விவசாயிகளின் கோரிக்கைகள் பரீசலிக்கப்படட்டும்!

தலையங்கம்:

நமது தேசத் தந்தையாக நாம் இன்றும் சொல்லிவருகிற மகாத்மா காந்தி, “அசலான இந்தியா கிராமங்களில்தான் இருக்கிறது” என்பதைத் தனது வாழ்நாள் இறுதிவரை சொல்லிக்கொண்டே இருந்தார்.

அப்படிப்பட்ட கிராமங்களின் உயிரைப் போன்றவர்கள் விவசாயிகள். அவர்களை மீண்டும் மீண்டும் போராட்டக்களத்திற்கு வரவைத்திருக்கிறது இந்தியாவிலுள்ள பொருளாதாரச் சூழலும், அரசியல் சூழலும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு தான் இதே வடமாநிலப் பகுதிகளில் குறிப்பாக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து டெல்லியை நோக்கி விவசாயிகள் நூற்றுக்கணக்கான நாட்களுக்கு மேல் போராடி, பல உயிர்களைப் பறிகொடுத்ததின் பின்னணியில் வேளாண் சட்டத்தை திரும்பப் பெற்றது மத்திய அரசு.

தற்போதும் அதே வட மாநிலப் பகுதிகளிலிருந்து விவசாயிகள் திரண்டு வந்து போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மையில் இந்தப் போராட்டம் சட்டென்று நிகழ்ந்த ஒன்றல்ல. கடந்த ஆண்டு நவம்பர் மாதமே எந்தக் கோரிக்கையுடன் போராட இருக்கிறோம் என்பதை முன்பே மத்திய அரசுக்கு உணர்த்திவிட்டார்கள் விவசாயிகள்.

இருந்தும் வழக்கம்போல அரசு கண்டு கொள்ளாததால் அவர்கள் போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டு, கடந்த 13-ம் தேதி முதல் டெல்லியை நோக்கியப் பேரணியைத் துவக்கினார்கள். 

டெல்லி காவல்துறையும் துணை ராணுவப்படையும் குவிக்கப்பட்டு விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

திரும்பவும் வேலிகள் அமைக்கப்பட்டன. ஆணிகளாலான முள்படுக்கைகளை சாலைகளில் அமைத்தார்கள். ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு நடந்தது. அடிக்கடி கண்ணீர்புகைக் குண்டுகள் வீசப்பட்டன. ரப்பர் குண்டுகளைக் கொண்டு துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது.

இதில் 160-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தார்கள். மூன்று விவசாயிகள் உயிரிழந்திருக்கிறார்கள்.

தற்போது 5-வது முறையாக விவசாயிகளின் போராட்டத்தை முன்னெடுத்த தலைவர்களுடனான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.

இதில் முக்கியமாக விவசாயிகள் விளைவித்த உணவை உட்கொள்ளும் ஒவ்வொருவரும் தங்கள் மனசாட்சியை நோக்கி கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி இதுதான்.

“இந்தியாவில் எந்தப் பொருளையும் தயாரிப்பவர்கள் அதற்கான உற்பத்திக்கும் ஆகும் செலவை கணக்கில் எடுத்துக் கொண்டே அதன் விற்பனை விலையை நிர்ணயிக்கும்போது விவசாயிகளுக்கு மட்டும் ஏன் அந்த உரிமை இல்லை?”

“தாங்கள் விளைவிக்கும் உணவுப் பொருளுக்கான விலையைத் தீர்மானிக்கும் உரிமை எதனால் அவர்களுக்கு இல்லாமல் போனது?”

டெல்லியை நெருங்கியிருக்கும் விவசாயிகள் வலியுறுத்துவதும் இதைத்தான்.

தாங்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு உரிய விலையை நிர்ணயுங்கள். கடன்களைத் தள்ளுபடி செய்யுங்கள். இதைப்போன்ற எளிய கோரிக்கைகளைத்தான் விவசாயிகள் தங்கள் தரப்பில் வலியுறுத்தி போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வங்கிகளிடமிருந்துப் பெற்ற பலகோடி மதிப்பிலான கடன்களை சர்வ சாதாரணமாக தள்ளுபடி செய்யும் மத்திய அரசு, இவ்வளவு தூரத்திற்கு விவசாயிகள் தங்கள் உடலை வருத்திப் போராடி உயிரிழந்து வலியுறுத்தும் கோரிக்கைகளை இனியாவது பரீசிலித்து அவர்களுடைய வாழ்விலும் பசுமைப் படரச் செய்யவேண்டும் என்பதே சராசரி மக்களின் கோரிக்கை.

நமக்கு உணவளிப்பவர்களின் வாழ்வைப் பசுமை பெறச் செய்வதும் நமது முக்கிய கடமை இல்லையா!

#விவசாயிகள் #இந்தியா #கிராமங்கள் #மகாத்மா #காந்தி #பஞ்சாப் #ஹரியானா #வேளாண்_சட்டம் #மத்திய_அரசு #டெல்லி #விவசாயிகள்_போராட்டம் #விவசாயிகள்_பேரணி #விவசாயக்_கடன் #கார்ப்பரேட்_நிறுவனங்கள் #வங்கி #Agriculture_Loan #Farmers #India #Villages #Mahatma #Gandhi #Punjab #Haryana #Agricultural_Act #Central_Government #Delhi #Farmers_Protest #Farmers Rally #Corporates_Bank

You might also like