பஸ்தர்: தி நக்சல் ஸ்டோரி – ‘ஓவர்டோஸ்’ ட்ராமா!

‘தி லாஸ்ட் மாங்க்’ எனும் ஆங்கிலப் படத்தை இயக்கியபிறகு சில ஆவணப்படங்களை இயக்கிய சுதீப்தோ சென், ‘தி கேரளா ஸ்டோரி’ மூலமாக நாடு முழுவதும் தெரிந்த இயக்குனராக மாறினார்.

ஐஎஸ் இயக்கத்திற்காகக் கேரளாவைச் சேர்ந்த சில இளம்பெண்கள் மதமாற்றம் செய்யப்படுவதாகக் கூறிய அப்படம் திரையரங்குகளில் வெளியானபோது சர்ச்சைகள் எழுந்தன.

கடந்த ஆண்டு வெளியான அப்படம் சில மாத கால இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில் ஓடிடியில் வெளி வந்தது.

இந்த நிலையில் சுதீப்தோ சென், தயாரிப்பாளர் விபுல் அம்ரித்லால் ஷா மற்றும் ‘தி கேரளா ஸ்டோரி’ நாயகி அடா சர்மா கூட்டணி மீண்டும் இணைந்துள்ள ‘பஸ்தர்: தி நக்ஸல் ஸ்டோரி’ தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்த படம் என்ன மாதிரியான உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது?

பஸ்தரில் நடப்பது என்ன?

சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள பஸ்தர் மாவட்டத்தில் நக்சலைட்களின் ஆதிக்கம் அதீதமாக இருக்கிறது.

அதனைத் தடுக்கும் பொருட்டு, ஐஜி நீரஜா மாதவன் (அடா சர்மா) அப்பகுதியில் காவல் துறையினரின் செயல்பாடுகளை முடுக்கிவிடுகிறார்.

நீரஜாவைச் சந்தித்து தனது மகனும் மகளும் கல்வி கற்க உதவி பெற்றார் என்பதற்காகவும், சுதந்திர தினத்தின்போது தேசியக் கொடி ஏற்றினார் என்பதற்காகவும் மிலிந்த் காஷ்யப் (சுப்ரத் தத்தா) எனும் நபரைக் கொடூரமாகக் கொல்கிறார் நக்சலைட் குழுவிற்குத் தலைமை வகிக்கும் லங்கா ரெட்டி (விஜய் கிருஷ்ணா).

மிலிந்தின் மனைவி ரத்னா (இந்திரா திவாரி) கண் முன்னே அக்கொடூரத்தை நிகழ்த்துகிறார். அது மட்டுமல்லாமல், அவர்களது மகன் ராமனையும் இழுத்துச் செல்கின்றனர் நக்சலைட் இயக்கத்தினர்.

அதையடுத்து, அழுது சிவந்த கண்களுடன் மகள் ரமாவை அழைத்துக்கொண்டு ஊர் திரும்புகிறார் ரத்னா. நீரஜா எவ்வளவோ வற்புறுத்தியும், கணவரின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்ய அனுமதிக்காமல் புதைத்துவிடுகிறார்.

ராமன் என்னவானான் என்று தெரியாமல் தவிக்கும் ரத்னாவை ஆற்றுப்படுத்து, அவரைச் சிறப்பு போலீஸ் அதிகாரிக்கான (SPO) பயிற்சியில் சேர்த்துவிடுகிறார் நீரஜா.

அது மட்டுமல்லாமல், அங்குள்ள பழங்குடியினக் கிராமங்களில் காவல் துறையினருடன் இணைந்து போராடும் நோக்கில் தான் அமைத்த ‘சல்வா ஜுடும்’ குழுவைப் பலப்படுத்தும் முயற்சிகளிலும் ஈடுபடுகிறார்.

இந்த நிலையில், பஸ்தரில் பொதுமக்கள் நக்சலைட்டுகளால் கொல்லப்பட்ட வழக்கொன்றில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் சமூகச்செயற்பாட்டாளர் வன்யா ராய் (ரெய்மா சென்) மற்றும் ஒரு பேராசிரியை பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன.

அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், வழக்கறிஞர் நீலம் நக்பால் (ஷில்பா சுக்லா) அவர்கள் இருவருக்காகவும் வாதாடுகிறார்.

வன்யா, நீலம் போன்றவர்கள் நேரடியாக நக்சலைட் இயக்கத்தவருடனும், அதன் மேல்மட்டத் தலைவர்கள் உடனும் தொடர்பு கொண்டிருக்கின்றனர்.

அவர்களிடம் இருந்து பெரும்பணம் பெற்றுக்கொண்டு, ஊடகங்களில் நக்சல் இயக்கங்களுக்கு ஆதரவான கருத்துகள் வெளிவருமாறு பார்த்துக் கொள்கின்றனர். அதனை எதிர்த்துப் போராடுகிறார் நீரஜாவின் நண்பரும் வழக்கறிஞருமான உத்பல் (யஷ்பால் சர்மா).

இந்த நிலையில், நீரஜா கர்ப்பமடைகிறார்; அதன்பிறகும் கூட, நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் அவர் பின்வாங்குவதாக இல்லை.

ஒருநாள் லங்கா ரெட்டி தலைமையிலான குழுவினர் பஸ்தர் காட்டுப்பகுதியில் வெவ்வேறு இடங்களில் உள்ள இரண்டு காவல் துறை முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதை அவர் முன்கூட்டியே கண்டறிகிறார்.

அதனைத் தடுக்கும் முயற்சியின் ஒருபகுதியாக, பெரும்படையை அனுப்புமாறு சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் கேட்கிறார் நீரஜா. ஆனால், அவர் அதற்கு ஒப்புதல் தரவில்லை.

அதன்பிறகும், முன்னோக்கிச் சென்று காவல் துறையினரின் உயிரைக் காக்க முயல்கிறார் நீரஜா. ஆனாலும், நிலைமை கைமீறிச் சென்றுவிடுகிறது. ஐம்பதுக்கும் மேற்பட்ட போலீசார் நக்சலைட்டுகளால் கொல்லப்படுகின்றனர்.

அதைத் தொடர்ந்து நடைபெறும் துறை ரீதியான விசாரணையின்போது, ‘சம்பந்தப்பட்ட அமைச்சரே போலீசாரின் இறப்புக்கு பொறுப்பு’ என்று கூறுகிறார் நீரஜா.

அதனைக் கேட்டு ஆத்திரப்படும் அந்த அமைச்சர், ‘இவரை உடனடியாக இடமாற்றம் செய்யுங்கள்’ என்கிறார். அவ்வாறு சொன்னபிறகும் கூட, நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்கிறார் நீரஜா.

முடிவில் என்னவானது என்று சொல்வதோடு இப்படம் முடிவடைகிறது.

‘பஸ்தரில் நடப்பது என்ன’ என்று ரசிகர்களுக்குச் சொல்ல முயன்றிருக்கிறது இப்படக்குழு. ஆனால், முழுக்க காவல் துறையினரின் பார்வையிலேயே விரிகிறது திரைக்கதை. எதிர்தரப்பின் பக்கமிருந்து நோக்கும் வகையிலான காட்சிகள் மருந்துக்குக் கூட இதில் இடம்பெறவில்லை.

சமநிலை தவறிய அந்தச் சித்தரிப்பு தான் இப்படத்தின் யுஎஸ்பி’ என்று இயக்குனர் சுதீப்தோ சென்னோ, இப்படத்தில் பணிபுரிந்தவர்களோ கருதினால், பதிலுக்கு நாம் ‘ஸாரி’ சொல்லத்தான் வேண்டும்.

ஏனென்றால், எண்பதுகளில் வெளியான ‘பழிக்குப் பழி’ வகையறா படங்களே மேல் என்பது போன்ற எண்ணத்தை விதைக்கிறது அவர்கள் தந்துள்ள உள்ளடக்கம்.

அடா.. அடடா..!

‘அடா.. அடடா..’ என்று ரசிகர்கள் ஹைகூ கவிதை பாட வேண்டிய காலகட்டத்தில், அடா சர்மா எனும் மிக அழகான, திறமையான நடிகைக்கு நல்ல வாய்ப்புகளைத் தராமல் இந்தி, தெலுங்கு, தமிழ் திரையுலகங்கள் புறக்கணித்திருக்கின்றன.

அதற்கான பலனைச் சில ஆண்டுகளுக்குப் பிறகு அனுபவிக்கச் செய்திருக்கிறது ‘பஸ்தர்: தி நக்சல் ஸ்டோரி’. ஆக்ரோஷமான காட்சிகளில் அடாவின் நடிப்பைப் பார்க்கும்போது, ஒரு ரசிகனாக வருத்தமே மேலிடுகிறது.

‘அயோத்தி’யில் வந்த யஷ்பால் சர்மா, இதில் அடாவின் வழக்கறிஞர் நண்பராக வருகிறார்.

அவரைத் தவிர்த்து ரெய்மா சென், ஷில்பா சுக்லா, சுப்ரத் தத்தா, இந்திரா திவாரி என்று பல பிரபலங்கள் இதில் நடித்துள்ளனர்.

லங்கா ரெட்டியாக விஜய் கிருஷ்ணாவும், அவரது சகா லட்சுமியாக அனாங்ஷா பிஸ்வாஸும் தோன்றியுள்ளனர். இன்னும் ஒரு டஜன் பேராவது இதில் தலைகாட்டியிருப்பார்கள் என்று சொல்லும் அளவுக்குப் படம் முழுக்க மனிதத் தலைகள்.

பெரும்பாலும் பொருத்தமான நடிகர்களைத் தேர்வு செய்த வகையில், முகேஷ் சாப்ராவின் ‘காஸ்ட்டிங்’ பணி நம்மை ஈர்க்கிறது. ஆனால், அவர்களுக்குத் தந்துள்ள பாத்திரங்கள் தான் திரையில் செழுமையானதாக இல்லை.

ராகுல் தருமன் ஒளிப்பதிவு, தேவ் ராவ் ஜாதவ்வின் படத்தொகுப்பு, பிஷாக் ஜோதியின் இசை, நரேந்திர ரகுரிகரின் தயாரிப்பு வடிவமைப்பு என்று பலரது பங்களிப்புடன் இப்படத்தை ஆக்கியிருக்கிறார் இயக்குனர் சுதீப்தோ சென்.

படத்தின் எழுத்தாக்கத்தினை இயக்குனர் சுதீப்தோ சென் உடன் இணைந்து அமர்நாத் ஜா கையாண்டிருக்கிறார். அவர்களது உழைப்பில் அவசரமும் ஒருபக்கச் சார்பும் நிறைந்திருப்பது, ஒரு நேர்த்தியான சினிமாவுக்கான உள்ளடக்கத்தை இல்லாமல் ஆக்கியிருக்கிறது.

படம் தரும் அலுப்பு!

நம் நாட்டிலுள்ள மிக முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றைத் திரைப்படமாக மாற்றும்போது, பல்வேறு திசைகளில் இருந்து சிந்தித்து திரைக்கதையை ஆக்க வேண்டும்.

சினிமாவுக்கான சுதந்திரத்தைக் கொண்டு ஏதேனும் ஒரு பக்கத்தைக் கனமானதாக மாற்றினால், இன்னொன்று உள்ளீடற்ற உருவமாக மாறக் கூடும்.
பஸ்தர் பகுதியில் பல்லாண்டுகளாக இருந்துவரும் நக்சலைட்களின் ஆதிக்கத்தை

இப்படம் சொல்கிறது என்றும், அதில் சிலரது உண்மையான பெயர்களைத் தவிர்க்கத் திரைப்பட ஆக்கத்திற்கான சுதந்திரம் கைக்கொள்ளப்பட்டுள்ளது என்றும், தொடக்கத்திலேயே குறிப்பிட்டுவிடுகிறது படக்குழு.

ஆனால், அந்தச் சித்தரிப்பே இதனை ‘ஓவர்டோஸ் ட்ராமா’வாக கருதச் செய்கிறது. கடுமையான அலுப்பை உணரச் செய்கிறது.

மேற்கு வங்கம் முதல் ஆந்திரா, கேரளா வரை உள்ள மலைப்பிரதேசங்களில் நிறைந்திருக்கும் கனிம வளங்களுக்காகவே நக்சல்பாரி இயக்கங்கள் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறது இப்படம்.

அப்பகுதிகளில் கார்பரேட் நிறுவனங்களின் செயல்பாடுகளைத் தடுக்கும் வகையில் பழங்குடியின மக்களைத் தங்களுக்கான கேடயங்களாகப் பயன்படுத்துவதாகவும் சொல்கிறது.

எல்லாமே சரிதான். ஆனால், நக்சலைட்கள் அப்படிச் செயல்படுவதால் யாருக்கு, என்ன லாபம் என்ற கேள்விக்கு இத்திரைக்கதையில் பதிலே இல்லை.

அதே மலைப்பிரதேசங்களில் கார்பரேட் நிறுவனங்கள் கால் பதிக்க அரசு அனுமதி தருவது அந்த வளங்களைச் சூறையாட வழி வகுக்காதா என்ற கேள்விக்கும் பதில் இல்லை.

வேறு சில சாதிகளைச் சார்ந்தவர்களால் உருவாக்கப்பட்ட ‘சல்வா ஜூடும்’ போன்ற அமைப்புகள் பழங்குடியின மக்களை வேட்டையாடுவதற்காக அல்ல, நக்சலைட்டுகளை ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்டவை என்று ஓரிடத்தி வசனத்தில் குறிப்பிடுகிறார் இயக்குனர் சுதீப்தோ சென்.

அவர்களுக்கு எதிராகப் பத்திரிகைகளில் வெளியான செய்திகள் ‘திட்டமிட்ட சதி’ என்பதைத் தனது திரைமொழி கொண்டு உணர்த்துகிறார். கூடவே, குறைந்த காலத்தில் பயிற்சியளித்து அப்படையில் இருப்பவர்களின் கையில் துப்பாக்கி தரப்பட்டதைக் குற்றமல்ல என்கிறார்.

சத்தீஸ்கர் மாநிலம் குறித்தும், நக்சல்பாரி இயக்கங்களின் வரலாறு குறித்தும் தெரியாதவர்கள் கூட, இது போன்ற சித்தரிப்புகளைக் கண்டு துணுக்குறுவது நிச்சயம். ஏனென்றால், இப்படம் முழுக்க இவ்வாறான ஒருபக்க நியாயங்களே மிகைப்படுத்தப்படுகின்றன.

சம்பந்தப்பட்ட பழங்குடியின மக்களின் பார்வையோ, வாழ்வுத் துயரங்களோ இதில் வெளிப்படவில்லை.

மாறாக, அதுவும் கூட நீரஜா எனும் மையப்பாத்திரத்தின் நிழல் போன்றே திரையில் தோற்றமளிக்கிறது.

இந்தப் படம் தோற்குமிடமும் அதுவே. இது போன்ற பார்வைகளைத் தாங்கியிருப்பதாலேயே ‘பஸ்தர்: தி நக்சல் ஸ்டோரி’யின் உள்ளடக்கம் சர்ச்சைகளுக்குரியதாக மாறுகிறது.

சர்ச்சைகளை உருவாக்குவதால் மட்டுமே ஒரு திரைப்படம் கவனத்தைக் குவித்து பெரு வெற்றியைப் பெறும் என்றால், இப்படமும் அந்த நிலையை அடையும். ஆனால், அவ்வாறு நிகழ்வது குதிரைக்கொம்பு தான்..!

– உதய் பாடகலிங்கம்

You might also like