மிகக் கடுமையான ஒரு டெஸ்ட் தொடரை 4-1 என வென்றிருக்கிறது இந்திய அணி. மேலோட்டமாகப் பார்த்தால் இது என்னமோ எளிதான வெற்றியாக தெரியும்.
ஆனால் விராட் கோலி, புஜாரா, ரஹானே, கே.எல்.ராகுல், முகமது ஷமி போன்ற மூத்த வீரர்கள் இல்லாமல் கடுமையாக போராடி இந்த வெற்றியை அடைந்திருக்கிறது இந்திய அணி.
அதுவும் ‘பஸ்பால்’ என்ற அதிரடியான ஆட்ட முறையை பயன்படுத்திய பிறகு தோல்வியே காணாமல் இருந்த இங்கிலாந்து அணியை இந்த தொடரில் மண்ணைக் கவ்வ வைத்திருக்கிறது இந்தியா.
இந்திய அணியின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் இளம் தலைமுறை வீரர்கள்.
இந்த தொடரில் இந்திய அணி தலைகுனியும் நிலை ஏற்படுமோ என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு வந்த ஒவ்வொரு முறையும் இளம் தலைமுறை வீரர்கள்தான் அணியை மீட்டு வந்திருக்கிறார்கள்.
இதில் யஷஷ்வி ஜெயாஸ்வால் ஒருவர்தான் கடந்த ஆண்டில் அறிமுகமானவர்.
இந்திய டெஸ்ட் அணியின் அறிமுக வீரராக களம் இறங்கிய முதல் ஆண்டிலேயே முக்கிய வீரராகவும் மாறிப்போன ஜெய்ஸ்வால், இந்த தொடரின் நாயகனாக பட்டம் சூட்டப்பட்டுள்ளார்.
முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் இந்தியா தோற்றுப்போக வீரர்கள் அனைவரும் கடுமையான மனச் சோர்வில் இருந்தனர்.
இந்தச் சூழலில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜெய்ஷ்வால் அடித்த இரட்டைச் சதம், ஒட்டுமொத்த இந்திய அணிக்கும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த இரட்டை சதத்துக்கு பிறகு, இங்கிலாந்து அணியின் கண்களில் விரலை விட்டு ஆட்டிய ஜெய்ஷ்வால், 9 இன்னிங்ஸ்களில் மொத்தம் 712 ரன்களைக் குவித்தார்.
இங்கிலாந்தின் ‘பஸ்பால்’ கிரிக்கெட்டுக்கு இந்தியாவின் ‘யஷ்பால்’ கிரிக்கெட் சவால் விடுக்க, அதற்கு இங்கிலாந்திடம் பதில் இல்லாமல் போனது. அதன் விளைவே இந்தியாவின் இந்த தொடர் வெற்றி.
இந்த வெற்றியில் மற்றொரு இளம் வீரரான கில்லின் 2 சதங்களுக்கும்கூட பங்கு இருக்கிறது.
ஜெய்ஸ்வாலுக்கு இணையாக இந்த தொடரில் ரசிகர்களின் கவனம் ஈர்த்த மற்றொரு இளம் வீரர் சர்பிராஸ் கான்.
கே.எல்.ராகுல், ஸ்ரேயஸ் ஐயர் போன்ற மூத்த வீரர்கள் காயத்தால் வெளியேற, வேறு வழியில்லாமல்தான் ராஜ்காட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அவரை களம் இறக்கியது.
அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து அசத்தினார் சர்பிராஸ் கான்.
அதிலும் இங்கிலாந்து அணிக்கு, அவர்களின் அதிரடி பாணியிலேயே பதில் சொன்ன சர்பிராஸ் கான் முதல் இன்னிங்ஸில் 66 பந்துகளில் 62 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 72 பந்துகளில் 68 ரன்களையும் விளாசினார்.
இந்த தொடரில் 3 போட்டிகளில் ஆடிய அவர் 3 அரை சதங்களுடன் 200 ரன்களைக் குவித்தது அப்பர் மிடில் ஆர்டரில் ஆட தகுதியான வீரர் ஒருவர் கிடைத்தார் என்ற திருப்தியை இந்தியாவுக்கு கொடுத்திருக்கிறது.
இந்திய டெஸ்ட் அணியின் கடந்த ஓராண்டு கவலை, சரியான விக்கெட் கீப்பர் இல்லாதது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் கார் விபத்தில் ரிஷப் பந்த் காயமடைந்த பிறகு சரியான கீப்பர் இந்திய டெஸ்ட் அணிக்கு கிடைக்கவில்லை. கே.எல்.ராகுல், இஷான் கிஷன், கே.எஸ்.பரத் என்று பல வீரர்களை மாற்றிப் பார்த்தும் பயன் இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில்தான் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் கடைசி 2 போட்டிகளில் த்ருவ் ஜூரலை பரீட்சித்து பார்த்திருக்கிறார்கள். இஸ்ரோவின் ராக்டெ முயற்சியைப் போலவே இதுவும் சக்சஸ் ஆகியிருக்கிறது.
கீப்பிங்கிலும், பேட்டிங்கிலும் தோனியை நினைவுபடுத்தும் துருவ் ஜூரல், ராஞ்சி டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 90 ரன்களைக் குவித்து தனி நபராக இந்திய அணியை தோல்வியில் இருந்து மீட்டார்.
இரண்டாவது இன்னிங்ஸிலும் கில்லுடன் சேர்ந்து உறுதியாக நின்று இந்திய அணியை ஜெயிக்க வைத்தார்.
இனி ரிஷப் பந்தே மீண்டு வந்தாலும், அவரை ஆட வைப்பதா அல்லது துருவை வைத்தே தொடர்வதா என்ற குழப்பத்தை தேர்வுக் குழுவுக்கு அவர் கொடுத்துள்ளார்.
தேவதத் படிக்கல்லை பொறுத்தவரை கடைசி டெஸ்ட் போட்டியில் மட்டும்தான் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த ஒரு வாய்ப்பிலேயே 65 ரன்களை எடுத்தும், 2 கேட்ச்களைப் பிடித்தும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் படிக்கல்.
அவரைப் போலவே கிடைத்த ஒரு வாய்ப்பிலேயே 3 விக்கெட்களை வீழ்த்தி வேகப்பந்து வீச்சிலும் மாற்று வீரர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை கொடுத்திருக்கிறார் ஆகாஷ்தீப்.
இப்படி முழுக்க முழுக்க இளம் வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி இந்த தொடரை வெற்றிருப்பது எதிர்கால இந்திய கிரிக்கெட்டின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கிறது.
– ரெஜினா சாமுவேல்