பிப்ரவரி 13 – உலக வானொலி தினம்
‘வெள்ளைச்சாமி பாட ஆரம்பிச்சுட்டான்’ என்று வைதேகி காத்திருந்தாள் படத்தில் வரும் வசனம் போன்று, ‘நடமாடும் வானொலி நிலையமாக’ச் சிலர் ஊரை வலம் வந்த காலமொன்று உண்டு.
சென்னை, திருச்சி, மதுரை, சிலோன் என்று ஏதேனும் வானொலி நிலைய ஒலிபரப்பை அலறவிட்டு, தானும் கேட்பதோடு ஊராரும் கேட்கட்டும் என்கிற ரீதியில் பாக்கெட் ரேடியோவை சட்டைப் பையில் அடக்கிக்கொண்டு உலா வருவது அவ்வகை மனிதர்களின் ‘ஹாபி’.
எல்லா ஊரிலும் இது போன்ற ‘ரேடியோ மாமா’க்கள் வெவ்வேறு உருவங்களில் உலவுவார்கள்.
இன்று, அந்த இடத்தை ‘யூடியூப்’ உள்ளிட்ட சில இணையதளங்கள் பிடித்துவிட்டன. தான் பார்ப்பதை, கேட்பதை ஊரே உணரட்டும் என்ற நோக்கில் பொதுவிடங்களில் தங்களது மொபைலில் ‘ஸ்பீக்கர் மோடு’ ஆன் செய்பவர்கள் எல்லாம் அந்த ‘ரேடியோ மாமா’க்களின் இன்னொரு பதிப்பு தான்.
சரி, திடீரென்று எதற்கு இப்படிப்பட்ட மனிதர்களைக் குறித்த பேச்சு என்று கேட்கிறீர்களா? ‘உலக வானொலி தினம்’ குறித்துப் பேசும்போது, அந்த ஊடகத்தை வளர்த்தெடுத்த சில மனிதர்களின் குணாதிசயங்களுக்குச் சிறப்பு சேர்த்தால் தானே ஒரு அர்த்தமிருக்கும்.
உலக வானொலி தினம்!
பிப்ரவரி 13ஆம் தேதியன்று உலகெங்கும் ‘வானொலி தினம்’ கொண்டாடப்படுகிறது. வானொலியின் சிறப்புகளைத் தெரிந்துகொள்வதுடன், அதன் பயன்பாட்டை மேலும் ஊக்குவிப்பதே இக்கொண்டாட்டத்தின் நோக்கம்.
2011ஆம் ஆண்டு யுனெஸ்கோவின் நிர்வாகக் குழுவில் ‘உலக வானொலி தினம்’ கொண்டாடப்படுவது குறித்த தீர்மானம் சேர்க்கப்பட்டது.
அதற்கு முந்தைய ஆண்டு, ஸ்பானிஷ் ரேடியோ அகாடமி அதனை யுனோஸ்கோவிடம் வற்புறுத்தியிருந்தது.
அதன் தொடர்ச்சியாக, 2012ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 13ஆம் தேதியன்று ‘உலக வானொலி தினம்’ கொண்டாட வேண்டுமென்று ஐநா பொதுச்சபையால் முடிவு செய்யப்பட்டது.
1946ஆம் ஆண்டு இதே தினத்தில்தான் ஐ.நா. வானொலி தொடங்கப்பட்டது என்பது இதன் பின்னணியில் உள்ள இன்னொரு தகவல்.
2012 முதல் ஒவ்வொரு ஆண்டும் இத்தினத்தைக் கொண்டாடுவதற்கான கருப்பொருளும் வகுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2024ஆம் ஆண்டுக்கான ‘உலக வானொலி தின’த்திற்கான கருப்பொருள் – வானொலி: தகவல், பொழுதுபோக்கு மற்றும் கல்விக்கான ஒரு நூற்றாண்டு’.
தொழில்நுட்பங்கள் பெரிதாக வளராத காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வானொலி, அப்போது மாபெரும் ஊடகமாகத் திகழ்ந்தது.
தற்போது ஊடகத்துறையில் பல விஸ்வரூப வளர்ச்சிகள் முன்னெடுக்கப்பட்ட பிறகும் கூட, அதற்கான முக்கியத்துவம் கொஞ்சம் கூட மங்கவில்லை. அதுவே வானொலி எனும் சாதனத்தின் சிறப்பு.
இந்தியாவில் வானொலி!
1923ஆம் ஆண்டு ஜுன் மாதம் பம்பாய் ரேடியோ கிளப்பின் மூலமாக இந்தியாவில் முதன்முறையாக வானொலி ஒலிபரப்பு மேற்கொள்ளப்பட்டது. 1927ஆம் ஆண்டு இந்திய ஒலிபரப்பு நிறுவனம் செயல்படத் தொடங்கியது.
1930ஆம் ஆண்டு முதல் இது சோதனை ஒலிபரப்புகளை மேற்கொள்ள ஆரம்பித்தது.
1936ஆம் ஆண்டு, இந்த நிறுவனமானது ‘அகில இந்திய வானொலி’ என்று பெயர் மாற்றத்திற்கு உள்ளானது.
தொடர்ந்து நாடெங்கும் பல இடங்களில் வானொலி நிலையங்களைச் செயல்படுத்தியது.
இந்தியா சுதந்திரமடைந்தபோது, அன்றைய பாகிஸ்தானில் இருந்த பெஷாவர், லாகூர், டாக்கா தவிர்த்து டெல்லி, பம்பாய், கல்கத்தா, மெட்ராஸ், திருச்சி, லக்னோவில் வானொலி நிலையங்கள் செயல்பட்டன. அப்போது 11 சதவிகிதம் மக்களே அந்த ஒலிபரப்பினால் பயனடைந்தனர்.
மேற்கத்திய நாடுகளிலும் கூட, 1940க்கு பின்னரே வானொலி ஒலிபரப்பு வர்த்தகரீதியில் பெரிய வெற்றியைக் கண்டது. அதற்கடுத்த பத்தாண்டுகளில் அந்த இடத்தைத் தொலைக்காட்சி பிடித்துக் கொண்டது.
இந்தியாவைப் பொறுத்தவரை, அரசின் அகில இந்திய வானொலி ஒலிபரப்பானது இன்றும் மக்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டதாக விளங்குகிறது.
பண்பலை அலைவரிசை ஒலிபரப்பில் தனியார் நிறுவனங்கள் புகுந்தபிறகும் கூட, அந்த நிலைமையில் தலைகீழ் மாற்றங்கள் இல்லை.
இன்று, சுமார் 479 வானொலி நிலையங்களை அகிய இந்திய வானொலி செயல்படுத்தி வருகிறது. இவை அந்தந்த வட்டார மக்களுக்குத் தேவையான, தொடர்பான பல தகவல்களை வழங்கி வருகின்றன.
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், கிட்டத்தட்ட 99.19 சதவிகிதம் மக்கள் வானொலி எனும் ஊடகத்தினால் பயன் பெறுகின்றனர். 23 மொழிகளில் இதன் ஒலிபரப்பு அமைந்துள்ளது.
நாட்டின் 92 சதவிகிதம் பரப்பை இது சென்றடைகிறது. தொலைக்காட்சி, தொலைபேசி, இணையம் உட்பட இதர தொலைத்தொடர்பு மற்றும் ஊடகப் பயன்பாடு இல்லாத பகுதிகளையும் சென்றடைந்திருப்பதே வானொலியின் தனித்துவத்தைச் சொல்லும்.
ஆசுவாசம் தரும் நண்பன்!
இரவில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் தொழிலாளர்கள் மத்தியில் வானொலி ஒலிப்பதைக் கேட்கலாம்; தூக்கம் வராமல் இரவோடு உரையாடத் துடிப்பவர்களுக்கு ‘உற்ற நண்பனாய்’ விளங்குவதைக் காணலாம்.
தனிமையைத் தவிர வேறில்லை என்பவர்களுக்கான அருமருந்தாக இருப்பதையும் உணரலாம்.
ஆளரவமற்ற இடங்களில் மட்டுமல்லாமல், கும்பலான மனிதர்களுக்கு இடையே ஆத்மார்த்தமான அமைதியைத் தரவும் வானொலியால் முடியும்.
போக்குவரத்து சிக்னலில் கல்லாய் சமைந்தவர்களுக்கு ஆசுவாசம் தரும் வழிகாட்டியாகவும் நண்பனாகவும் கூட அதனால் செயல்பட முடியும்.
இயற்கைப் பேரிடர்களின்போது மின்சாரமும் தொலைதொடர்பும் அற்றுப்போனாலும் கூட, வானொலி அலைகள் நம் கரங்களில் தவழ்ந்து ஆறுதல் தெரிவிக்கும். அது போன்ற எத்தனையோ தருணங்களில் ’வானொலி’ நமக்குத் தோள் கொடுத்திருக்கிறது.
வானொலியின் நோக்கமே தகவல் அளிப்பது, கற்பிப்பது மற்றும் பொழுதுபோக்கை வழங்குவது தான். அதனை அறிந்தே சில தனியார் பண்பலை நிறுவனங்கள், இன்று பொழுதுபோக்கு அம்சங்களுடன் புதிதாகப் பல தகவல்களை ‘அப்டேட்’ செய்வதையும் முக்கியக் கடமையாகக் கொண்டுள்ளன.
வானொலி கேட்டுக்கொண்டே ஒருவரால் படிக்கவோ, தனிப்பட்ட வேலைகளைச் செய்யவோ, உரையாடவோ முடியும். கேட்கும் மற்றும் புரிந்துகொள்ளும் திறனைச் சோதிக்கவும், அதிகப்படுத்தவும் வானொலி கேட்பது முக்கியமான வழிமுறையாகும்.
வளர்ச்சிக்கான ஆதாரம்!
வளர்ச்சியைச் செயல்படுத்துவதற்கான ஊடகங்களில் மிக எளிதான ஒன்று ‘வானொலி’. அதனாலேயே, தொண்ணூறுகளின் பிற்பாதியில் ’சமூக வானொலிகளை’ முன்னெடுப்பதற்கான முயற்சிகள் இந்தியாவில் நடைபெற்றன.
தற்போது குறிப்பிட்ட சில பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்களில் இந்த அம்சம் முன்னெடுக்கப்படுகிறது.
குறிப்பிட்ட வட்டார மக்களின் பங்களிப்போடு, அங்கு நிகழ்ந்து கொண்டிருக்கிற மற்றும் நிகழ வேண்டிய வளர்ச்சிகள் பற்றி கலந்துரையாடுவதும் திட்டங்களைச் செயற்படுத்துவதுமே இது போன்ற ஒலிபரப்புகளின் அடிப்படை.
குறைந்த செலவில் இந்த ஒலிபரப்பைச் செயல்படுத்த முடியும் என்பது இன்னொரு சிறப்பம்சம்.
‘பாட்காஸ்ட்’ உட்பட நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகள் விஸ்வரூபம் எடுத்தபிறகும்கூட, இன்றும் வானொலி ஒலிபரப்பு தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டு வருகிறது. புதியன புகுத்தலும் பழையன புகுத்தலும் வாய்க்கும்போது மட்டுமே தொடர் இயக்கம் சாத்தியமாகும்.
அந்தவகையில், சில தலைமுறைகளின் அறிவு மேம்பாட்டுக்கு வித்திட்ட வானொலி ஊடகம் தற்போது அடுத்தகட்ட பாய்ச்சலை நோக்கி நகர்கிறது.
எத்தனை வளர்ச்சிகள் வந்தாலும், அவசரகாலத்தில் உதவும் வானொலியோடு என்றும் பயணிப்போம்; அதன் பெருமைகளை என்றென்றும் கொண்டாடுவோம்!
– உதய் பாடகலிங்கம்