வாசிப்பின் ருசி:
உனக்கென்ன, இருபத்தைந்து வயது இருக்குமா? இதுதான் நீ சரியாக முடிவெடுக்க வேண்டிய தருணம். உன் பிற்கால வாழ்க்கையை அது சீராகவும் படிப்படியாக வளர்ச்சி பெறவும் வழி அமைத்துக் கொள்ள வேண்டிய வேளை இதுதான்.
நீ இப்போது எங்கே வேலையிலிருக்கிறாய்? சொல்லாதே. என்னிடம் சொல்லாதே. நீயாகவே யோசித்துப் பார்.
எல்லாக் கோணங்களிலிருந்தும் நீ இப்போது வேலையிலிருக்கும் இடம் உன்னை இன்னும் இருபது வருடங்களில் ஒரு பெரிய மனிதனாக உயர்த்திவிடுமா என்று நீயே நின்றாக யோசித்துப்பார்.
ஓரளவு சாத்தியம் என்றிருந்தாலும், இப்போதிருக்கும் இடத்திலேயே உன்னை உயர்த்திக் கொள்ள நீ என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமென்று திட்டமிட்டுச் செயல்படத் தொடங்கு.
ஒரு திட்டம் முன் யோசனையும் இல்லாமல் காலம் கழிக்காதே. ஆனால் உன் மனத்துக்கேற்ப இந்த வேலையில் போதிய வாய்ப்புகள் இல்லை என்றால் இப்போதே ஒரு முடிவு எடுத்துக்கொள்.
ஒரு மாதம், அதிகம் போனால் ஆறு மாதம். அதற்குமேல் காலத்தை வீணாக்காதே. உடனே அங்குமிங்கும் சுற்றிப் பார், அலைந்து பார், தேடிப் பார்.
இந்த வேலையை விட்டொழித்துவிட்டு உடனே வேறிடத்தில் சேர்ந்துக்கொள். சொல்லாதே, என்னிடம் சொல்லாதே.
உன்னுடைய இன்றைய எஜமானனுக்கு உன்னைத் துரோகம் செய்ய வைப்பவனாக என்னை மாற்றாதே!
– எழுத்தாளர் அசோகமித்ரனின் ஆகாயத்தாமரை நாவலிலிருந்து…