிலும். திரினாமூல் காங்கிரஸ் 17 இடங்களிலும் வெல்லும் என கருத்துக் கணிப்பு சொல்கிறது.

‘இந்தியா’ கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளுக்கு ஒரு இடம்கூட மம்தா ஒதுக்கவில்லை.

கடந்தத் தேர்தலில் மம்தா கட்சி 22 தொகுதிகளில் வென்றது. பாஜக 18 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் ஜெயித்தது.

ஜார்க்கண்ட்

ஜே.எம்.எம்., காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கும் ஜார்க்கண்டில் 14 தொகுதிகள். பாஜக கூட்டணி 12 இடங்களிலும், ஜே.எம்.எம்., காங்கிரஸ் தலா ஒரு இடத்திலும் வெல்லும் என கணிப்பில் தெரியவந்துள்ளது. கடந்தத் தேர்தலில் பாஜக 11 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

காங்கிரஸ், ஜே.எம்.எம், மாணவர் யூனியன் கட்சி தலா ஒரு இடத்தில் வென்றன. 

பஞ்சாப்

ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறும் பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் 13 தொகுதிகள். இங்கு, இந்தியா கூட்டணியை சேர்ந்த ஆம் ஆத்மியும், காங்கிரஸ் கட்சியும் தனித்தனியாக போட்டியிடுகின்றன. பாஜக, 3-வது அணியாக போட்டியிடுகிறது.

அங்கு காங்கிரஸுக்கு 7, பாஜகவுக்கு 3, ஆம் ஆத்மிக்கு ஒரு தொகுதி கிடைக்கும். கடந்த தேர்தலில், காங்கிரஸ் 8 இடங்களில் வென்றது. பாஜக 2, அகாலிதளம் 2, ஆம் ஆத்மி 1 இடத்தில் வென்றன.

இமாச்சலப் பிரதேசம்

காங்கிரஸ் கட்சி ஆட்சி நடக்கும் மாநிலம். இங்கு மொத்தமுள்ள 4 தொகுதிகளையும் பாஜகவே கைப்பற்றும் என கூறப்படுகிறது. கடந்த 2014 மற்றும் 2019 ஆகிய தேர்தல்களிலும் பாஜகவே நான்கு இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது.

ஒடிசா

பாஜக கூட்டணியிலும், காங்கிரஸ் கூட்டணியிலும் சேராத பிஜு ஜனதா தள ஆட்சி நடைபெறும் மாநிலம் ஒடிசா. நவீன் பட்நாயக் முதலமைச்சராக இருக்கிறார். ஒடிசாவில் 21 தொகுதிகள் உள்ளன.

இங்கு பிஜு ஜனதா தளம் 8, பாஜக 13 தொகுதிகளில் வெற்றி பெறும் என கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் பிஜு ஜனதா தளம் 12, பாஜக 8, காங்கிரஸ் 1 இடத்தில் வென்றன.

– பி.எம்.எம்.

You might also like