நடிகர் சங்கத்துக்கு கோடி கோடியாய் குவியும் நிதி!

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சென்னையில் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கப்பட்ட கட்டிடப்பணி, நிதிப் பற்றாக்குறை காரணமாக நிறைவு பெறாமல் உள்ளது.

நடிகர் சங்கக் கட்டிடத்தை முழுமையாகக் கட்டி முடிக்க 40 கோடி ரூபாய்க்கு மேல் பணம் தேவைப்படுகிறது.

எனவே நடிகர், நடிகைகளிடம் இருந்து நன்கொடை வாங்கும் நடவடிக்கையை தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் மேற்கொண்டுள்ளனர். நட்சத்திரங்களும் தாராளமாக நிதி அளித்து வருகிறார்கள்.

அண்மையில் விளையாட்டுத் துறை அமைச்சரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினருமான உதயநிதி 1 கோடி ரூபாய் வழங்கினார்.

இதனை தொடர்ந்து, இரு தினங்களுக்கு முன்னர் 1 கோடி ரூபாய்க்கான காசோலையை நடிகர் கமல்ஹாசன், நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி.முருகன் ஆகியோரிடம் வழங்கினார்.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய்யும் நடிகர் சங்கக் கட்டிடப் பணிகளுக்காக 1 கோடி ரூபாய் நிதி அளித்துள்ளார்.

இது குறித்து  தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டிடப் பணிகளைத் தொடர ஏதுவாக நடிகர் விஜய், நடிகர் சங்கத்துக்கு வளர்ச்சி நிதியாக அவரது சொந்த நிதியிலிருந்து ரூபாய் ஒரு கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அல்டிமேட் ஸ்டார் அஜித் உள்ளிட்டோரிடமும் நன்கொடை பெற தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.

– பாப்பாங்குளம் பாரதி.

You might also like