பிப்ரவரி 21 – சர்வதேசத் தாய்மொழி தினம்
‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி தமிழ்க்குடி’ என்கிறது புறப்பொருள் வெண்பா மாலை.
அந்நூல் உரைப்பதை முழுவதுமாக அறியாதபோதும், தாய்மொழியாம் தமிழைப் பெருமைப்படுத்தும் அந்த வார்த்தைகள் மட்டும் நம் நெஞ்சோடு ஒட்டிக் கிடக்கின்றன.
‘ஒருகாலத்தில் தமிழைப் பேசுவதும் எழுதுவதும் படிப்பதும் அனிச்சைச் செயலாக நம் வாழ்வோடு கலந்திருந்தது; இன்று அப்படியில்லை’ – ஒவ்வொரு காலகட்டத்திலும் முற்றிய தலைமுறை தளிர்களை நோக்கி உதிர்க்கும் வார்த்தைகள் இவை.
தமிழ் எனும் பெருங்கோளத்தின் மைய ஈர்ப்புவிசை சிதைவதும் கூடுவதுமாக இருந்தாலும், இந்தக் கவலை மட்டும் மாறாமல் தொடர்கிறது.
காரணம், சமகாலத்தில் பல்வேறு மொழிகள் அழிவுக்குள்ளாவதைக் கண்கூடாகக் காண்பது தான்.
எத்தனை ஆயிரம் மொழிகள்!
உலகில் இருக்கும் 195 நாடுகளில் 8,324 மொழிகள் உள்ளன என்றும், அவற்றில் 7,139 மொழிகள் புழக்கத்தில் இருப்பதாகவும் சொல்கிறது யுனெஸ்கோ மற்றும் மொழிகளுக்கான உலக அட்லஸ் அமைப்பு வெளியிட்டுள்ள ஒரு புள்ளிவிவரம்.
குறிப்பாக, அம்மொழிகளில் 45% சிதைவின் விளிம்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இரண்டு வாரங்களுக்கு ஒரு மொழி அழிவைச் சந்திப்பதாகச் சொல்லப்படுகிறது.
சில நூறு மொழிகளே தினசரி வாழ்வில் புழக்கத்தில் இருக்கின்றன; அவற்றிலும் டிஜிட்டல் பயன்பாட்டில் இருக்கும் மொழிகள் நூறைத் தொடும் என்கிறது அட்லஸ். அதிலிருந்து மீதமுள்ளவை மெல்ல மறைந்து கொண்டிருக்கின்றன என்பது தெளிவாகத் தெரிகிறது.
பல்வேறு மொழிகள் உயிர்ப்புடன் இருக்கின்றன எனும்போது, பல்வேறுபட்ட கலாச்சாரம் செழிப்புடன் இருப்பதாகப் பொருள். தற்போது, அந்த கலாசாரப் பன்முகத்தன்மையை இழந்து கொண்டிருக்கிறது உலகம்.
அம்மொழிகள், கலாசாரத்தின் வழியே கிளை விட்டுக் கொண்டிருந்த அறிவுச் சேமிப்பு அதனால் தடைபட்டிருக்கிறது. அடுத்தடுத்த தலைமுறையின் சிந்தனைத் திறனே பாதிக்கப்படும் நிலை உருவாகியிருக்கிறது.
தாய்மொழி தினம்!
அழியும் நிலையில் உள்ள மொழிகளையும் கலாசாரங்களையும் பாதுகாக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21ஆம் தேதியன்று ‘சர்வதேச தாய்மொழி தினம்’ அனுசரிக்கப்படுகிறது.
1999ஆம் ஆண்டு இதற்கான அறிவிப்பை வெளியிட்டது யுனஸ்கோ. அதன் பின்னணியில் வங்கதேசத்தைச் சேர்ந்த சில அறிஞர்கள் இருந்தனர். அதன் பின்னே ஒரு வரலாற்று அத்தியாயம் உள்ளது.
1947இல் பாகிஸ்தான் சுதந்திரமடைந்தபிறகு, அதன் ஆளுகைக்கு உட்பட்ட வங்கதேசத்தில் உருது ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் அங்கு பெங்காலி மற்றும் பங்களா மொழிகளைப் பேசுபவர்களே அதிகமிருந்தனர்.
அதனால், உருதுவோடு சேர்த்து பங்களாவையும் ஆட்சி மொழியாகச் சேர்க்க வேண்டுமென்ற குரல்கள் 1948 முதல் ஒலிக்கத் தொடங்கின.
தீரேந்திரநாத் தத்தா என்பவர் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அதற்காக முதல் ஆளாகக் குரல் எழுப்பினார்.
அந்த தீப்பொறி மேலும் வலுப்பெற்று, 1952ஆம் ஆண்டு டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் மக்களுடன் இணைந்து பல போராட்டங்களை நடத்தினர்.
அப்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 4 மாணவர்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் உயிர் நீத்த நாளை ஒவ்வொரு ஆண்டும் நினைவுகூரத் தொடங்கினர் வங்கதேச மக்கள்.
அதன் தொடர்ச்சியாக, அந்நாளை ‘சர்வதேச தாய்மொழிகள் தினமாக’ கொண்டாட வேண்டுமென்று கனடாவைச் சேர்ந்த மொழியியல் அறிஞர்கள் ரபிகுல் இஸ்லாம், அப்தஸ் சலாம் அப்போதைய ஐநா பொதுச்செயலர் கோபி அன்னானுக்குக் கடிதம் எழுதினர். அவர்களது விருப்பம் அதற்கடுத்த ஆண்டுகளில் செயல் வடிவம் பெற்றது.
மொழி காப்போம்!
இந்தியாவில் நூற்றுக்கணக்கான மொழிகள் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், அவற்றில் 234 மொழிகளே அங்கீகரிக்கப்பட்டுள்ளன; அவற்றில் 22 மொழிகளே அரசின் அட்டவணையில் இடம்பெற்றுள்ளன.
நம் நாட்டில் உள்ள மொழிகளைக் காத்துப் போற்றிடும் வகையில், 2016இல் மைசூரிலுள்ள இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவனம் பாரத்வாணி திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கியது.
தாய்மொழியானது நம் புரிதலுக்கான அடிப்படையாக உள்ளது. அதனாலேயே, அதன் வழியே கல்வி போதிக்கப்படும்போது மிக எளிதாக மாணவர்கள் கற்றுக்கொள்கின்றனர்.
அது தெளிவான கற்றலுக்கு வழிவகுப்பதோடு, பிற மொழிகளைக் கற்றுக்கொள்ளும் ஆர்வத்திற்கும் தூண்டுகோலாக அமைகிறது.
பல்வேறு மொழிகளையும் கலாசாரங்களையும் அறியும் ஒருவரால், அதன் வழியே பெறும் தகவல்களைப் பிறருக்கு உதவும் வகையில் பகிர முடியும்.
அதனாலேயே, மொழிப் பன்முகத்தன்மை என்பது வரவேற்புக்குரியதாக உள்ளது.
‘பன்மொழிக் கல்வியே தலைமுறைகளுக்கு இடையேயான கற்றலுக்கான தூண்’ என்பது 2024ஆம் ஆண்டு சர்வதேசத் தாய்மொழி தினத்திற்கான கருப்பொருளாகக் கொள்ளப்பட்டுள்ளது.
இன்றைய சூழலில் ஒரு பண்பட்ட நாடோடியாக நாம் ஒவ்வொருவரும் மாறி வருகிறோம் என்பதே உண்மை.
அதற்குப் பல்வேறு மொழிகளை அறிவதும், அதன் அடிப்படையாகத் தாய்மொழி வழிக் கல்வி இருப்பதும் நாம் அறிந்ததே.
அந்த வகையில், மொழியைக் காப்பது குறித்த விழிப்புணர்வு தற்போது வெகுவாக மேலோங்கியிருக்கிறது.
அடுத்த தலைமுறைக்கான தமிழ்!
கம்ப்யூட்டர், லேப்டாப், ஆண்ட்ராய்டு போன் வந்தபிறகு கையால் எழுதும் வழக்கம் அருகிவிட்டது. எந்தவொன்றையும் தட்டச்சு செய்வது இயல்பாக மாறியுள்ளது.
எண்பது, தொண்ணூறுகளில் பிறந்தவர்கள் இந்தப் புதிய தொழில்நுட்பங்களின் வீச்சை முதன்முறையாக எதிர்கொண்டவர்கள்.
அவர்களே நிலையே இது எனும்போது, இன்றைய தலைமுறையினர் குறித்து தனியே சொல்ல வேண்டியதில்லை. அதனால், எழுதுவதற்குச் சோம்பல் படும் குழந்தைகளை நிறையவே காண முடிகிறது.
பதின்ம வயதுகளில் இருப்பவர்களோ, மொபைல் பயன்பாட்டில் உள்ள ‘தங்கிலீஷின்’ செல்வாக்கில் சிக்கிக் கிடக்கின்றனர்.
தமிழ், ஆங்கிலம் உட்படப் பல மொழிகளின் எழுத்துருக்கள் அவர்களிடம் சிதைந்து கிடக்கின்றன.
இந்தச் சூழலில், தமிழில் எழுதுவதையும் பேசுவதையும் சிந்திப்பதையும் அழுத்தமாகச் சொல்லித் தருவது நம் கடமை.
அந்த அடிப்படைக் கட்டமைப்பு சரியாக அமையும்போது தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைசார் அறிவும், பிற மொழிக் கற்றலுக்கான திறனும் நிச்சயம் பல்கிப் பெருகும்.
அதன் வழியே பக்குவமும் சகிப்புத்தன்மையும் பேராற்றலும் குழந்தைகளை ஆட்கொள்ளும்.
வேறு மாநிலங்களில் இருந்து இடம்பெயர்ந்தாலும், தங்கள் தாய்மொழியோடும் கலாசாரத்தோடும் வாழ்ந்துவரும் மனிதர்கள் பலரை நாம் கண்டு வருகிறோம்.
வெளிநாடுகளில் வாழும் நம் உறவுகள் மண் மணம் மாறாமல் வாழ்வதைச் சமூக ஊடகங்கள் வழியே தெளிவாக அறிகிறோம்.
இருக்குமிடத்தில் வானும் மண்ணும் மாறினாலும் மொழியும் கலாசாரமும் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்பட வேண்டும் என்ற விருப்பம் அதன் பின்னே இருக்கிறது.
அதுவே, எத்தனையோ ஆயிரம் தடைகளைத் தாண்டி தமிழை வளர்த்தெடுத்திருக்கிறது.. இனியும் வளர்த்தெடுக்கக் காத்திருக்கிறது..!
-மாபா