எழுத்தாளர் சோ.தர்மன்
படத்தில் இருக்கும் இந்தக் கருவியின் பெயர் ‘முள் வாங்கி’. கிராமங்களில் விவசாயிகள், ஆடு மாடு மேய்ப்பவர்கள், விறகு வெட்டுபவர்கள், வேட்டைக்குப் போகிறவர்கள், இரவு நேர கிடைகாவல்க்காரர்கள் அனைவருடைய அரணாக்கயிற்றிலும் கட்டாயம் தொங்கும்.
காலில் தைத்திருக்கும் முள்ளை குத்தி எடுப்பதற்கு ஒரு கூர்மையான ஊசியும் அதை பற்றுக் கொறடு மாதிரி பிடுங்கி எடுக்க அதாவது நம் கட்டை விரலையும் ஆட்காட்டி விரலையும் ஒட்டி வைத்தாற் போல் ஒரு அமைப்பும் காதுகளில் உறுத்தும் குறும்பை வழித்து எடுக்க முன் பக்கத்தில் கரண்டி போன்ற ஒரு அமைப்புள்ள கருவியும் இருக்கும்.
அனைத்து சம்சாரிகளிடமும் இருக்கும் இந்த முள்வாங்கியை ரொம்ப நாட்களாகத் தேடிக் கொண்டிருந்தேன்.
நேற்று பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரியில் தமிழ்த்துறையில் உரையாற்றி விட்டு வரும்போது பாளை பஸ் நிலையத்தில் ஊசி பாசி விற்கக் கூடிய ஒரு நரிக்குறவப் பெண்மணியிடம் இரண்டு வாங்கி வந்தேன்.
இதை தயாரிப்பதையே அவர்கள் விட்டு விட்டார்களாம். ஏனெனில் யாருமே வாங்குவதில்லையாம்.
நாளை என் கிராமத்துக்கு போகும் போது விவசாய வேலைகள் செய்யும் என் தம்பியிடம் ஒன்றையும் ஆடுகள் மேய்க்கும் நரமண்டைத் தாத்தாவிடம் ஒன்றையும் கொடுக்க வேண்டும். ஒவ்வொன்றின் விலை வெறும் பத்து ரூபாய் மட்டுமே.
நன்றி: சோ.தர்மன் முகநூல் பதிவு