ஒரு படத்தோடு நம்மை ஒன்றவைப்பது எது? இந்தக் கேள்விக்குப் பதில் தெரிந்துவிட்டால் திரையுலகில் வெற்றிகளை ஈட்டுவது எளிதாகிவிடும்.
ஏனென்றால், ஒவ்வொரு படமும் ஏதோ ஒருவகையில் சம்பந்தப்பட்டவர்களுக்கும் இதர படைப்பாளிகளுக்கும் பாடங்களைச் சொல்லித் தந்து கொண்டே இருக்கிறது.
அந்த வரிசையில் ஒன்றாக அமைந்திருக்கிறது ஸ்ரீகாந்த், ஹரிஷ் பேரடி, பிரியங்கா திமேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் ராஜ்தேவ் இயக்கியுள்ள ‘சத்தமின்றி முத்தம் தா’.
சரி, இது எந்த வகையில் பாடமாக மாறியிருக்கிறது?
நினைவுகளை இழந்த பெண்!
சாலையில் அடிபட்டுக் கிடக்கும் சந்தியா (பிரியங்கா திமேஷ்) எனும் பெண்ணை மருத்துவமனையில் சேர்க்கிறார் ஒரு நபர் (ஸ்ரீகாந்த்). அங்கு, அவர் தனது மனைவி என்றும், தனது பெயர் ரகு என்றும் குறிப்பிடுகிறார்.
மருத்துவமனை தரும் விவரங்களைக் கொண்டு, அவரை நேரில் சந்திக்க வருகிறார் இன்ஸ்பெக்டர் எட்வர்ட் (ஹரீஷ் பேரடி). ஆனால், அவரைப் பார்த்ததும் பம்மி விடுகிறார் அந்த நபர்.
தலையில் அடிபட்ட காரணத்தால், சந்தியாவுக்குப் பழைய நினைவுகள் சுத்தமாக இல்லை. அதனை மருத்துவரிடம் கேட்டறியும் அந்த நபர், பத்து நாட்கள் கழித்துச் சந்தியாவைத் தனது வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார்.
மருத்துவமனைக்கு மீண்டும் விசாரணை செய்ய வரும் எட்வர்ட், அங்கு இருவரும் இல்லாததைக் கண்டு துணுக்குகிறார். பரிசோதனைக்கு அவர்கள் வரவில்லை என்பதையும் அறிகிறார்.
மருத்துவமனையில் அந்த நபர் கொடுத்த முகவரியைக் குறித்துக்கொண்டு அந்த இடத்திற்குச் செல்கிறார் எட்வர்ட். அங்கு சென்றபிறகே அந்த நபர் தந்தது போலி முகவரி என்று தெரிய வருகிறது. அதையடுத்து, விபத்தில் அடிபட்ட பெண்ணையும் அந்த நபரையும் குறித்து விசாரணையைத் தீவிரப்படுத்துகிறார்.
அந்த காலகட்டத்தில், ரகு (வியான் மங்கலசேரி) என்ற நபர் தனது மனைவியைக் காணவில்லை என்று புகார் கொடுக்கக் காவல்நிலையம் செல்கிறார். அவர் தந்த புகைப்படத்தில் இருக்கும் பெண் தான், எட்வர்ட் குழு தேடிக் கொண்டிருக்கும் பெண் எனத் தெரிகிறது.
அதையடுத்து, சந்தியா எங்கே? அவரைக் கடத்திச் சென்றவரின் உண்மையான பெயர் என்ன? சந்தியாவை அவருக்கு முன்பே தெரியுமா என்பது போன்ற கேள்விகளுக்குப் பதில்களை அறிய முயற்சிக்கின்றனர் போலீசார்.
அப்போது என்ன நடந்தது என்பதே மீதிக்கதையாக அமைந்துள்ளது.
இந்தக் கதையில், சந்தியா என்ற பெண் தலையில் அடிபட்டு நினைவுகளை இழந்துவிடுகிறார் என்பதுதான் முக்கியமான திருப்பம். அந்த விஷயத்தை நாம் பல தமிழ் திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம்.
ஆதலால், அவரது கணவர் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் நபரை ஒரு கூலிப்படை கொலையாளியாகக் காட்டி வித்தியாசப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.
அவரைப் பிரத்யேகமாக இன்ஸ்பெக்டர் எட்வர்ட் தேடுவதாகவும் கதையை நகர்த்தியிருக்கிறார். ஆனால், அந்த இடம்தான் திரைக்கதையின் அடித்தளத்தையே சுக்குநூறாக்கியிருக்கிறது.
பிசகிய திரைக்கதை!
‘சத்தமின்றி முத்தம் தா’ படம் தொடங்கும்போதே, சந்தியாவை இரண்டு நபர்கள் கொலை செய்ய முயற்சிப்பதைக் காட்டிவிடுகிறார் இயக்குனர்.
கொஞ்சம் கூர்ந்து கவனித்தால், அந்த நபர்கள் குறித்த ‘க்ளூ’வும் கூட நமக்கு எளிதில் புலப்பட்டுவிடும்.
ஆனால், அந்த ‘க்ளூ’ தொடர்பான பாத்திரங்களையோ, காட்சிகளையோ திரைக்கதையில் அறிமுகப்படுத்தத் தவறியிருக்கிறார் இயக்குனர். அதுவே, இந்தக் கதையைப் பலவீனப்படுத்தும் முதல் அம்சம்.
இதில் சந்தியாவாக பிரியங்கா திமேஷும், அவரை மருத்துவமனையில் சேர்க்கும் மனிதராக ஸ்ரீகாந்தும் நடித்துள்ளனர்.
கதைப்படி, ஸ்ரீகாந்துக்கு பிரியங்காவைத் தெரியும். ஆனால், அவருக்குத்தான் (நமக்கும்தான்) இவரைப் பற்றி எதுவுமே தெரியாது. அந்த இடைவெளியைத் திரைக்கதையில் இயக்குனர் பயன்படுத்தவே இல்லை.
இப்படத்தில் நடித்தவர்கள் எண்ணிக்கை பதினைந்தைத் தொட்டிருந்தால் ஆச்சர்யம் தான். பின்னணியில் நடமாடும் மனிதர்களைக் கணக்கில் கொண்டால் ஒரு நூறு கூடத் தேறாது.
இப்படியொரு கூட்டத்தைக் கையில் வைத்துக்கொண்டு, இக்கதையைச் சென்னை போன்ற பெருநகரமொன்றில் நிகழ்வதாக வடிவமைத்திருக்கிறார் இயக்குனர்.
அது மட்டுமல்லாமல், இந்த படத்தில் ஹரீஷ் பேரடி ஏற்றிருக்கும் இன்ஸ்பெக்டர் எட்வர்ட் பாத்திரம் இன்னொரு வகையில் நம்மைப் படுத்தி எடுக்கிறது.
சென்னையில் எத்தனையோ காவல்நிலையங்கள் இருந்தும், திரைக்கதையில் பல்வேறு இடங்களில் நிகழ்பவை அனைத்தும் அவரது கட்டுப்பாட்டின் கீழேயே வந்து தொலைக்கிறது.
எந்தக் காவல்நிலையத்திலும் ஒரே ஒரு பெண்ணைத் தேடுவதோ அல்லது ஒரு கூலிப்படை கொலையாளியைத் தேடுவதோ மட்டுமே பணியாக இருந்துவிடாது.
ஆனால், ‘விசாரிக்க வேற கேஸே கிடையாதா’ என்று ரசிகர்கள் கத்தும் அளவுக்குப் படம் முழுக்கப் பிரியங்கா, ஸ்ரீகாந்த் ஏற்ற பாத்திரங்களைப் பற்றியே வசனம் பேசுகிறது ஹரீஷின் பாத்திரம்.
எடுத்துக்கொண்ட கதைக்கு ஏற்ப, ஒரு உலகைத் திரைக்கதை தீர்மானிக்கும் என்பதை மறுக்க முடியாது.
ஆனால், அந்த உலகம் பார்வையாளர்களுக்கு அபத்தங்கள் அற்றதாகத் தென்பட வேண்டியது கட்டாயம். அதனை இயக்குனர் ராஜ்தேவ் வசதியாக மறந்திருக்கிறார்.
இம்மூன்று பாத்திரங்கள் தவிர்த்து, பிரியங்காவின் கணவராக வரும் வியான் மங்கலசேரியும், அவரது செகரட்டரியாக வரும் நிகாரிகா பத்ரோவும் ‘போதும்.. போதும்..’ என்று சொல்லும் அளவுக்குப் பின்பாதித் திரைக்கதையில் அங்கம் வகிக்கின்றனர். இவர்கள் இருவருக்கும் ஒரு குத்து பாடல் கூட உண்டு.
எந்தவிதத் தேவைகளும் இன்றி ஹரீஷ் பேரடி, வியான், நிஹாரிகா உள்ளிட்டோர் ஆங்கிலத்தில் வசனங்களை உச்சரிப்பது இன்னொரு வகையான கொடுமை.
அவற்றைத் தமிழிலேயே உச்சரிப்பதில், இயக்குனருக்கு என்ன அசூயை என்று தெரியவில்லை அல்லது அது எந்த வகையில் திரைக்கதையை நவீனப்படுத்தும் என்றும் தெரியவில்லை.
ஒரு பாத்திரத்தையோ, கதைக்களத்தையோ அல்லது காட்சிகளையோ, பார்வையாளர் நம்பும்படி படைப்பதே திரைப்பட ஆக்கத்தில் உள்ள மிகப்பெரிய சவால்.
இயக்குனர் ராஜ்தேவ் அந்த விஷயத்தில் பிசகிய காரணத்தால் திரையில் தென்படும் அழகழகான பிரேம்கள் நம் மனதைத் தொடாமலேயே மறைந்துவிடுகின்றன.
அதனால் ஒளிப்பதிவாளர் எம்.யுவராஜ், படத்தொகுப்பாளர் ஜி.மதன், இசையமைப்பாளர் ஜுபின் உட்படப் பல தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பு விழலுக்கு இறைத்த நீராக மாறியிருக்கிறது.
பல படங்கள் நல்லதொரு உள்ளடக்கத்தைக் கொண்டிருந்தும், சரியான பட்ஜெட் மற்றும் தொழில்நுட்ப ஆக்கம் அமையாமல் திணறுவதற்கு நேரெதிரான அனுபவத்தை இப்படம் தருகிறது..
பழத்தின் ஓட்டை உடைத்த பின்னர், உள்ளுக்கும் வெற்றிடத்தைக் கண்டு வேதனையுறும் குழந்தையின் மனநிலைக்குத் தள்ளுகிறது ’சத்தமின்றி முத்தம் தா’.
ஒரு திரைப்படத்திற்கு ‘எவர்க்ரீன்’ அந்தஸ்தைப் பெற்றுத் தருவதென்பது, அதில் பங்கேற்றுள்ள கலைஞர்களின் நேர்த்தியான உழைப்பைச் சார்ந்தே அமையும்.
இதில் அக்கலைஞர்களின் கூட்டுழைப்பு பார்வையாளர்களோடு கைகோர்க்கத் தவறியிருக்கிறது.
மிக எளிதான இந்தக் கதையை, மிக நேர்த்தியான உள்ளடக்கத்தோடு மீண்டும் யாராவது ‘தொலைக்காட்சிப் படமாக’ உருவாக்கலாம். அப்போது உணரப்படும் மாறுபாடுகளே இத்திரைப்படத்தின் ஆக்கத்தில் உள்ள குறைகளைப் பளிச்சென்று நமக்குச் சுட்டிக்காட்டும்!
– உதய் பாடகலிங்கம்