யோதா – ‘த்ரில்’ சொட்டும் திரைக்கதை!

விமானக் கடத்தலை மையமாகக் கொண்டு, உலகம் முழுக்கப் பல படங்கள் வந்திருக்கின்றன. தமிழில் கூட, ராதாமோகன் இயக்கத்தில் ‘பயணம்’ வெளியாகியிருக்கிறது.

அதனைக் கருப்பொருளாகக் கொண்டு உருவாக்கப்படும் ஆக்‌ஷன் படங்களுக்கு ரசிகர்களிடம் எப்போதும் வரவேற்பு உண்டு. ஆங்கிலத்தில் ஹாரிசன் போர்டு நடித்த ‘ஏர்போர்ஸ் ஒன்’ அதற்கொரு உதாரணம்.

அதே பாணியில் தயாரிக்கப்பட்ட பல படங்கள் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அந்த வரிசையில் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது ‘யோதா’ இந்திப் படத்தின் ட்ரெய்லர்.

சித்தார்த் மல்ஹோத்ரா, ராஷி கன்னா, திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை சாகர் ஆம்ப்ரே மற்றும் புஷ்கர் ஓஜா இயக்கியுள்ளனர்.
நல்லதொரு ஆக்‌ஷன் திரைப்பட அனுபவத்தை ‘யோதா’ நமக்கு வழங்குகிறதா?

நாயகனின் துணிச்சல்!

 இந்தியாவிலுள்ள முப்படைகளைப் போலவே, நாடு மற்றும் தலைவர்கள் சார்ந்த வெவ்வேறுவிதமான பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்கிறது ‘யோதா’ படைப்பிரிவு.

அதன் முதல் வீரராகப் பொறுப்பு வகித்தவர் மேஜர் சுரேந்தர் கட்யால் (ரோனித் ராய்). மகன் அருணும் ’யோதா’ ஆக வேண்டுமென்று ஆசைப்படுவதைக் கண்டு அவர் மகிழ்ச்சியடைகிறார்.

ஒருமுறை எதிரிகள் உடனான சண்டையில் சுரேந்தர் மரணமடைகிறார். தனிப்பட்ட முறையில் அது அருணைப் பாதித்தாலும், தந்தையைப் போலாக வேண்டுமென்ற அவரது விருப்பத்தில் எந்த மாற்றமும் நிகழவில்லை.

வளர்ந்து பெரியவன் ஆனதும், ‘யோதா’ படைப்பிரிவில் சேர்கிறார் அருண் (சித்தார்த் மல்ஹோத்ரா).

மேலதிகாரிகளின் உத்தரவுக்காகக் காத்திருக்காமல், எதிரிகளின் கோட்டைக்கே சென்று தாக்குதல் நடத்துவது அவரது ஸ்டைல். இதனால், அவர் தொடர்ந்து துறைரீதியான எச்சரிக்கையை எதிர்கொள்கிறார்.

ஒருமுறை இந்தியாவைச் சேர்ந்த அணு விஞ்ஞானி உடன் பாதுகாவலராக அருண் பயணிக்கும் விமானம் சில பயங்கரவாதிகளால் கடத்தப்படுகிறது.

அமிர்தசரஸ் விமானநிலையத்தில் தரையிறக்கப்படுகிறது. அங்கு, அந்த விமானத்திற்கு முன்னதாக ஒரு டேங்கர் லாரி நிறுத்தப்பட்டுள்ளது.

அதில் யோதா படையினர் மறைந்திருக்கின்றனர். போலவே, விமானம் நிறுத்தப்பட்ட இடத்தைச் சுற்றிலும் பதுங்கியிருக்கின்றனர்.

விமானத்தில் இருந்து தாக்குதலுக்குத் தயார் என்று அருண் சிக்னல் கொடுத்தால் போதும்; அவர்கள் தங்கள் பணியை ஆரம்பித்துவிடுவார்கள்.

இந்த நிலையில், டெல்லியில் மத்திய அமைச்சகத்தில் பணியாற்றும் அருண் மனைவி பிரியம்வதா (ராஷி கன்னா) அந்த பயங்கரவாதிகளுடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கால அவகாசம் கேட்கிறார். பயங்கரவாதிகள் அதற்குச் செவி சாய்ப்பதில்லை.

இதற்கிடையே, விமானத்தின் கீழ் பகுதியிலுள்ள மின்சார வயர்களை தீப்பற்றச் செய்து வெளியே இருக்கும் தனது சகாக்களுக்கு ‘சிக்னல்’ கொடுக்கிறார் அருண்.

தற்செயலாக, பயங்கரவாதிகளோடு பேச்சுவார்த்தை நடத்தும் பிரியம்வதா உடனும் தொலைபேசியில் பேசுகிறார்.

அப்போது, ‘உடனடியாகத் தாக்குதல் நடத்தாவிட்டால் நிலைமை கைமீறிப்போகும்’ என்று எச்சரிக்கிறார். ஆனால், கட்டுப்பாட்டு அறையில் இருக்கும் அமைச்சர் ஒருவர் ‘மூத்த தலைவர்களைக் கலந்தாலோசிக்காமல் அதற்கு ஒப்புதல் தர முடியாது’ என்கிறார்.

அதற்குள், விஐபி பாஸ்போர்ட்டுடன் விஞ்ஞானி ஒருவர் அந்த விமானத்தில் இருப்பதைக் கண்டறிகின்றனர் அந்த பயங்கரவாதிகள்.

அவர்கள் அவரைத் தாக்கிவிடக் கூடாது என்ற அச்சத்தில் களத்தில் இறங்குகிறார் அருண். அவர்களோடு சண்டையிடுகிறார்.

ஆனாலும், அருணை விமானத்தில் இருந்து கீழே தள்ளிவிடுகிறார் ஒரு பயங்கரவாதி. அதனைத் தொடர்ந்து, அவரது கண் முன்னாலேயே அந்த விமானம் விண்ணில் பறக்கிறது.

இரண்டு நாட்கள் கழித்து, அந்த விஞ்ஞானியின் சடலம் இந்திய அரசிடம் பாகிஸ்தானால் ஒப்படைக்கப்படுகிறது.

அந்த விவகாரத்தில், யோதா படையினரின் செயல்பாடு கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. அருண் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

யோதாவைக் கலைத்தால் என்ன என்று மத்திய அரசு அப்படையினரிடம் கேட்கிறது. அந்தப் படையில் இருப்பவர்களால் வேறு பிரிவுகளுக்குச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைமை உருவாகிறது.

தன்னுடன் இருப்பவர்கள் பிரிந்தபோதும், ‘யோதாவைக் கலைக்கக்கூடாது’ என்று தனியாளாகப் போராடுகிறார் அருண்.

அப்போராட்ட காலகட்டத்தில் தாய், மனைவி உடன் சிரித்து பேசுவதை நிறுத்திவிடுகிறார் . இதனால் அவர் கையில் விவாகரத்து விண்ணப்பத்தைத் தருகிறார் பிரியம்வதா.

அதில் அருண் கையெழுத்திடும்போது, பிரியம்வதா உடைந்து போகிறார். ஆனாலும், அருணின் தாயை அவர் தன்னோடு அழைத்துச் செல்கிறார்.

சில ஆண்டுகள் கழித்து, விமானப் பயணிகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும் ‘கமாண்டோ’ ஆகச் செயல்படத் தொடங்குகிறார் அருண்.

ஒருநாள், அவர் செல்ல வேண்டிய விமானத்திற்குப் பதிலாக வேறொரு விமானத்தில் செல்லுமாறு அவருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது.

விமான நிலையத்தில் அவர் மீது ஒரு நபர் மோதும்போது, ஒரு டிக்கெட் கீழே விழுகிறது. அதில் அருண் பெயர் எழுதியிருக்கிறது.

தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல், அந்த விமானத்தில் ஏறுகிறார் அருண். மிகச்சில நிமிடங்களிலேயே, அந்த விமானம் ‘ஹைஜாக்’ செய்யப்படுவதாக உணர்கிறார்.

விமானத்தில் இருக்கும் ஒரு நபரின் மீது அருணுக்குச் சந்தேகம் ஏற்படுகிறது. அவரைத் தாக்கி மயக்கமடையச் செய்கிறார். விமானத்தில் இருக்கும் மருத்துவரைக் கொண்டு சிகிச்சை அளிக்கும்போது, அந்த நபர் மரணமடைகிறார்.

விமான நிலையக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டால், இறந்துபோன நபர் தான் அந்த விமானத்திற்கான ‘கமாண்டோ’ என்று தெரிய வருகிறது.

அந்த விமானத்தை ராணுவ வீரரான அருண் கடத்தப்படுவது போன்ற தோற்றம் வெளியுலகில் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. அதேநேரத்தில், பாகிஸ்தானில் உள்ள சில ஊடகங்களில் ‘இந்திய வீரர் ஒருவர் விமானத்தை ஹைஜாக் செய்ததாக’ செய்திகள் வெளியாகின்றன.

அப்போது, இந்தியா – பாகிஸ்தான் நாட்டு பிரதமர்கள் இடையிலான பேச்சுவார்த்தைக்காக இஸ்லாமாபாதில் இருக்கிறார் பிரியம்வதா. அவரிடம், அருண் ஒரு விமானத்தைக் கடத்தியிருப்பதாகத் தகவல் சொல்லப்படுகிறது.

‘யோதாவை மீண்டும் உயிர்ப்பிப்பதற்காக அருண் என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடும்’ என்ற எண்ணம் அவரது சகாக்களைப் போலவே, பிரியம்வதா மனதிலும் இருக்கிறது.

அதற்காக, சிலரது உயிரைப் பறிக்கும் வேலையில் அவர் ஈடுபடுவாரா என்ற எண்ணமே அனைவரையும் அலைக்கழிக்கிறது.

இந்த நிலையில், விமானி ஒருவருக்குப் பதிலாகப் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் அந்த விமானத்தில் இருப்பதைக் கண்டறிகின்றனர் இந்திய அதிகாரிகள்.

அதுவே, மிகப்பெரிய சதியில் அருண் மாட்டியிருப்பதை வெளிக்கொணர்கிறது.

அவர்கள் அதனை உணரும் நேரத்தில் பாகிஸ்தான் எல்லைக்குள் அந்த விமானம் புகுந்துவிடுகிறது.

அதன்பிறகு என்ன நடந்தது? விமானக் கடத்தல் சதியை அருண் முறியடித்தாரா, இல்லையா? என்பதை பரபரவென்று நகரும் ஆக்‌ஷன் காட்சிகளுடன் ஊடாக ‘த்ரில்’ சொட்டச் சொட்டச் சொல்கிறது மீதமுள்ள திரைக்கதை. இதன் முடிவு என்னவாக இருக்கும் என்று நம் அனைவருக்குமே தெரியும்.

எந்தக் காரணத்திற்காக நாயகனின் துணிச்சல் குறித்துக் கேள்விகள் எழுப்பப்பட்டனவோ, அதுவே விமானப் பயணிகளின் உயிரை மட்டுமல்லாமல் சமாதானம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டையும் காப்பதாகச் சொல்கிறது ‘யோதா’.

திரைக்கதையில் ‘த்ரில்’!

வசீகரிக்கும் முகமும், கட்டுக்கோப்பான உடல்வாகுடனும் நம் கவனத்தை ஈர்க்கும் நாயகர்களில் ஒருவராக விளங்குபவர் சித்தார்த் மல்ஹோத்ரா.

விஷ்ணுவர்தன் இயக்கிய ‘ஷெர்ஷா’, ‘மிஷன் மஜ்னு’ படங்களின் வழியாக நமக்கு நன்கு அறிமுகமானவர்.

இந்தப் படத்தில், பாலிவுட்டின் ‘கமர்ஷியல் கிங்’ ஆவதற்கான அத்தனை வேலைகளையும் அவர் செய்திருக்கிறார். திரைக்கதை முழுவதுமே அவரைச் சுற்றிப் பின்னப்பட்டிருப்பதுவே, அவரது நடிப்புத்திறன் எத்தகையது என்பதைக் காட்டிவிடுகிறது.

ராஷி கன்னாவுக்கு இதில் ‘டிப்ளமேட்டிக்’கான பாத்திரம். அதில் அவர் பொருந்தி நிற்கிறார் என்பதுதான் ஆச்சர்யம்.

ஆனால், திரையில் அவரது கைகளின் தடிமன் அதிகப்படியாகத் தெரிவது உடல்வாகைப் பேணுவதில் அவர் கவனம் செலுத்த வேண்டுமென்பதைச் சுட்டிக் காட்டுகிறது.

திஷா பதானிக்கு இதில் ஆச்சர்யமானதொரு பாத்திரம் தரப்பட்டுள்ளது. அவர் ஆக்‌ஷனில் இறங்குமிடம், தியேட்டரில் விசிலைப் பறக்கவிடுகிறது.

சித்தார்த்தின் தந்தையாக வரும் ரோனித் ராய்க்கு சில பிளாஷ்பேக் காட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவர்கள் தவிர்த்து தனுஷ் விர்வானி, சன்னி இந்துஜா, சித்தரஞ்சன் திரிபாதி என்று பலர் இதில் தலைகாட்டியுள்ளனர்.

சுனில் ரோட்ரிக்ஸ், க்ரெக் மாக்ரே அமைத்துள்ள சண்டைக்காட்சிகளே ‘யோதா’வின் யுஎஸ்பி.

குறிப்பாக, விமானம் கடிகார முள் போன்று வட்டமடிக்கும்போது விமானியாக வந்த வில்லனுடன் நாயகன் மோதுவதாக ஒரு சண்டைக்காட்சி உள்ளது.

சீட் பெல்ட் அணிந்த பயணிகளுக்கு நடுவே, விமானத்தின் பக்கவாட்டுப் பகுதிக்கும் கூரைக்கும் நகர்ந்தவாறு அவர்கள் இருவரும் சண்டையிடுவதைப் பார்க்கும்போது நம்மால் ஒளிப்பதிவாளர் ஜிஷ்ணு பட்டாச்சார்ஜீயின் திறமையை மெச்சாமல் இருக்க முடியாது.

ஆக்‌ஷன் காட்சிகளுக்கு இணையாக, உணர்வுப்பூர்வமான காட்சிகளிலும் அவர் சூழலுக்குத் தகுந்த ஒளியைப் புகுத்தியிருக்கிறார்.

படத்தொகுப்பாளர் சிவகுமார் பணிக்கர், ஒவ்வொரு காட்சியும் நேர்த்தியாகத் தொடங்கி கனகச்சிதமாக முடிவடைய வேண்டுமென்பதில் அதீதக் கவனத்தைச் செலுத்தியிருக்கிறார்.

படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை சுப்ரதா சக்ரவர்த்தி, அமித்ராயின் தயாரிப்பு வடிவமைப்பு பணிகள் மிகச்சிறப்பாக அமைந்துள்ளன.

‘இது ஒரு பிரமாண்டமான படம்’ என்பதைக் காட்சிப்பூர்வமாக உணர்த்தினாலும் கூட, அதன் கொள்ளளவை மீறிய ஒரு பிம்பத்தை உருவாக்கியிருக்கிறார் பின்னணி இசை தந்த ஜான் ஸ்டீவர்ட் எடூரி. பல காட்சிகளில் அவரது இசை நம்மை இருக்கை நுனியில் அமர வைக்கிறது.

அதற்கு இணையாக, பாடல் காட்சிகளில் நம்முள் மென்மையான இறகொன்றைப் பறக்கவிட்டிருக்கின்றனர் இசையமைப்பாளர்கள் தனிஷ்க் பக்சி, விஷால் மிஷ்ரா, பிராக் மற்றும் ஆதித்ய தேவ்.

‘யோதா’வின் கதை, திரைக்கதை, வசனத்தை ஆக்கியுள்ள சாகர் ஆம்ப்ரே, இதனை புஷ்கர் ஓஜாவுடன் இணைந்து இயக்கியுள்ளார்.

அவர்கள் இருவரது நூறு சதவிகித ஒருங்கிணைப்பே, இப்படம் ஒரு பரபரப்பான ஆக்‌ஷன் த்ரில்லர் ஆக மாறக் காரணமாகியுள்ளது.

பலமும் பலவீனமும்..!

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், ‘யோதா’வில் நிறைய லாஜிக் குறைபாடுகள் தெரிய வரலாம். ஆனால், தியேட்டருக்குள் இருக்கும்போது அவை நம் நினைவுக்கு வராது என்பது இப்படத்தின் மாபெரும் பலம்.

இந்தக் கதையில், பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் அணுசக்தி விஞ்ஞானியை ஏன் கொல்கின்றனர் என்பதோ, அவர்கள் ஏன் திரும்பத் திரும்ப அருணை ‘டார்கெட்’ செய்கின்றனர் என்பதோ காட்டப்படவில்லை.

நீண்டகாலமாக ‘யோதா’வைக் கலைத்துவிடக் கூடாது என்று போராடும் அருண், எந்த சந்தர்ப்பத்தில் தன் முடிவை மாற்றிக்கொண்டார் என்பதுவும் திரைக்கதையில் சொல்லப்படவில்லை.

இந்தப் படத்தின் கதை, 2000வது ஆண்டுவாக்கில் நடப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. அதற்கேற்ப, பேஜர் போன்று மொபைலை பயன்படுத்திய காலகட்டத்தைக் கண் முன்னே காட்டியிருக்கின்றனர் இயக்குனர்கள்.

படத்தில் தனது மொபைலுக்கு வரும் குறுஞ்செய்திகளை ‘பாலோ’ செய்கிறார் நாயகன். அதனை அனுப்புவது யார் என்பது திரைக்கதையில் தெளிவுபடுத்தப்படவில்லை.

ஒரு விமானத்தில் பயணிகளுக்கு பாதுகாப்பு தரும் கமாண்டோ எந்த இடத்தில் இருப்பார், மருத்துவர் எங்கிருப்பார், சரக்குகள் வைக்கும் இடம் எப்படியிருக்கும் என்பது போன்ற பல ‘டீட்டெய்ல்’கள் ’யோதா’வில் உண்டு.

விமானத்தில் பயணித்தவர்கள் கூட அறியாத அவ்விஷயங்கள், இத்திரைக்கதையில் போகி்றபோக்கில் சொல்லப்படுகின்றன.

மேற்சொன்ன விஷயங்கள் அனைத்தும் ‘யோதா’வின் பலவீனங்களாகத் தெரியலாம். ஆனால், அவற்றில் பாதியைப் பலமாகக் கருதிக் களமாடியிருக்கிறது படக்குழு.

உண்மையைச் சொன்னால், இரண்டாம் பாதி முழுக்கவே நம்மை இருக்கை நுனியில் அமரச் செய்திருக்கிறது ‘யோதா’. நல்லதொரு ஆக்‌ஷன் படம் பார்க்க, இதைவிட வேறென்ன வேண்டும்?!

– உதய் பாடகலிங்கம்

You might also like