மலையாளத் திரைப்படங்களைப் போல நாமும் குடும்பச் சித்திரங்களை எடுக்கலாமே என்ற குரல்கள் அவ்வப்போது நம்மவர்களிடம் இருந்து கேட்கும். டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ந்தபிறகு, கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக மலையாளப் படங்களைப் போல ‘ஸ்டைலிஷான மேக்கிங்’ வேண்டும் என்றும் உரையாடல்கள் தொடங்கியிருக்கின்றன.
இத்தனைக்கும் ‘கொடுத்துப் பெறும் கொள்கை’யின் அடிப்படையில், நம்மூர் சினிமாவில் இருந்து அவர்கள் தாக்கம் பெறுவது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது.
அந்த வரிசையில், காதலைக் கொண்டாட்டத்துடன் திரையில் சொல்லும் ஒரு படைப்பாக அமையுமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது ‘பிரேமலு’ ட்ரெய்லர். சரி, முழுதாகப் படம் பார்த்தபிறகு அந்த எதிர்பார்ப்பு எந்தளவுக்குத் திருப்தியை அடைகிறது?
ஹைதராபாதில் நிகழும் காதல்!
நாம் சார்ந்த மண்ணில் அல்லாமல் வெளியூரில் அல்லது வெளிநாடுகளில் நம்மூர்க்காரர்களைப் பார்த்தவுடன் பாசம் பீறிடும். அதேபாணியில் நிகழும் காதலைச் சொல்கிறது ‘பிரேமலு’. பிரேமம் என்பதுடன் ‘லு’ சேர்த்ததில் இருந்தே, இதில் தெலுங்கு வாசனை கொஞ்சம் உண்டு என அறியலாம். அதற்கேற்ப, இக்கதை ஹைதராபாத்தில் நிகழ்வதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் கதை என்ன?
சேலத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் பயிலும் சச்சின் (நஸ்லென்). கேரளாவைச் சேர்ந்தவர். இவர், நான்காண்டு காலமாக ஒரு மாணவியைக் காதலிக்கிறார். கல்லூரிக்காலம் முடிவடையும்போது, அதனைத் தெரிவிக்கிறார். அந்தப் பெண்ணோ, “நான் உன்னை அப்படி எண்ணவில்லை” என்று சொல்லிவிட்டுச் சென்றுவிடுகிறார். அந்த சோகத்தை சச்சினால் தாங்க முடிவதில்லை.
படிப்பு முடிந்ததும், ஊரில் இருக்கும் தந்தையின் பேக்கரியில் சின்னச்சின்னதாகச் சில வேலைகளைச் செய்கிறார். பிரிட்டன் செல்வதற்கான விசாவுக்கு விண்ணப்பிக்கத் தந்தையிடம் பணம் கேட்கிறார். அவர் ‘இல்லை’ என்று கையை விரிக்கிறார்.
சச்சின் சகோதரியோ, ஊரில் உள்ள ஒரு இளைஞரைக் காதலிக்கிறார். கல்யாணம் செய்துவைக்கப் பெற்றோரிடம் பணம் இல்லை. அது மட்டுமல்லாமல், தந்தைக்கும் தாய்க்கும் இடையே நல்லுறவு அறுந்து ஓராண்டு காலமாகிறது.
இந்த நிலையில், கஷ்டப்பட்டு பணத்திற்கு ஏற்பாடு செய்து விசாவுக்கு விண்ணப்பிக்கிறார் சச்சின். ஆனால், அவருக்கு விசா கிடைக்கவில்லை. ஆறு மாதங்களுக்குப் பிறகே மீண்டும் விண்ணப்பிக்க முடியும் என்ற நிலைமை. அப்போது, தற்செயலாகப் பள்ளிக்கால நண்பன் அமல் டேவிஸை (சந்தோஷ் பிரதாப்) சந்திக்கிறார் சச்சின்.
தன்னுடன் ‘கேட்’ பயிற்சி மையத்தில் சேருமாறு அவரிடம் கூறுகிறார் அமல். ‘அது சரிவருமா’ என்று யோசிக்காமல் ‘ஓகே’ சொல்கிறார் சச்சின்.
ஹைதராபாத் சென்ற சில நாட்களிலேயே, அத்தேர்வுக்கும் தனக்கும் ஒத்துவராது என்பதைப் புரிந்து கொள்கிறார். அதையடுத்து, சென்னையில் இருக்கும் நண்பர்களிடம் சொல்லித் தனக்கொரு வேலை தேடுமாறு கூறுகிறார்.
இந்த நிலையில், அமல் டேவிஸ், சச்சின் இருவரும் ஒரு கல்யாண விழாவில் பங்கேற்கின்றனர். தெலங்கானாவிலுள்ள ஒரு கிராமத்தில் அத்திருமணம் நடைபெறுகிறது. அங்கு, ஹைதராபாத்திலுள்ள ஐடி அலுவலகமொன்றில் பணியாற்றும் ரீனுவைச் (மமிதா பைஜு) சந்திக்கிறார்.
‘அண்ணலும் நோக்கினான்’ என்பதற்கேற்ப முதல் பார்வையிலேயே சச்சின் காதலைக் கக்க, அதனைக் கண்டுகொள்ளாமல் சகஜமாகப் பழகத் தொடங்குகிறார் ரீனு. மெல்ல இருவருக்குள்ளும் நட்பு முளைக்கிறது.
ரீனு மீது சச்சினும், பதிலுக்கு சச்சின் மீது ரீனுவும் அக்கறை காட்டுகின்றனர். அதற்கு இடையூறாக, ரீனுவின் அலுவலக சகா ஆதி (ஷ்யாம் மோகன்) வந்து நிற்கிறார். அதனால், ரீனுவும் ஆதியும் காதலிக்கிறார்களோ என்று தன் மனதில் இருப்பதை வெளிப்படுத்தத் தயங்குகிறார் சச்சின். அதற்கேற்ப, ஆதியும் தனது ‘பொசஸிவ்னெஸ்’ஸை வெளிப்படுத்துகிறார்.
அதன்பிறகு என்னவானது? ரீனுவின் காதலை சச்சின் பெற்றாரா இல்லையா என்று சொல்கிறது ‘பிரேமலு’ படத்தின் மீதிப்பாதி.
காதலிக்கும் காலம்!
காதல் ஜோடிகள் அனைவருமே தன்னிலை மறந்து இளமைக் கொண்டாட்டத்தில் மிதப்பவர்களாகவோ அல்லது ரொம்பவே பக்குவம் நிறைந்தவர்களாகவோ இருப்பது கிடையாது.
’நீங்கள் உங்களது இணையிடம் காதலைத் தெரிவித்தது எப்படி’ என்று கேட்டால், பல ஜோடிகளின் அனுபவங்களில் அபத்தங்கள் நிறைந்திருப்பதைக் காண முடியும். அப்படிப்பட்ட அபத்தங்களை அரங்கேற்றுபவராகவே, இதில் நாயக பாத்திரம் உள்ளது. அதனைத் திறம்படத் திரையில் வெளிப்படுத்தியிருக்கிறார் நஸ்லென்.
‘தண்ணீர் மாதன் தினங்கள்’ படத்தில் நாயகனின் நண்பனாகத் தோன்றிய நஸ்லென், முதன்முறையாக ‘சோலோ ஹீரோ’ அந்தஸ்து பெற்றிருக்கும் படம் இது. பல ரசிகைகளை இப்படம் அவருக்குப் பெற்றுத் தரும்.
போலவே, பல படங்களில் துணை கதாபாத்திரமாக வந்துபோன மமிதா பைஜு இதில் நாயகியாக நடித்துள்ளார். பாலாவின் ‘வணங்கான்’ படத்தில் இவர் உண்டு என்று சொல்லப்படுகிறது.
‘சூப்பர் சரண்யா’ படத்தில் மமிதாவின் பாத்திரத்திற்குக் கிடைத்த புகழே, இன்று அவரை இளைய தலைமுறை கொண்டாடக் காரணமாக உள்ளது. அது போலவே, இதிலும் ‘லைவ்’வான கேரளப் பெண்ணை நம் கண் முன்னே நிறுத்துகிறார்.
மமிதாவின் அழகையும் நடிப்பையும் ஆசை தீர ரசிக்க விரும்புபவர்கள் தாராளமாக ‘பிரேமலு’ ஓடும் தியேட்டர்களில் வரிசையில் நிற்கலாம்.
நாயகனின் பெற்றோர்கள், கல்லூரிக் கால நண்பர்கள், நாயகியின் பெற்றோர்கள், அலுவலக சகாக்கள், அறைவாசிகள், பயிற்சி மைய ஆசிரியர், அவரது உறவினர்கள் என்று இரண்டு டஜனுக்கும் மேற்பட்டோர் இப்படத்தில் தலைகாட்டியுள்ளனர்.
அவர்களில் அமல் டேவிஸாக நடித்துள்ள சங்கீத் பிரதாப்பும், ஆதியாக வரும் ஷ்யாம் மோகனும், கார்த்திகாவாக வரும் அகிலா பார்கவனும் குறிப்பிடத்தக்கவர்களாக விளங்குகின்றனர்.
பின்பாதியின் இறுதியில் சங்கீத் பிரதாப், நஸ்லென் உடன் ஷ்யாம் மோகன் பேசும் காட்சியைப் பார்க்கும்போது, உங்களால் நிச்சயம் வெடிச்சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது.
இவர்களோடு ‘தண்ணீர் மாதன் தினங்கள்’ பட நாயகன் மேத்யூ தாமஸும் இரண்டு காட்சிகளில் வந்து போயிருக்கிறார். ’லியோ’வில் விஜய்யின் மகனாக நடித்தவர் என்றால் தமிழ் ரசிகர்களுக்குத் தெரியும். மேத்யூ வரும் காட்சிகளுக்குக் கிடைக்கும் ஆரவாரமே, அவருக்கான தனிப்பட்ட ரசிகர்களை அடையாளம் காட்டுகிறது.
ஹைதராபாத்தின் அழகைத் திரையில் காண்பித்து உற்சாகத்தில் மூழ்கடிக்கிறார் ஒளிப்பதிவாளர் அஜ்மல் சாபு.
ஒவ்வொரு பிரேமிலும் தெரியும் களங்களை ‘சினிமாத்தனம்’ நிறைந்த அழகுடன் காட்ட உதவியிருக்கிறார் தயாரிப்பு வடிவமைப்பாளர் வினோத் ரவீந்திரன்.
ஆகாஷ் ஜோசப் வர்கீஸின் படத்தொகுப்பில் முன்பாதி சூப்பர். பின்பாதி ஓகே ரகம். காரணம், இரண்டாம் பாதியில் அவர் சில காட்சிகளை வெட்டியெறிந்திருப்பது கதையோட்டத்தில் சில சந்தேகங்களுக்கு வழி வகுக்கிறது.
இசையமைப்பாளர் விஷ்ணு விஜய், இளைய தலைமுறையைக் கவரும்விதமாகப் பாடல்களையும் பின்னணி இசையையும் தந்திருக்கிறார். சில காட்சிகளில் அவரது இசையே நம் மனதை சிரிக்கத் தயார்படுத்திவிடுகிறது.
மலையாளத் திரையுலகில் இன்று உச்சத்தில் இருக்கும் பகத் பாசில், திலேஷ் போத்தன், ஷ்யாம் புஷ்கரன் கூட்டணி இப்படத்தைத் தயாரித்திருக்கிறது.
எல்லா மனிதர்களுக்கும் அவர்களது காதல் பருவம் என்பது ‘பொற்காலம்’ தான். ஆனால், அந்த காலகட்டத்தில் அதனை முழுதாக உணராமல் காதல் வெம்மையில் பொசுங்குவதே பலருக்கு வாய்த்திருக்கும். மிகச்சரியாக அதனைத் திரையில் பிரதிபலிக்கிறது நஸ்லென் – மமிதா ஜோடியின் நடிப்பு.
நம்பிக்கையூட்டும் கலைஞர்கள்!
ஹாலிவுட்டில் ரொமாண்டிக் காமெடி படங்களுக்கென்று தனி இலக்கணங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றியோ, அதனைக் காட்டிலும் ஒருபடி மேலே முன்னேறியோ, உலகெங்கும் அவ்வகைமைப் படங்கள் தயாரிக்கப்படுகின்றன. அந்த வகையில், அந்த இலக்கணங்களை மலையாளப் படங்களின் உள்ளடக்கத்திற்கேற்ப பயன்படுத்தியிருக்கிறது ‘பிரேமலு’.
வழக்கமான காதல் கதை என்றபோதும், அதனைக் கொஞ்சமும் உணரமுடியாத அளவுக்கு பின்னணியை மாற்றிக் காட்டிப் புதிதாக உணரச் செய்கிறது இந்த ‘பிரேமலு’. காதலைக் கொண்டாட்ட மனநிலையோடு அணுக விரும்புபவர்கள், நிச்சயமாக இதனைத் திரும்ப திரும்பப் பார்த்து ரசிப்பார்கள்.
இசையமைப்பாளர் விஷ்ணு விஜய், ஒளிப்பதிவாளர் அஜ்மல் சாபு உட்பட நம்பிக்கையூட்டும் இளங்கலைஞர்களைச் சரியாக ஒருங்கிணைத்து இந்த படத்தைத் தந்திருக்கிறார் இயக்குனர் கிரிஷ் ஏ.டி.
அவர் இதற்கு முன்னர் இயக்கிய ‘தண்ணீர் மாதன் தினங்கள்’, ‘சூப்பர் சரண்யா’ கூட ‘ரொமாண்டிக் காமெடி’ வகைமையில் அமைந்தவை தான். அவற்றைக் கொஞ்சம் கூட நினைவூட்டாத வகையில் இப்படத்தைத் தந்திருப்பதே அவரது திறமைக்குச் சான்று. அந்தவகையில், நம்பிக்கைக்குரிய ஒரு கமர்ஷியல் இயக்குனராகவும் அவர் உருவெடுத்திருக்கிறார்.
காதலர் தினப் பரிசாக ‘பிரேமலு’ தந்திருக்கும் கிரிஷ் ஏ.டி. மற்றும் குழுவினருக்குப் பாராட்டுகள்!
– உதய் பாடகலிங்கம்
#பிரேமலு_விமர்சனம் #நஸ்லென் #சந்தோஷ்_பிரதாப் #மமிதா_பைஜு #ஷ்யாம்_மோகன் #சங்கீத்_பிரதாப் #அகிலா_பார்கவன் #அஜ்மல்_சாபு #வினோத்_ரவீந்திரன் #விஷ்ணு_விஜய் #ஆகாஷ்_ஜோசப்_வர்கீஸ் #பகத்_பாசில் #திலேஷ்_போத்தன் #ஷ்யாம்_புஷ்கரன் #இயக்குனர்_கிரிஷ்_ஏ_டி
#Premalu_movie_review #Naslen #Mamitha #santhosh_pradhap #shyam_mohan #sangeeth_prdhap #akila_barkhavan #ajmal_sabu #vinoth #raveendren #vishnu_vijay #akash_joseph #pakath_fasil #thilesh_pothan #shyam_pushkaran #director_krish_A_D