சைரன் 108 – ’ஜெயம் ரவி’க்கு மீண்டும் வெற்றி!?

’தனி ஒருவன்’, ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ இரண்டும் கலந்தது போன்று ‘சைரன் 108’ படம் இருக்கும். இதனைச் சொன்னவர் நடிகர், இயக்குனர் அழகம் பெருமாள். ‘சைரன் 108’ படத்திற்கான முன்னோட்டத்தின்போது, அவர் இதனைக் குறிப்பிட்டார். ஏன் இவ்வாறு சொன்னார்? ஜெயம் ரவி நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் அந்த அளவுக்கு சென்டிமெண்டும் ஆக்‌ஷனும் கனகச்சிதமாகப் பிணைந்திருக்கிறது என்பதே அவரது கருத்து.

சரி, உண்மையிலேயே அப்படியொரு காட்சியனுபவத்தை ‘சைரன் 108’ நமக்குத் தருகிறதா?

’பரோல் கைதி’யாக நாயகன்!

சென்னை சென்ரல் சிறையில் இருந்து பரோலில் வீட்டுக்குச் செல்கிறார் ஆயுள் தண்டனைக் கைதியான திலகவர்மன் (ஜெயம் ரவி). அவரது சொந்த ஊர் காஞ்சிபுரம். அங்குதான் அவரது குடும்பத்தினர் வாழ்கின்றனர். அவரது தந்தை உடல்நலமில்லாமல் படுத்த படுக்கையாக இருக்கிறார்.

திலகவர்மனுக்கு ஒரு மகள். அவரது பெயர் மலர் (யுவினா பர்தவி). பதின்ம வயதுப் பெண்ணான அவர் ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.

நீண்ட நாட்கள் கழித்துத் தந்தையைக் காண வேண்டும் என்ற ஆசை மலர் மனதில் இல்லவே இல்லை. காரணம், தனது தாயைக் கொன்றுவிட்டு அவர் சிறைக்குச் சென்றவர் என்பதே.

உண்மையில், திலகன் அவரது மனைவியைக் கொன்றாரா? இந்தக் கேள்விக்கான பதில், அவர் பரோலில் வீட்டுக்கு வந்தவுடனேயே தெரிந்துவிடுகிறது.

காவல் நிலையம் தனது காவலுக்காக நியமித்த வேளாங்கண்ணி (யோகி பாபு) கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு, ரகசியமாகச் சில செயல்பாடுகளை மேற்கொள்கிறார் திலகன். ஒருநாள் இரவு, அண்ணாச்சி பார் சென்று இருவரும் மதுபானம் வாங்குகின்றனர். அந்த பார், அரசியல் கட்சி பிரமுகர் மாணிக்கம் (அழகம்பெருமாள்) என்பவருக்குச் சொந்தமானது. அந்த நேரத்தில், அங்கு வேளாங்கண்ணி உடன் திலகனும் இருக்கிறார்.

அடுத்த நாள் காலையில் மாணிக்கம் (அழகம்பெருமாள்) அந்த பாரில் கொலையானது தெரிய வருகிறது. அதன் தொடர்ச்சியாக, நான்கு நாட்கள் கழித்து அவரது அரசியல் கட்சியைச் சேர்ந்த இன்னொருவர் (அஜய்) கொலையாகிறார். இந்த முறை, அவரைக் கொலை செய்தது திலகன் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவர்கள் இருவரை மட்டுமல்லாமல், அடுத்து இன்னொருவரையும் கொல்ல அவர் திட்டமிடுகிறார்.

அதேநேரத்தில், போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தினியின் (கீர்த்தி சுரேஷ்) மனதில் திலகன் குறித்து பெரும் சந்தேகம் எழுகிறது. அவர்தான் அந்தக் கொலைகளைச் செய்திருக்க முடியும் என்று அவர் ஆணித்தரமாக நம்புகிறார்.

ஆனால், கொலை நிகழ்ந்த விதமும் கிடைக்கும் தடயங்களும் அதனை மெய்ப்பிக்கும் வகையில் இல்லை. பதிலுக்கு, திலகனோ ‘முடிஞ்சா பிடிங்க’ என்று நந்தினிக்கு மறைமுகமாகச் சவால் விடுகிறார்.

அதன்பிறகு என்ன நடந்தது? கொலை செய்யப்பட்டவர்களுக்கும் திலகனுக்கும் என்ன முன்விரோதம்? உண்மையில், திலகனின் மனைவி எப்படி இறந்தார்? இது போன்ற பல கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது ‘சைரன் 108’ படத்தின் மீதி.

இதில், ஜெனி (அனுபமா பரமேஸ்வரன்) எனும் பெண்ணை திலகன் காதலித்து திருமணம் செய்து கொள்வதும், கதிர் எனும் இளைஞனை அவரது காதலியோடு சேர்த்து வைக்கப் போராடுவதும் கிளைக்கதைகளாக உள்ளன. அதன் வழியே, ஆணவக் கொலைகளுக்கு எதிரான குரலாகவும் ஒலிக்கிறது இப்படம்.

கொஞ்சமாய் வித்தியாசம்!

ஜெயம் ரவி நடித்த ‘அடங்க மறு’, ‘தனி ஒருவன்’ போன்ற படங்களோடு ‘விஸ்வாசம்’ படத்தையும் லேசாகப் பிசைந்து இக்கதையைத் தந்திருக்கிறார் புதுமுக இயக்குனர் ஆண்டனி பாக்கியராஜ். காட்சிரீதியாக அப்படங்களை உடனடியாக நினைவூட்டவில்லை என்பதே கொஞ்சம் வித்தியாசமானதாய் இப்படத்தை உணரவைக்கிறது.

இதில் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி, அஜய், அழகம்பெருமாள், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தொள தொள சட்டை, அழுக்கு வேட்டி, நரைத்த தலைமுடி மற்றும் தாடியோடு கொஞ்சம் வளைந்த முதுகுக்கான உடல்மொழியோடு இதில் தோன்றியிருக்கிறார் ஜெயம் ரவி. அது, அவரை சுமார் 45 வயது மதிக்கத்தக்கவராக எண்ண வைக்கிறது. ஒரு கமர்ஷியல் படத்தில் நாயகனின் நடிப்பு எந்தளவுக்கு ரசிகர்களைக் கட்டியிழுக்க வேண்டுமோ, அந்த அளவுக்குக் கனகச்சிதமாக அமைந்திருக்கிறது அவரது இருப்பு.

கீர்த்தி சுரேஷுக்கு இதில் இன்ஸ்பெக்டர் வேடம். உடலுக்கேற்ற ஆடை வடிவமைப்பு, ஒப்பனையற்றது போன்ற ஒப்பனை மற்றும் கொஞ்சம் விறைப்பான உடல்மொழியுடன் படம் முழுக்க வந்து போயிருக்கிறார். அவர் குரல் உயர்த்தும் இடங்கள் தரும் திருப்தி, ஸ்டைலாக வந்து போகும் ஷாட்களில் கிடைப்பதில்லை.

ஜெனியாக வரும் அனுபமாவுக்குப் பெரிதாக ‘ஸ்கோப்’ இல்லை. அதேநேரத்தில், ஒரு கதாபாத்திரமாக அவர் நம்மை நிச்சயம் ஈர்ப்பார்.

‘கோமாளி’க்குப் பிறகு கிட்டத்தட்ட பாதிப்படம் வரை ஜெயம் ரவியோடு இடம்பெறுகிறார் யோகிபாபு. பல இடங்களில் அவர் பேசும் வசனம் நம்மைக் கிச்சுகிச்சு மூட்டுகிறது.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான யுவினா பார்தவி இதில் ‘டீன்’ வயதுப் பெண்ணாக நடித்துள்ளார். அவர் ரவியிடம் கடுமை காட்டும் இடங்கள் அழகு என்றாலும், அவரது பாத்திரம் போதுமான அளவுக்குத் திரையில் வெளிப்படவில்லை.

இவர்கள் தவிர்த்து சமுத்திரக்கனி, அழகம் பெருமாள், அஜய், துளசி, சாந்தினி, மதன் தட்சிணாமூர்த்தி, முத்துகுமார் உட்பட ஒரு டஜன் நடிப்புக்கலைஞர்கள் இதில் தெளிவாகத் தங்களது முகத்தைக் காட்டுகின்றனர்.

திரைக்கதையில் ‘த்ரில்’லுக்கும் ஆக்‌ஷனுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஆண்டனி பாக்கியராஜ். அதேநேரத்தில், ஜெயம் ரவியின் குடும்ப உறுப்பினர்கள், மனைவியாக வரும் அனுபமாவின் பாத்திரம் மற்றும் வில்லன்களுக்கு உரிய முக்கியத்துவம் தர மறந்திருக்கிறார். போலவே, நாயகனை அவரது மகள் ஏன் அதீதமாக வெறுக்க வேண்டும் என்பதை விளக்க இதில் நேரடிக் காட்சிகள் இல்லை.

இந்த படத்தில் கொலைகள் நிகழும் விதம், நமக்கு ‘அடங்க மறு’ படத்தை நினைவூட்டுகிறது. மற்றபடி, இதர காட்சிகள் மூலமாக அந்த எண்ணத்தைத் துடைத்தெறிகிறார் இயக்குனர்.

ஒளிப்பதிவாளர் எஸ்.கே.செல்வகுமாரின் ஒளிப்பதிவானது டிஐ உடன் இரண்டறக் கலந்து, ஒவ்வொரு பிரேமையும் நம் மனதுக்குள் நிறைக்கிறது. படத்தில் பாதிக் காட்சிகள் இரவு நேரத்தில் படம்பிடிக்கப்பட்டவையாக இருக்கின்றன.

ரூபனின் படத்தொகுப்பில் கதை சீராகத் திரையில் விரிகிறது. ஜெயம் ரவியையும் கீர்த்தியையும் அடுத்தடுத்து ‘இண்டர்கட்’டில் காட்டும் உத்தி, இருவரும் ஒரேமாதிரியான பாதிப்புக்கு உள்ளானவர்கள் எனும் உணர்வை நமக்கு முன்னரே உணர்த்துகிறது. போலவே, கீர்த்தி சிறையில் விசாரணை மேற்கொள்ளும்போது பதிவேட்டில் ‘திலகவர்மன்’ என்ற பெயர் இருப்பதைத் திரையில் லேசுபாசாகக் காட்டுவது அருமையான இடம்.

தயாரிப்பு வடிவமைப்பாளர் கதிர், இந்த படத்தின் வடிவம் என்னவாகத் திரையில் வெளிப்படும் என்பதை உணர்ந்து ‘பட்ஜெட்’டை தீர்மானிக்கத் துணை நின்றிருக்கிறார். அதனால், மிகச்சில காட்சிகளில் மட்டுமே பிரமாண்டம் தெரிகிறது.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தந்த பாடல்களில் ‘நேற்று வரை’, ‘கண்ணம்மா’ பாடல்கள் சட்டென்று மனம் கவர்கின்றன. அவர் ஏன் பின்னணி இசை அமைக்கவில்லை என்று தெரியவில்லை.

அந்தக் கேள்வி எழாத வகையில், இதில் பின்னணி இசை தந்திருக்கிறார் சாம் சி.எஸ். ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷை அடுத்தடுத்து காட்டும் காட்சியிலேயே அவர் பரபரப்புத் தீயைப் பற்ற வைத்துவிடுகிறார். அதன்பிறகு, திரைக்கதையில் அந்த சூடு அடங்காமல் பார்த்துக் கொள்கிறார்.

‘ஒருத்தன் சாதி இல்லைன்னு சொன்னா, அவன் என்ன சாதின்னு தேடாதீங்கய்யா’ என்பது போன்ற வசனங்கள் இப்படத்தின் சிறப்பு. அதேபோல, இக்கதையில் ஆணவக் கொலை குறித்து இயக்குனர் தந்திருக்கும் ‘டீட்டெய்ல்’ சற்றே சர்ச்சையைக் கிளப்பக்கூடியவை. அதனை எந்த அளவுக்குப் படத்தின் வெற்றிக்குப் பயன்படுத்த வேண்டுமோ, அந்த அளவுக்குத் திரைக்கதையில் அதனைக் கொண்டிருக்கிறது இப்படம்.

முழு திருப்தி கிடைக்கிறதா?

ஆணவக்கொலையால் நிகழும் அசம்பாவிதங்களை வேறுவிதமாகச் சொல்கிறது ‘சைரன் 108’. கிட்டத்தட்ட பாவெல் நவகீதனின் ‘வி1’ படத்திலும் கூட அந்த பிரச்சனை த்ரில்லர் திரைக்கதையின் ஊடே சொல்லப்பட்டிருந்தது.

முன்பாதி முழுக்க ‘ஹீரோயிசம்’ இருப்பதால், பின்பாதியில் மட்டுமே அந்த விஷயம் முழுதாக வெளிப்படுகிறது. அதனை ஒரு பார்வையாளர் உணர்வதற்கு முன்னரே படம் முடிந்துவிடுகிறது.

இப்படத்தைப் பார்க்கும் ஒருவருக்கு முழு திருப்தி கிடைக்குமா என்றால் பதில் சொல்வது கடினம். அதேநேரத்தில், குடும்பத்தோடு பார்க்கும் அளவுக்குப் பெரிதான வன்முறை, செக்ஸ் காட்சிகள், ஆபாச வசனங்கள் இல்லாமல் இருக்கிறது.

வழக்கமாக, ஜெயம் ரவியின் படங்களைக் குடும்பமாகச் சேர்ந்து பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். அப்படிப்பட்ட ரசிகர்கள் ஆணவக்கொலைகள் இல்லாமல் ஆக வேண்டுமென்ற குரலைச் செவிமடுக்கும் பட்சத்தில் இப்படம் பெரிய வெற்றியைச் சுவைக்கும். அதற்கு லாஜிக் மீறல்களோ, திரைக்கதையில் இருக்கும் சுமாரான திருப்பங்களோ நிச்சயம் தடையாக இருக்காது.

அதைவிட முக்கியமான விஷயம், ஜெயம் ரவி கடந்த ஆண்டில் நடித்த அகிலன், இறைவனை விட இப்படம் நல்லதொரு காட்சியனுபவத்தையே தருகிறது. அது போதும் என்பவர்களுக்கு, ஓகே தரத்தில் ஒரு ‘ஆக்‌ஷன் த்ரில்லர்’ பார்த்த திருப்தியை ‘சைரன் 108’ தரும்!

  • உதய் பாடகலிங்கம்

#சைரன்_108_விமர்சனம் #ஜெயம்_ரவி #யுவினா #பர்தவி #யோகி_பாபு #அழகம்_பெருமாள் #அஜய் #கீர்த்தி_சுரேஷ் #இயக்குனர்_ஆண்டனி_பாக்கியராஜ் #அனுபமா_பரமேஸ்வரன் #சமுத்திரக்கனி #எஸ்_கே_செல்வகுமார் #ஜி_வி_பிரகாஷ் #Jayam_ravi #Siren_108_Review #Keerthy_suresh #antony_pakyaraj #anupama #samuthra_kani #s_k_selvakumar #gv #yuvina #yogibabu

You might also like