ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்கள்கூட இல்லாத நிலையில் சிஎஸ்கே அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தி ஒன்று நியூஸிலாந்தில் இருந்து வந்திருக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வீரரான டெவன் கான்வே, இடது கையில் ஏற்பட்ட காயத்தால் அடுத்த 2 மாதங்களுக்கு கிரிக்கெட் போட்டிகளில் ஆட முடியாது என்பதே அந்த செய்தி.
2023-ல் நடந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் மட்டுமல்ல ஒட்டுமொத்த அணிகளிலேயே அதிக ரன்களைக் குவித்தவர் டெவன் கான்வே.
சிஎஸ்கே ஆடிய 16 போட்டிகளிலும் தொடக்க ஆட்டக்காரராக பேட்டிங் செய்த கான்வே மொத்தம் 672 ரன்களைக் குவித்தார்.
டெவன் கான்வேயும், ருதுராஜ் கெய்க்வாட்டும் சிறந்த தொடக்க ஜோடியாக இருந்து சிஎஸ்கே அணிக்கு புதிய பலத்தை கொடுத்தார்கள்.
இப்போது டெவன் கான்வே இல்லாததால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பலம் கொஞ்சம் குறைந்திருக்கிறது.
கான்வே இல்லாத சூழலில் நியூசிலாந்தின் மற்றொரு வீரரும், கடந்த ஏலத்தில் வாங்கப்பட்டவருமான ரச்சின் ரவீந்திராவை தொடக்க ஆட்டக்காரராக சிஎஸ்கே களம் இறக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
இந்தியாவில் கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடரில் ரச்சின் ரவீந்திரா சிறப்பாக பேட்டிங் செய்திருப்பதே இதற்கு காரணம்.
ரச்சினை தொடக்க ஆட்டக்காரராக களம் இறக்கும் சிஎஸ்கே, கூடவே கான்வேக்கு பதில் மற்றொரு புதிய வீரரையும் வாங்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் டெவன் கான்வேக்கு பதிலாக சிஎஸ்கே அணி வாங்க வாய்ப்புள்ள வீரர்கள்…
பில் சால்ட்:
கான்வேயைப் பொறுத்தவரை, அவர் ஒரு தொடக்க ஆட்டக்காரர் மட்டுமல்ல, விக்கெட் கீப்பரும்கூட.
அதனால் இந்த இரு வேலைகளையும் செய்யும் ஒரு வீரர் சிஎஸ்கே அணிக்கு தேவைப்படுகிறார். அத்தகைய ஆற்றல் வாய்ந்த வீரர் இங்கிலாந்தின் பில் சால்ட்.
இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர்களில் ஒருவரான பில் சால்ட், 21 சர்வதேச டி20 போட்டிகளில் 639 ரன்ல்களைக் குவித்துள்ளார்.
அதிகபட்சமாக 119 ரன்களைக் குவித்துள்ள பில் சால்ட்டின் ஸ்டிரைக் ரேட் 165.27.
அந்த வகையில் ஒரு சூப்பர் கீப்பராக மட்டுமின்றி அதிரடி ஹிட்டராகவும் இருக்கிறார் பில் சால்ட்.
அதனால் சிஎஸ்கே அணி அவரை மாற்று வீரராக வாங்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
ஜோஷ் இங்லிஸ்:
பில் சால்ட்டைப் போலவே விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங்கில் சிறந்து விளங்கும் மற்றொரு வீரர் ஆஸ்திரேலியாவின் ஜோஷ் இங்லிஸ்.
தேவைப்பட்டால் தொடக்க ஆட்டக்காரராக இறங்கும் ஆற்றலையும் கொண்ட இங்லிஸ், டி20 போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக இருந்து 50 இன்னிங்ஸ்களில் 1,411 ரன்களை குவித்திருக்கிறார்.
இவரது ஸ்டிரைக் ரேட் 151. ஆஸ்திரேலிய பிட்ச்களில் ராட்சசன் போல் ஆடும் இங்லிஸால் இந்திய பிட்ச்களில் அதே வேகத்தில் ஆட முடியுமா என்பது மட்டும்தான் ஒரு கேள்விக்குறியாக உள்ளது.
ஆட முடியும் என்றால் அவரைவிட சிறந்த மாற்று வீரர் இல்லை.
டேவிட் மலான்:
இங்கிலாந்தைச் சேர்ந்த டேவிட் மலான், ஒரு காலகட்டத்தில் டி20 போட்டிகளுக்காகவே பிறந்தவராக கருதப்பட்டவர்.
இங்கிலாந்துக்காக 62 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடிய இவர் எடுத்திருக்கும் மொத்த ரன்கள் 1,892.
ஒரு சதம் மற்றும் 16 அரைசதங்களை எடுத்திருக்கும் மலானின் ஸ்டிரைக் ரேட் 132.49.
சர்வதேச போட்டிகளில் சிறப்பாக ஆடிய இவர், ஐபிஎல்லில் இன்னும் சரியாக முத்திரை பதிக்கவில்லை. 2021-ம் ஆண்டில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஒரு போட்டியில் மட்டுமே ஆடி 26 ரன்களை எடுத்திருக்கிறார்.
அதன் பிறகு பஞ்சாப் அணியால் கழற்றி விடப்பட்ட அவரை பிறகு யாரும் வாங்கவில்லை. அதிரடி பேட்ஸ்மேன்களை தேடிவரும் சிஎஸ்கே அணிக்கு இவர் சிறந்த மாற்று வீரராக இருக்க வாய்ப்புகள் உள்ளன.
– ரெஜினா சாமுவேல்
#ஐபிஎல் #சிஎஸ்கே #சென்னை_சூப்பர்_கிங்ஸ்_அணி #டெவன்_கான்வே #ருதுராஜ்_கெய்க்வாட் #ரச்சின்_ரவீந்திரா #பில்_சால்ட் #ஜோஷ்_இங்லிஸ் #டேவிட்_மலான் #ipl #csk #chennai_super_kings #Devon_Conway #Rudraaj_Gaekwad #Rachin_Ravindra #Phil_Salt #Josh_Inglis #David_Malan